Sunday, March 10, 2024

மக்காச்சோளம் அறுவடை..

மக்காச்சோள பயிரில் மகரந்த சேர்க்கை நடைபெறும் டிசம்பர் மாதம் காலத்தில் ஒரே நாளில் சுமார் இருபது மணி நேரம் பெருமழை பெய்த காரணத்தால் மாசி மாதம் நடைபெறும் அறுவடையில் ஏக்கருக்கு பத்து, பதினைந்து, இருபது குவிண்டால் அளவுக்கு மட்டுமே விவசாயிகளுக்கு மகசூல் கிடைத்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஏக்கருக்கு இருபத்தைந்திலிருந்து முப்பது குவிண்டால் வரையில் மக்காச்சோள பயிறு மகசூல் கிடைத்தது. இன்றைய வருடம் குவிண்டாலுக்கு ரூபாய் 2250, 2150 என மக்காச்சோள பயிரின் தரத்தை பொறுத்து இடைத் தரகர்களான வியாபாரிகள் விலைக்கு வாங்குகின்றனர். மார்க்கெட்டில் என்ன விலையோ அந்த விலைக்கு இடைத் தரகர்கள் வாங்குகின்றனர். திடீரென ஏதேனும் ஒரு நாள் மட்டும் குவிண்டாலின் விலையை அதிகரித்து வேண்டியவர்களிடம் பயிறுகளை வாங்கும் நிகழ்வும் நடக்கிறது. 2020ம் ஆண்டில் இப்படியான ரகசிய பேரத்தில் ஒரு வாரம் இடைவெளியில் நாற்பதாயிரம் ரூபாய்க்கு என்னுடைய குடும்பத்திற்கு நஸ்டம் ஏற்பட்டது. கடந்த நான்கு வருடங்களாக விவசாயம் செய்யாத காரணத்தால் இந்த இடைத் தரகர்களின் வியாபார உத்திகளால் எனக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.