Friday, January 6, 2023

திருநெல்வேலி டூ தென்காசி ஜில்லா..

குளக்கட்டாக்குறிச்சி ஊரானது 2019ம் வருடம், டிசம்பர் மாதம் வரையிலும் திருநெல்வேலி ஜில்லாவிலே இருந்து பசுமை வளங்கள் பூத்துக் குலுங்கும் தென்காசி ஜில்லாவிற்கு நிர்வாக ரீதியாக மாற்றம் கண்டது. தென்காசி ஜில்லாவிற்கு மாற்றப் போகிறோம் என்று பொதுமக்களிடம் எந்த ஒரு கருத்துக் கணிப்புகளையும் கேட்கவுமில்லை, இது குறித்தான அறிவிப்பையும் வெளியிடவில்லை. குற்றாலம் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் பாசன நீரினைக் கொண்டு தென்காசி நகரிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஆயிரக்கணக்கான ஊர்களில் விவசாயம் அமோகமாக நடைபெறுவதுபோல.. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட சங்கரன்கோவில் நகரிலிருந்து கடைக்கோடியில் உள்ள குளக்கட்டாக்குறிச்சி ஊரிலுள்ள கரிசல் பூமியானது, பருவ மழையினை நம்பி விவசாயம் நடைபெறும் பகுதி என்பதை பார்க்கிறோம். 

மத்திய அரசாங்கம் விவசாய பெருமக்களுக்கு வழங்கும் இன்சூரன்ஸ் நிதியானது தென்காசி மாவட்டத்திற்கு மாறிய பிறகு கிடைப்பது இல்லை. கரிசல் பூமியில் விவசாயம் செய்யும் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு இப்போது உள்ள இளைய தலைமுறையில் எவருமே இல்லை. இந்த ஏழை, எளிய மக்களுக்கு வழி நடத்திச் செல்ல ஒரு தலைமை இருந்தால் மட்டுமே போராட்டங்களில் பங்கு கொள்ள வருவார்கள். அரசியலில் பெரிய பதவிகளை வகித்தவர்கள், மக்களுக்கான நிதியை பெற்றுக் கொடுப்பதில் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை என்பதை எனக்கு நினைவு தெரிந்து கடந்த முப்பது வருட காலங்களில் பார்த்தாகி விட்டது.

குளக்கட்டாக்குறிச்சி ஊரானது திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும்போது 2014ம் வருடம், ஜூன் 9 தினமாக.. மத நல்லிணக்க விருதினை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் அவர்களிடமிருந்து பெற்றது. கிராமப்புற மேம்பாட்டு நிதியாக பத்து லட்சம் ரூபாயினை பெற்றுக் கொண்ட பொற்காலமாக அமைந்த பின்பு நான்கு வருடங்களில் தென்காசி ஜில்லாவிற்கு மாறியது. 

தென்காசி ஊரிலுள்ள உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதரின் ஆன்மீகப் பேராற்றலே கடைக்கோடி ஊரான குளக்கட்டாக்குறிச்சி ஊரினை சுவீகரம் செய்து கொண்டதாக எண்ணி ஓம் நமசிவாய.. எனும் மந்திரம் சொல்லி பரவசமானது.

No comments:

Post a Comment