Sunday, December 24, 2023

இரங்கல்..

வைகுண்ட ஏகாதாசி தினமான இன்று, டிசம்பர் 23.. பிற்பகலில் முருகனுடைய அப்பா மாரிச்சாமி சிவபதவி அடைந்தார். காளியம்மன் கோவில் விழாவில் கருப்பசாமி வேடம் பூண்டு சாமி ஆடுவார். சில வருடங்களில் அய்யனார் சாமி வேடம் பூண்டு சாமி ஆடியதை பார்த்து பிரமித்த நாட்களும் உண்டு. மாரிச்சாமி அவர்களின் வயது அறுபத்து எட்டு என மகன் முருகன் சொன்னான். மறுதினம் டிசம்பர் 24.. நடுப்பகல் சூரிய வெளிச்சம் அடிக்கும் நண்பகலில் மாரிச்சாமியின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது. மாரிச்சாமிக்கு இரண்டு மகள், ஒரு பையன் என ஒரு மகிழ்ச்சியான குடும்பத்துடன் வாழ்ந்து சிவபதவி அடைந்தார்.

Wednesday, December 20, 2023

டிசம்பர் 17 பெருமழை..

டிசம்பர் 17 தினம் தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் மாவட்டங்களில் அதிகமான கன மழை பெய்யும் என மெட்ராஸ் நகரிலுள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு செய்த பின்பு டிசம்பர் 17 காலை வேளை மேகம் கும்மிருட்டுபோல மூடியிருந்தது. நண்பகல் வேலை சரியாக பன்னிரெண்டு மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை, பெருமழையாக மறுநாள் காலை சரியாக எட்டு மணி வரையிலும் பெய்து வரலாறு படைத்தது. ஊரில் பதினைந்து வருடங்களுக்கு முன்பு நிரம்பிய குளம், இந்த பெருமழையில் குளம் முழுமையாக நிரம்பி மாறுகால் சென்றது. ராமேஸ்வரம் ஊரில் அப்துல்கலாம் அவர்கள் குழந்தையாக பிறந்த 1931ம் ஆண்டில் இத்தகைய பெருமழை பெய்ததாக இணையத்தில் செய்தி வெளியானது.  

2019ம் வருடம், நான் சென்னை நகரில் பணி புரிந்தபோது 2020ம் வருடம் ஜனவரி தினமாக கிண்டி அருகே பரங்கிமலையில் உள்ள தோமையார் தேவாலயத்திற்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. போர்ச்சுகீசியர்களால் தோமையார் தேவாலயம் கட்டப்பட்டு 1523ம் வருடம் திறப்பு விழா கண்டதை தேவாலயம் உள்ளே செல்கையில் தூணில் எழுதியதிலிருந்து பார்த்த வேளை, ஐநூறு வருடங்களை அடைய மூன்று வருடங்களே இருந்தது. 2023ம் ஆண்டு தோமையார் தேவாலயம் கட்டப்பட்டு ஐநூறு ஆண்டுகளை எட்டிய டிசம்பர் 17 தினமாக பெருமழை பெய்யத் தொடங்கி மறுதினமான டிசம்பர் 18 அதிகாலை மழை முழுமையாக நின்றுபோனதை காணும்போது, இறைவனின் பெரும் ரகசியம்போல இருந்தது.

தோமையாரின் அருளீக்கம், தோமையார் கல்லில் செதுக்கி வழிபட்ட கற்சிலுவை, ரத்தம் கசியும் சிலுவை என அழைக்கப்படுகிறது. ரத்தம் கசியும் சிலுவையில் 1551ம் வருடம் தொடங்கி 1704ம் ஆண்டு வரையிலான 153 வருடங்களில் டிசம்பர் 18 நாளில் ரத்தம் கசிந்ததற்கான சான்றுகள் இருப்பதை தேவாலயத்தில் உள்ள கல்வெட்டு குறிப்புகளில் பார்க்க முடிந்தது.

சென்னை நகருக்கு கடந்த வருடம், டிசம்பர் மாதம் சென்றபோது திருவொற்றியூர் கடற்கரை அருகே அமைந்துள்ள பட்டினத்தார் கோவிலுக்கு விஜயமாகி பட்டினத்தார் சித்தரை தரிசனம் செய்து மகிழ்ந்த நினைவுகள், இன்று வரையிலும் மகிழ்ச்சி அளிக்கிறது.