Thursday, November 23, 2023

அக்கினி சட்டி ஊர்வலம்.. 2014ம் வருடம்..

ஒன்பது வருடங்களுக்கு முன்பு ஜூலை 29 அன்று குளக்கட்டாக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற காளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நாளன்று, சப்பரத்தில் தெய்வம் காளியம்மனின் வீதி உலாவுடன், ஜோசியர் ராஜேந்திரன் அக்கினி சட்டியை ஏந்தி வரும் வேளையில் எடுத்த வீடியோ காணொளி. புதிய நூற்றாண்டு தொடங்கிய மூன்று வருடங்கள் பிறகு 2003ம் ஆண்டு தொடங்கி காளியம்மன் கோவில் திருவிழாவில் ஜோசியர் ராஜேந்திரன் அக்கினி சட்டியை ஏந்தி வலம் வருவதை அண்ணன் ராஜேந்திரன் அவர்களே சொல்லி அறிந்தது. தனது இருபது வயதில் ஜோதிட சாஸ்திரங்களை கற்றுக் கொள்ளத் தொடங்கி இருபத்தி ஏழு வயதில் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்று சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, அமெரிக்கா என அந்த நாட்டில் வசிக்கும் நண்பர்களின் அழைப்பை ஏற்று அந்த நாடுகளுக்குச் சென்று ஜோசியம் சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றவர். இந்த வலைப்பூவிற்காக பதிவு செய்த வீடியோ காணொளியை இன்று பார்ப்பதற்கே பிரமிப்பாக உள்ளது. 

Wednesday, November 22, 2023

பரசுராமரின் சுதர்சன சக்கரம்..

மஹாவிஷ்ணு, துவாபர யுகதத்தில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் செய்தபோது அப்போது நிலவிய அக்கிரமங்களுக்கு எதிராக யுத்தம் செய்து தர்மத்தை காக்க பரசுராமரிடமிருந்து சுதர்சன சக்கரத்தை வரமாகப் பெற்றார். தற்போது நடக்கும் காலம் பொய்யும், புரட்டுகளும் வானுயர்ந்து நிற்கும் கலிகாலம் எனும் கலியுகம் என்று சொல்லப்படுகிற வேளை.. நாம் உபயோகிக்கும் முகநூலை ஸ்ரீகிருஷ்ணரின் சுதர்சன சக்கரம் போன்று அக்கிரமங்கள், அநியாயங்களை நோக்கி சுழலச் செய்ய முடியுமா..? என திருவானைக்காவல் ஊரில் தண்ணீர் ஸ்தலமாக அமைந்த பரமேஸ்வரனுடைய ஜம்புகேஸ்வரர் கோவிலில் விஷ்ணு, லட்சுமி சஹஸ்ர நாமம் பாடிய பக்தரிடம் கேட்டபோது, பரமேஸ்வரனுடைய பரிபூரண ஆன்மீகப் பேராற்றாலை நாம் பெறுகிற பட்சத்தில் அனைத்துமே சாத்தியம் என்றபோது, ஆச்சரியமாக இருந்தது.


பரசுராமரை போன்று புஜபலம் கொண்ட கோவை நகரில் வசிக்கும் நண்பரை புகைப்படம் காட்டி பக்தரிடம் சொன்னபோது, இந்த நண்பர் அச்சு அசலாக விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரை போன்றே இருக்கிறார் எனச் சொன்னபோது, ஓம் நமசிவாய.. என்றது. இந்த சிவனுடைய பக்தர், மஹாவிஷ்ணுவிற்கும் பரம பக்தனாக இருக்கிறேன் எனச் சொன்னார். 

Saturday, November 11, 2023

மேக்ஸ்வெல் மேஜிக்..

கிருபானந்தா வாரியார் சுவாமிகள் நினைவு தினமாக.. நவம்பர் 7.. உலககோப்பை கிரிக்கெட் லீக் போட்டியின் 39வது போட்டி மும்பை நகரிலுள்ள வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே பகலிரவு நடைபெறும் வேளை, முன்தினம் தென்காசி நகரிலுள்ள காசிவிஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று வந்த களைப்புடன் உறங்கியது. மாலை ஏழு மணிபோல கிரிக்கெட் போட்டியின் ஐந்து ஓவர்களை பார்த்த பின்பு மீண்டும் உறங்கியது, எழுந்திருக்க இயலவில்லை. ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்களை விளாசி ஆப்கானிஸ்தான் அணியை வென்று வாகைசூடி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று சரித்திரம் படைத்திருப்பதை மறுநாள் காலை வேளை பார்த்த கணம் பிரமிக்கச் செய்தது.


சாராயம் எனும் மது அரக்கனுக்கு எதிராக கலிங்கப்பட்டி ஊரில் போராட்டங்களை நடத்தி புரட்சி எனும் சங்கநாதம் செய்த தாய் மாரியம்மாள் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினமாக, தென்காசி நகரிலுள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் உலகம்மன் சமேத காசிவிஸ்வநாதரை தரிசனம் செய்த பிறகு கோவிலின் வானுயர்ந்த கோபுரத்தின் மையப் பகுதியில் பாசுபதாஸ்திரம் பெறுவதற்காக பரமேஸ்வரனை நோக்கி கடுமையான தவத்தினை புரியும் "அர்ஜுனன் தபசு" சிற்பத்தினை மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பாடி தரிசனம் செய்தபோது, ஆயிரம் மடங்கு யானை பலம் கிடைக்கப் பெற்ற சூப்பர் நேச்சுரல் பவரினை அகத்தில் உணர்ந்த வேளை.. மறுதினம் மேக்ஸ்வெல்லின் பேட்டிங்கில் ஆயிரம் மடங்கு யானை பலத்தினை கண்டு பிரமித்தது.


திறமையான பேட்ஸ்மேன், பவுலரான மிட்செல் ஸ்டார்க் 18.3 ஓவரின் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய பின்பு களமிறங்கிய வலக்கை பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 128 பந்துகளை எதிர்கொண்டு 21 ஃபோர்கள், பத்து சிக்ஸர்களை அடித்தபோது உடலின் சதை பாகங்களில் பிடிப்பு ஏற்படும் வலியால் துன்பத்துடன் போராடி விளையாடி 201 ரன்களை விளாசி ஆஸ்திரேலியா அணியை செமி ஃபைனலுக்கு அழைத்துச் சென்றதை ஹாட்ஸ்டார் டிவியில் ரிப்ளை மேட்சாக முழுவதுமாக பார்த்தபோது, காசிவிஸ்வநாதர் கோவிலின் வானுயர்ந்த கோபுரத்தின் மையப் பகுதியிலுள்ள அர்ஜுனன் தபசு சிற்பத்தின் வல்லமையை கண்டு பிரமிக்கச் செய்தது.  ஓம் நமசிவாய..

Friday, November 10, 2023

அர்ஜுனன் தபஸு சிற்பம்..

நவம்பர் 5 தினமாக பெருமழை பெய்தது. மறுநாள், வானம் தெளிவாக சூரியனின் தரிசனமுடன் காட்சி தந்த வேளை, மழை பெரிதாக பெய்யாது என்று நினைத்து தென்காசி நகரிலுள்ள புகழ்பெற்ற உலகம்மன் சமேத காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு விஜயமாக கழுகுமலை ஊரிலிருந்து பஸ்ஸில் பயணமாக சென்று தென்காசி புறநகரிலுள்ள புதிய பஸ் நிலையத்தில் இறங்கியபோது, மேகங்கள் குபுகுபுவென இருட்டிக் கொண்டு வந்தது. அருகிலுள்ள உணவகத்தில் காரமுடன் டீ குடித்துவிட்டு பஸ் நிலையம் வந்தபோது, அரை மணி நேரம் பெருமழை பெய்து சரியான மழை என இரண்டு பேர் சொல்ல.. பெரிய மழை என தெரிந்தது. பஸ் ஏறி பழைய பஸ் நிலையம் சென்று பொடி நடையாக காசிவிஸ்வநாதர் கோவிலுக்குச் சென்றது. 


நவம்பர் 6 திங்கள், கலிங்கப்பட்டி ஊரில் வாழ்ந்து மறைந்த தாய் மாரியம்மாள் அவர்களின் நினைவு தினம் என்பதை, இடிமுழக்கமுடன் பெய்யும் மழையே குறிப்பால் உணர்த்தியது. காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு பல முறை வந்திருந்தாலும் இம்முறை அர்ஜுனன் தபஸு சிற்பத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது. ஆரல்வாய்மொழி ஊரிலுள்ள கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்த காக்கும் பெருமாள் எழுதிய திருவட்டாறு @ஆதிகேசவ பெருமாள் கோவில் நூலில் "அர்ஜுனன் தபஸு" சிற்பம் குறித்து புகைப்படமுடன் எழுதிய குறிப்புகள் ஏற்படுத்திய தாக்கம், பரமேஸ்வரன் கோவில்களில் இந்த சிற்பத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆவலினை உருவாக்கியது. கோவிலுக்கு உள்ளே விஜயமாகி காசிவிஸ்வநாதர், உலகம்மன், சோமாஸ்கந்த முருகனுடன், அறுபத்து மூன்று நாயன்மார்களை தரிசனம் செய்த பின்பு கோவிலில் உள்ள தூண்களில் பார்க்கையில், அர்ஜுனன் தபஸு சிற்பம் எங்குமே தென்படவில்லை. 


கோவிலின் வலதுபுறமாக உள்ள காலபைரவர், பராசக்தி பீடம், வீரகண்ட விந்தயனார் சித்தர் கோவில், மதுரை மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் போன்ற கடவுள்களை தரிசனம் செய்து வானுயர்ந்த கோபுரத்தின் மையப் பகுதிக்கு வந்தபோது, பெருமழை பெய்யத் தொடங்கி அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்து கொண்டே இருந்தது. மழை பெய்த வேளையில்.. நின்று கொண்டு இருந்த இடத்திலிருந்து பின்னால் திரும்பி பார்க்கையில், பரமேஸ்வரனிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெறுவதற்காக கடுமையான தவத்தினை புரியும் அர்ஜுனன் தபஸு சிற்பத்தினை கண்டு பிரமிக்கச் செய்தது. குந்தியின் மகனான அர்ஜுனனின் காலுக்கு அடியில் ஒரு பன்றி இருக்கும். இதுவே, இந்த சிற்பத்திற்கு ஒரு அழகினையும் பிரமிப்பை காட்டும். மழை நின்றபாடில்லை. மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஓம் நமசிவாய.. என்று சொல்லி, கோபுரத்தின் மையப் பகுதியிலிருந்து கிளம்பியது. 

மழை நின்றபாடில்லை. விடிய விடிய சிறு மழையாக, மிதமான மழையாக பெய்து கொண்டே இருந்தது. காலை வேளை ஊருக்கு வந்தது. அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பரில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் லீக் ஆட்டங்கள் நடந்து கொண்டு இருந்தது, ஒரு சிறப்பம்சமாகும்.