Sunday, September 2, 2012

நமது கிராமம் குளக்கட்டாகுறிச்சி @வலைப்பூ உருவாக்க முக்கிய காரணம் என்னவெனில்..

குளக்கட்டாகுறிச்சி கிராமம் ~ திருநெல்வேலி மாவட்டம் ~ சங்கரன்கோவில் தாலுகா ~ குருவிகுளம் யூனியன் பஞ்சாயத்து - கழுகுமலையிலிருந்து 08 கி.மீ ~ கோவில்பட்டியிலிருந்து 18 கி.மீ ~ நடுவப்பட்டியிலிருந்து 04 கி.மீ.. 

ஒவ்வொரு நாட்டிற்கும் பல மகத்தான வரலாறு உள்ளது. நாட்டிலுள்ள மாநிலத்திற்கும், மாநிலத்திலுள்ள ஒவ்வொரு ஊருக்கும் பல சிறப்புகள் உள்ளது. அப்படி பார்க்கும்போது நமது குளக்கட்டாகுறிச்சி கிராமத்திற்கும் பல பெருமைகள் உள்ளது.   


இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் பல்வேறு விதமான வேலை வாய்ப்புகளும், தொழிற்சாலைகளும் உருவாகியுள்ளன. நான் பிறந்தது 1982ம் வருடம். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நமது ஊருக்கு போக்குவரத்து வசதிகள் அதிகமாக கிடையாது. கல்வி கற்க வேண்டுமென்றால் உள்ளூரில்தான் படிக்க வேண்டும். இல்லையென்றால் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும். 1987ல் ஊரில் அனைத்து குடும்பங்களும் விவசாய வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டிருப்பார்கள். ஊரில் என்னைப் போன்ற சிறுவயது இளைஞர்கள் முப்பது பேருக்கு மேல் இருப்போம். எந்தவித சாதி பாகுபாடுமின்றி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நீச்சல், சில்லாங்குசி, கள்ளன்-போலீஸ், கிரிக்கெட், கபடி விளையாட்டுக்கள் விளையாடி ஊரையே அமர்க்களப்படுத்துவோம். அப்போதைய 1988ம் ஆண்டுகளில் ஊரில் கள்ளசாராய விற்பனை அமோகமாக நடக்கும். அதை குடிப்பவர்களை வேண்டா வெறுப்பாக பார்ப்போம். அப்போது தொலைக்காட்சி பெட்டி ஊர் பஞ்சாயத்தில் (மடம்) மட்டுமே இருக்கும். அதில் சினிமா படம் பார்க்க ஊரே கூடிவிடும். அன்றைய காலகட்டத்தில் வருடத்திற்கு ஒருமுறை தமிழகமெங்கும் ஊர் மக்களை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு பூசாரி என்பவர் இருந்தார். சுற்றுலா சென்ற காலமெல்லாம் எங்கள் சிறுவயது வசந்த காலங்கள்.

1990களில் விவசாயம் அமோகமாக நடைபெற்றது. நமது ஊரின் தொழிலாளர்கள் தன்னலமின்றி விவசாயம் செழிக்க பாடுபட்டார்கள். நமது ஊரின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல சிறப்புகள், பாரம்பரியங்கள் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் பாரம்பரியத்தையும் எதிர்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய மிகபெரிய ஆவல்.

வேகமாக மாறி வரும் இன்றைய சூழ்நிலையில் பல குடும்பங்கள், பல ஊர்களுக்குச் சென்று  குடியேறி விட்டார்கள். வேலை நிமித்தமாக அவர்களால் ஊருக்கு அடிக்கடி வரமுடிவதில்லை. அப்படியே அவர்கள் வந்தாலும், அவர்கள் குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கு ஊரை பற்றியும், ஊரிலுள்ள மக்களை பற்றியும் தெரிய வாய்ப்பு குறைவுதான். நமது கிராமத்தைப் பற்றி பல குடும்பளுக்கும், நமது கிராமத்தின் மீது பற்றுதலை உருவாக்குவதே இந்த இணையதளத்தின் முக்கிய நோக்கம்.

நமது கிராமத்தை நான் அதிகமாக நேசிப்பதுபோல, கிராமத்தின் மக்களையும் நேசிக்கிறேன். அதேபோல், நாம் வாழும் இந்த இந்திய தேசத்திற்கும் மகத்தான பல நற்காரியங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என்னுள் உள்ளது. சமூக மாற்றத்தின் மீது அதிக ஈடுபாடு உண்டு. ஒரு நாட்டின் முதுகெலும்பே கிராமங்களில்தான் உள்ளது என்று  தேசப்பிதா மாகாத்மா காந்தி கூறியிருக்கிறார். கிராமங்களிலும் காலாச்சாரம், பண்பாடு உள்ளது. இதை வேறு எங்குமே காண முடியாது. நமது கிராமத்திலிருந்து பல பெரிய மனிதர்களும், இப்போதுள்ள இளைஞர்களும் நமது இந்திய தேசத்திற்காக, இந்திய ராணுவத்தில் சேர்ந்து அவர்கள் வாழ்க்கையையே தியாகம் செய்வதை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது.

கனகராஜ், கற்பகராஜ், ஹரிகேசவன், விக்னேஸ்வரன், சீனிவாசகன் மேலும் சில பேர் தற்போது இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். நமது கிராமத்தில் பிறந்த சீனிவாசன் நாயக்கர் அவர்கள், இந்திய ராணுவத்தில் 36 வருடங்களுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். அவர் ராணுவத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். தற்சமயம் நமது கிராமத்திலேயே வசித்து வருகிறார். 

ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால், மது என்னும் கொடிய அரக்கனின் பிடியிலிருந்து, மது அருந்துபவர்கள் விடுதலை அடைய வேண்டும். தனி மனிதனுக்கு மது எனும் பானம் தரும் இன்பம், கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பவரையும், அவர்கள் சார்ந்த குடும்பத்தையுமே முற்றிலுமாக சர்வநாசம் செய்து அழிக்கக்கூடியது.

சாதிப் பாகுபாடற்ற கிராமமாக, குளக்கட்டாகுறிச்சி கிராமம் உருவாக வேண்டும் என்பது என்னை போன்ற பல இளைஞர்களுடைய ஆவல்.

இன்றைய சூழ்நிலையில் நமது ஊரிலிருந்து பல இளைஞர்கள் கணிப்பொறி வல்லுநர்களாகவும், பொறியியல் வல்லுநர்களாகவும் உருவாகி இருக்கிறார்கள். அவர்களெல்லாம் சேர்ந்து நமது கிராமத்திற்கு வருங்கால சந்ததிகள் அரசாங்க பதவிகளுக்கு வரக்கூடிய அளவிற்கு கல்வி கற்க நூலகங்கள் கட்டித்தரவேண்டும். ஒவ்வொரு ஏழை மாணவனும் கல்வி கற்கும் பொருளாதாரச் சூழ்நிலைகள் உருவாக வேண்டும்.

நமது ஊரின் ஒவ்வொரு சாராசரி மனிதருக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை இந்த இணையதளத்தில் கொண்டு வருவது இனிவரும் நாட்களில் என்னைப் போன்ற இளைஞர்களின் செயல்பாடாக இருக்கும்.

இந்த இணையதளத்தை உருவாக்குவது பற்றி நேரிலும், அலைபேசியிலும் சிலரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது மகத்தான ஒத்துழைப்பு நல்குவதாக உறுதியளித்தார்கள். நான் ஒருவன் மட்டுமே இந்த மாபெரும் பணியை செய்யப்போவதில்லை. ஆர்வமுள்ள அனைவருமே இதில் பங்கெடுத்துக் கொண்டு சீரிய பணியாற்றுவார்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலுள்ள இறந்து போனவர்களின் புகைப்படங்களை சேகரித்து அவர்கள் நமது கிராமத்திற்கு செய்த நற்க்காரியங்களை அனைவரும் தெரிந்துகொள்ள வகை செய்வது சிறப்புக்குரிய அம்சமாகும். நான் சில பெரியவர்களிடம் அலைபேசியில் அழைத்து பேசியபிறகு.. அவர்களது அனுபவங்களை எழுதத் தொடங்கி விட்டார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விசயமாகும்.

ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியிருக் காவிட்டால்.. அவரது பெருமையை உலகம் அறிந்திருக் காது. சுவாமி விவேகானந்தர் அவர்கள்.. நமது இந்திய தேசத்தின் பெருமையை உலகமறிய செய்திருக்க வேறு யாராலும் அந்த காலகட்டத்தில் முடிந்திருக்காது. இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், 2013ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் அவர்களின் 150 வது பிறந்த வருடமாகும்.

வரலாறு என்பது நமக்கு மிகப்பெரிய படிப்பினையை உணர்தக்கூடிய  பொக்கிஷமாகும்இன்றைய சூழ்நிலையில், பெரியவர்களிடம் அன்பு, பரிவு, பாசம் குறைந்து வருகிறது. இவையெல்லாம் மாறவேண்டும். அடுத்த பத்து, பதினைந்து வருடத்திற்குள் இந்திய அரசாங்கத்தில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் உருவாகவேண்டும். படித்து வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, நமது கிராமத்தை யாரும் மறந்துவிடக்கூடாது என்பதை உணர்த்துவதும் இந்த இணையதள உருவாக்கத்தின் முக்கிய நோக்கம்.

நமது கிராமத்து பிள்ளைகள் கற்க கூடிய கல்வியானது மனித குல முன்னேற்றத்திற்கும், நாம் வாழும் தேசத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைய வேண்டும். வெறும் பணம் சம்பாதித்து, ஆடம்பரமாக தனக்காக மட்டுமே வாழும் வாழ்க்கையை நமது கிராமத்து பிள்ளைகள் எண்ணக்கூடாது.

நாம் வாழும் சமூகத்தில் பாறைகளாக புரையோடிப்போன பழமைகளை உடைத்தெறிந்து, புதிய கருத்துக்கள், புதிய சிந்தனைகள், புதிய சித்தாந்தங்களை நமது கிராமத்து இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த இணையதளத்தின் நோக்கம். நமது ஊரில் உருவாகப் போகும் எதிர்கால சந்ததிகளுக்கு நமது வாழ்க்கை, நமது கலாச்சாரம், நமது பண்பாடு ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்பதே இந்த இணையதளத்தின் முக்கிய அம்சம்.

இதைப்போல, நமது ஊர் மக்களின் ஒவ்வொருவரின் மலரும் நினைவுகள் தொடரும்...

செந்தில்குமார்..
குளக்கட்டாகுறிச்சி
 02.09.2012