Sunday, December 24, 2023

இரங்கல்..

வைகுண்ட ஏகாதாசி தினமான இன்று, டிசம்பர் 23.. பிற்பகலில் முருகனுடைய அப்பா மாரிச்சாமி சிவபதவி அடைந்தார். காளியம்மன் கோவில் விழாவில் கருப்பசாமி வேடம் பூண்டு சாமி ஆடுவார். சில வருடங்களில் அய்யனார் சாமி வேடம் பூண்டு சாமி ஆடியதை பார்த்து பிரமித்த நாட்களும் உண்டு. மாரிச்சாமி அவர்களின் வயது அறுபத்து எட்டு என மகன் முருகன் சொன்னான். மறுதினம் டிசம்பர் 24.. நடுப்பகல் சூரிய வெளிச்சம் அடிக்கும் நண்பகலில் மாரிச்சாமியின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது. மாரிச்சாமிக்கு இரண்டு மகள், ஒரு பையன் என ஒரு மகிழ்ச்சியான குடும்பத்துடன் வாழ்ந்து சிவபதவி அடைந்தார்.

Wednesday, December 20, 2023

டிசம்பர் 17 பெருமழை..

டிசம்பர் 17 தினம் தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் மாவட்டங்களில் அதிகமான கன மழை பெய்யும் என மெட்ராஸ் நகரிலுள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு செய்த பின்பு டிசம்பர் 17 காலை வேளை மேகம் கும்மிருட்டுபோல மூடியிருந்தது. நண்பகல் வேலை சரியாக பன்னிரெண்டு மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை, பெருமழையாக மறுநாள் காலை சரியாக எட்டு மணி வரையிலும் பெய்து வரலாறு படைத்தது. ஊரில் பதினைந்து வருடங்களுக்கு முன்பு நிரம்பிய குளம், இந்த பெருமழையில் குளம் முழுமையாக நிரம்பி மாறுகால் சென்றது. ராமேஸ்வரம் ஊரில் அப்துல்கலாம் அவர்கள் குழந்தையாக பிறந்த 1931ம் ஆண்டில் இத்தகைய பெருமழை பெய்ததாக இணையத்தில் செய்தி வெளியானது.  

2019ம் வருடம், நான் சென்னை நகரில் பணி புரிந்தபோது 2020ம் வருடம் ஜனவரி தினமாக கிண்டி அருகே பரங்கிமலையில் உள்ள தோமையார் தேவாலயத்திற்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. போர்ச்சுகீசியர்களால் தோமையார் தேவாலயம் கட்டப்பட்டு 1523ம் வருடம் திறப்பு விழா கண்டதை தேவாலயம் உள்ளே செல்கையில் தூணில் எழுதியதிலிருந்து பார்த்த வேளை, ஐநூறு வருடங்களை அடைய மூன்று வருடங்களே இருந்தது. 2023ம் ஆண்டு தோமையார் தேவாலயம் கட்டப்பட்டு ஐநூறு ஆண்டுகளை எட்டிய டிசம்பர் 17 தினமாக பெருமழை பெய்யத் தொடங்கி மறுதினமான டிசம்பர் 18 அதிகாலை மழை முழுமையாக நின்றுபோனதை காணும்போது, இறைவனின் பெரும் ரகசியம்போல இருந்தது.

தோமையாரின் அருளீக்கம், தோமையார் கல்லில் செதுக்கி வழிபட்ட கற்சிலுவை, ரத்தம் கசியும் சிலுவை என அழைக்கப்படுகிறது. ரத்தம் கசியும் சிலுவையில் 1551ம் வருடம் தொடங்கி 1704ம் ஆண்டு வரையிலான 153 வருடங்களில் டிசம்பர் 18 நாளில் ரத்தம் கசிந்ததற்கான சான்றுகள் இருப்பதை தேவாலயத்தில் உள்ள கல்வெட்டு குறிப்புகளில் பார்க்க முடிந்தது.

சென்னை நகருக்கு கடந்த வருடம், டிசம்பர் மாதம் சென்றபோது திருவொற்றியூர் கடற்கரை அருகே அமைந்துள்ள பட்டினத்தார் கோவிலுக்கு விஜயமாகி பட்டினத்தார் சித்தரை தரிசனம் செய்து மகிழ்ந்த நினைவுகள், இன்று வரையிலும் மகிழ்ச்சி அளிக்கிறது.

Thursday, November 23, 2023

அக்கினி சட்டி ஊர்வலம்.. 2014ம் வருடம்..

ஒன்பது வருடங்களுக்கு முன்பு ஜூலை 29 அன்று குளக்கட்டாக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற காளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நாளன்று, சப்பரத்தில் தெய்வம் காளியம்மனின் வீதி உலாவுடன், ஜோசியர் ராஜேந்திரன் அக்கினி சட்டியை ஏந்தி வரும் வேளையில் எடுத்த வீடியோ காணொளி. புதிய நூற்றாண்டு தொடங்கிய மூன்று வருடங்கள் பிறகு 2003ம் ஆண்டு தொடங்கி காளியம்மன் கோவில் திருவிழாவில் ஜோசியர் ராஜேந்திரன் அக்கினி சட்டியை ஏந்தி வலம் வருவதை அண்ணன் ராஜேந்திரன் அவர்களே சொல்லி அறிந்தது. தனது இருபது வயதில் ஜோதிட சாஸ்திரங்களை கற்றுக் கொள்ளத் தொடங்கி இருபத்தி ஏழு வயதில் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்று சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, அமெரிக்கா என அந்த நாட்டில் வசிக்கும் நண்பர்களின் அழைப்பை ஏற்று அந்த நாடுகளுக்குச் சென்று ஜோசியம் சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றவர். இந்த வலைப்பூவிற்காக பதிவு செய்த வீடியோ காணொளியை இன்று பார்ப்பதற்கே பிரமிப்பாக உள்ளது. 

Wednesday, November 22, 2023

பரசுராமரின் சுதர்சன சக்கரம்..

மஹாவிஷ்ணு, துவாபர யுகதத்தில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் செய்தபோது அப்போது நிலவிய அக்கிரமங்களுக்கு எதிராக யுத்தம் செய்து தர்மத்தை காக்க பரசுராமரிடமிருந்து சுதர்சன சக்கரத்தை வரமாகப் பெற்றார். தற்போது நடக்கும் காலம் பொய்யும், புரட்டுகளும் வானுயர்ந்து நிற்கும் கலிகாலம் எனும் கலியுகம் என்று சொல்லப்படுகிற வேளை.. நாம் உபயோகிக்கும் முகநூலை ஸ்ரீகிருஷ்ணரின் சுதர்சன சக்கரம் போன்று அக்கிரமங்கள், அநியாயங்களை நோக்கி சுழலச் செய்ய முடியுமா..? என திருவானைக்காவல் ஊரில் தண்ணீர் ஸ்தலமாக அமைந்த பரமேஸ்வரனுடைய ஜம்புகேஸ்வரர் கோவிலில் விஷ்ணு, லட்சுமி சஹஸ்ர நாமம் பாடிய பக்தரிடம் கேட்டபோது, பரமேஸ்வரனுடைய பரிபூரண ஆன்மீகப் பேராற்றாலை நாம் பெறுகிற பட்சத்தில் அனைத்துமே சாத்தியம் என்றபோது, ஆச்சரியமாக இருந்தது.


பரசுராமரை போன்று புஜபலம் கொண்ட கோவை நகரில் வசிக்கும் நண்பரை புகைப்படம் காட்டி பக்தரிடம் சொன்னபோது, இந்த நண்பர் அச்சு அசலாக விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரை போன்றே இருக்கிறார் எனச் சொன்னபோது, ஓம் நமசிவாய.. என்றது. இந்த சிவனுடைய பக்தர், மஹாவிஷ்ணுவிற்கும் பரம பக்தனாக இருக்கிறேன் எனச் சொன்னார். 

Saturday, November 11, 2023

மேக்ஸ்வெல் மேஜிக்..

கிருபானந்தா வாரியார் சுவாமிகள் நினைவு தினமாக.. நவம்பர் 7.. உலககோப்பை கிரிக்கெட் லீக் போட்டியின் 39வது போட்டி மும்பை நகரிலுள்ள வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே பகலிரவு நடைபெறும் வேளை, முன்தினம் தென்காசி நகரிலுள்ள காசிவிஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று வந்த களைப்புடன் உறங்கியது. மாலை ஏழு மணிபோல கிரிக்கெட் போட்டியின் ஐந்து ஓவர்களை பார்த்த பின்பு மீண்டும் உறங்கியது, எழுந்திருக்க இயலவில்லை. ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்களை விளாசி ஆப்கானிஸ்தான் அணியை வென்று வாகைசூடி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று சரித்திரம் படைத்திருப்பதை மறுநாள் காலை வேளை பார்த்த கணம் பிரமிக்கச் செய்தது.


சாராயம் எனும் மது அரக்கனுக்கு எதிராக கலிங்கப்பட்டி ஊரில் போராட்டங்களை நடத்தி புரட்சி எனும் சங்கநாதம் செய்த தாய் மாரியம்மாள் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினமாக, தென்காசி நகரிலுள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் உலகம்மன் சமேத காசிவிஸ்வநாதரை தரிசனம் செய்த பிறகு கோவிலின் வானுயர்ந்த கோபுரத்தின் மையப் பகுதியில் பாசுபதாஸ்திரம் பெறுவதற்காக பரமேஸ்வரனை நோக்கி கடுமையான தவத்தினை புரியும் "அர்ஜுனன் தபசு" சிற்பத்தினை மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பாடி தரிசனம் செய்தபோது, ஆயிரம் மடங்கு யானை பலம் கிடைக்கப் பெற்ற சூப்பர் நேச்சுரல் பவரினை அகத்தில் உணர்ந்த வேளை.. மறுதினம் மேக்ஸ்வெல்லின் பேட்டிங்கில் ஆயிரம் மடங்கு யானை பலத்தினை கண்டு பிரமித்தது.


திறமையான பேட்ஸ்மேன், பவுலரான மிட்செல் ஸ்டார்க் 18.3 ஓவரின் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய பின்பு களமிறங்கிய வலக்கை பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 128 பந்துகளை எதிர்கொண்டு 21 ஃபோர்கள், பத்து சிக்ஸர்களை அடித்தபோது உடலின் சதை பாகங்களில் பிடிப்பு ஏற்படும் வலியால் துன்பத்துடன் போராடி விளையாடி 201 ரன்களை விளாசி ஆஸ்திரேலியா அணியை செமி ஃபைனலுக்கு அழைத்துச் சென்றதை ஹாட்ஸ்டார் டிவியில் ரிப்ளை மேட்சாக முழுவதுமாக பார்த்தபோது, காசிவிஸ்வநாதர் கோவிலின் வானுயர்ந்த கோபுரத்தின் மையப் பகுதியிலுள்ள அர்ஜுனன் தபசு சிற்பத்தின் வல்லமையை கண்டு பிரமிக்கச் செய்தது.  ஓம் நமசிவாய..

Friday, November 10, 2023

அர்ஜுனன் தபஸு சிற்பம்..

நவம்பர் 5 தினமாக பெருமழை பெய்தது. மறுநாள், வானம் தெளிவாக சூரியனின் தரிசனமுடன் காட்சி தந்த வேளை, மழை பெரிதாக பெய்யாது என்று நினைத்து தென்காசி நகரிலுள்ள புகழ்பெற்ற உலகம்மன் சமேத காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு விஜயமாக கழுகுமலை ஊரிலிருந்து பஸ்ஸில் பயணமாக சென்று தென்காசி புறநகரிலுள்ள புதிய பஸ் நிலையத்தில் இறங்கியபோது, மேகங்கள் குபுகுபுவென இருட்டிக் கொண்டு வந்தது. அருகிலுள்ள உணவகத்தில் காரமுடன் டீ குடித்துவிட்டு பஸ் நிலையம் வந்தபோது, அரை மணி நேரம் பெருமழை பெய்து சரியான மழை என இரண்டு பேர் சொல்ல.. பெரிய மழை என தெரிந்தது. பஸ் ஏறி பழைய பஸ் நிலையம் சென்று பொடி நடையாக காசிவிஸ்வநாதர் கோவிலுக்குச் சென்றது. 


நவம்பர் 6 திங்கள், கலிங்கப்பட்டி ஊரில் வாழ்ந்து மறைந்த தாய் மாரியம்மாள் அவர்களின் நினைவு தினம் என்பதை, இடிமுழக்கமுடன் பெய்யும் மழையே குறிப்பால் உணர்த்தியது. காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு பல முறை வந்திருந்தாலும் இம்முறை அர்ஜுனன் தபஸு சிற்பத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது. ஆரல்வாய்மொழி ஊரிலுள்ள கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்த காக்கும் பெருமாள் எழுதிய திருவட்டாறு @ஆதிகேசவ பெருமாள் கோவில் நூலில் "அர்ஜுனன் தபஸு" சிற்பம் குறித்து புகைப்படமுடன் எழுதிய குறிப்புகள் ஏற்படுத்திய தாக்கம், பரமேஸ்வரன் கோவில்களில் இந்த சிற்பத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆவலினை உருவாக்கியது. கோவிலுக்கு உள்ளே விஜயமாகி காசிவிஸ்வநாதர், உலகம்மன், சோமாஸ்கந்த முருகனுடன், அறுபத்து மூன்று நாயன்மார்களை தரிசனம் செய்த பின்பு கோவிலில் உள்ள தூண்களில் பார்க்கையில், அர்ஜுனன் தபஸு சிற்பம் எங்குமே தென்படவில்லை. 


கோவிலின் வலதுபுறமாக உள்ள காலபைரவர், பராசக்தி பீடம், வீரகண்ட விந்தயனார் சித்தர் கோவில், மதுரை மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் போன்ற கடவுள்களை தரிசனம் செய்து வானுயர்ந்த கோபுரத்தின் மையப் பகுதிக்கு வந்தபோது, பெருமழை பெய்யத் தொடங்கி அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்து கொண்டே இருந்தது. மழை பெய்த வேளையில்.. நின்று கொண்டு இருந்த இடத்திலிருந்து பின்னால் திரும்பி பார்க்கையில், பரமேஸ்வரனிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெறுவதற்காக கடுமையான தவத்தினை புரியும் அர்ஜுனன் தபஸு சிற்பத்தினை கண்டு பிரமிக்கச் செய்தது. குந்தியின் மகனான அர்ஜுனனின் காலுக்கு அடியில் ஒரு பன்றி இருக்கும். இதுவே, இந்த சிற்பத்திற்கு ஒரு அழகினையும் பிரமிப்பை காட்டும். மழை நின்றபாடில்லை. மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஓம் நமசிவாய.. என்று சொல்லி, கோபுரத்தின் மையப் பகுதியிலிருந்து கிளம்பியது. 

மழை நின்றபாடில்லை. விடிய விடிய சிறு மழையாக, மிதமான மழையாக பெய்து கொண்டே இருந்தது. காலை வேளை ஊருக்கு வந்தது. அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பரில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் லீக் ஆட்டங்கள் நடந்து கொண்டு இருந்தது, ஒரு சிறப்பம்சமாகும். 

Wednesday, October 25, 2023

முனீஸ்வரன் கோவில்..

குளக்கட்டாக்குறிச்சி ஊரிலிருந்து இளையரசனேந்தல் ஊருக்குச் செல்லும் சாலையில் மூன்று கி.மீ தொலைவில் வலது புறமாக உள்ள கரிசல் காட்டில் 0.5 கி.மீ தொலைவில் முனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. பெரிய அகலமான குத்துக்கல் போன்று சிறிய குன்றுபோல அமைந்துள்ள இந்த முனீஸ்வரனை, ஏகாளி குடும்பத்தைச் சேர்ந்த மாடத்தி அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவருடன் சென்று தினமும் வணங்கி வந்ததாக சொன்னார். இதற்குப் பின்னர் சுமார் இருபத்தைந்து(25) வருடங்களாக முனீஸ்வரன் எனும் சக்தி வாய்ந்த கடவுளாக சுற்று வட்டாரங்களிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் மக்களின் மனதில் ஆழமாக பதிந்தது.  


கடந்த பதினைந்து ஆண்டுகளாக கிடாவெட்டி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு விருந்து வைத்தல், சிறு பிள்ளைகளுக்கு காது குத்து வைபவம் நடத்துதல், பொங்கல் வைத்தல், ஆடு-கிடா வெட்டி நேர்த்திக் கடனை செலுத்துதல் என மாதத்தின் இருபது நாட்களும் விழாக்கோலமாக இருப்பதை பார்க்கலாம். எனது பால்ய வயது நண்பனான ராஜேஷ்கண்ணனுடைய குடும்பத்தினர் 2021ம் ஆண்டு செப்டம்பர் 4 சனிக்கிழமை அன்று.. குளக்கட்டாக்குறிச்சி ஊர் மக்கள் ஆயிரம் பேர்களை அழைத்து கிடா வெட்டி கறி உணவு சமைத்து விருந்து வைத்து நேர்த்திக் கடனை செலுத்தியபோது, நானும் விருந்து வைபவத்தில் கலந்து கொண்டேன். சிறு வயதிலிருந்து நானும் நூற்றுக்கணக்கான முறை முனீஸ்வரனை தரிசனம் செய்கையில், தேசத்தின் நலனுக்காக வைத்த வேண்டுகோள்களை நிறைவேற்றித் தந்த பிறகு ஆயிரம் அரிவாள் கோட்டை முனீஸ்வரா.. என அழைத்து மகிழ்ந்தேன். 


தமிழ் மக்களுக்கான ஈழம் மலர வேண்டி, இலங்கையில் மேதகு பிரபாகரன் தலைமையில் யுத்தம் உக்கிரமமாக நடந்து கொண்டிருந்தபோது ஸ்ரீமுனீஸ்வரன் கோவில் மண்டபம் கட்டப்பட்டதை கல்வெட்டின் மூலமாக கண்டது. சுமார் முன்னூறு பேர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடலாம். சீனிவாசன் அவர்கள், இந்திய நாட்டின் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி ஒய்வு பெற்றவர். தற்போது பெங்களூர் நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவருடைய மகன் ராம் பிரசாத் பெயரில் மண்டபம் கட்டப்பட்டுள்ளதை காண முடிகிறது.


முனீஸ்வரன் கோவிலுக்கு வலது புறமுள்ள கரிசல் காட்டில் மக்காச் சோளப் பயிர்கள் விளைச்சலாகி வளர்ந்துள்ளது. நேற்றைய நடுப்பகல் சூரிய வெளிச்சத்தில் முனீஸ்வரன் கோவிலுக்கு விஜயமாகி தரிசனம் பெற்று புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தது.

Saturday, September 9, 2023

கரிசல் காட்டில் உழவுப் பணிகள்..

சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் சர்வ மதசபை மாநாட்டில் சகோதர.. சகோதரிகளே.. என்று உரையை தொடங்கி உலகின் ஆணிவேரை ஆட்டம் காணச் செய்த தினமாக.. செப்டம்பர் 11 காலை வேளை, கிழக்கு திசையிலுள்ள கரிசல் காட்டிற்குச் சென்றபோது டிராக்டர் கொண்டு நிலங்கள் உழப்பட்டு ரம்மியமாக காட்சி தந்தது. மேற்கு திசையில் சங்குப்பட்டி ஊருக்குச் செல்லும் வழியில் உள்ள காடு, இங்கே கிழக்கு திசையில் உள்ள காடு என எனது இரண்டு காடுகளையும் தாய் மாமா அவர்கள்.. கட்டுக் குத்தகை பிடித்து விவசாயம் செய்கிறார். புதிய காற்று படத்தில் கல்கி அவதாரமாக நடித்த முரளியின் நினைவு தினமன்று.. காலைபொழுது டிராக்டர் கொண்டு உழவு செய்ததை மேற்கு திசையிலிருந்து வீசும் தென்றல் காற்றுடன் கண்டபோது, புதிய சுகந்தம் தந்தது.  குறிப்பு: இக்கட்டுரை மேலே உள்ள புகைப்படத்தை குறிப்பது..

முக்கூட்டுமலை ஊரின் மலையை நோக்கி பார்க்கும் கோணத்தில் உழவுப் பணி நடைபெற்ற காடுகள்.



கழுகுமலை செல்லும் சாலையை நோக்கி பார்க்கும் கோணத்தில் உழவுப் பணி நடைபெற்ற காடுகள்.

Tuesday, August 22, 2023

மாமன்னர் பூலித்தேவன்..

பெரியப்பா ராமசாமி அவர்களை ஊரில் உள்ள மக்கள் தலைவர் என அழைப்பார்கள். கல்லூரி வரை படித்தவர். இவருக்கு வத்சலா என்ற ஒரே மகள். ஊரில் உள்ள தனது வீட்டில் தீப்பெட்டி குச்சிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நடத்தி வந்தார். ஊரில் உள்ள பெண்கள் எல்லோருமே ஒரு மாதமாவது இங்கே வேலை செய்திருப்பார்கள். தனது வீட்டின் ஒரு பகுதியில் தபால் நிலையமும் நடத்தி வந்தார். பெரியப்பா ராமசாமி உடன் பிறந்த தம்பியின் பெயர் நாராயணசாமி. இவர் கல்லூரி படிப்பு முடித்து கோவை நகரிலுள்ள புகழ்பெற்ற பூ.சா.கோ பொறியியல் கல்லூரியில் மனித உரிமையியல் துறையில் பேராசிரியராக பணிபுரிகையில் விடுதி வார்டனாகவும் பணி புரிந்தார். பின்னர் பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராக 1988ம் ஆண்டு மே 19 வியாழக்கிழமை அன்று பதவியேற்றதை.. 2012ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று கல்லூரியில் ஒரு தேர்வு எழுதச் சென்றபோது புகைப்படம் எடுக்கையில் கண்டது. டிசம்பர் 30.. இந்திய விண்வெளித் துறையின் விடிவெள்ளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நினைவு தினம்.

விக்ரம் சாராபாய் அமரத்துவமான 1971ம் ஆண்டு.. பீம்லா நாயக் படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் செப்டம்பர் 2 அன்று பிறந்தார். முந்தைய 1970ம் ஆண்டு செப்டம்பர் 2 தினமாக.. முக்கடலின் சங்கமமான கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்த நினைவுப் பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் திறப்பு விழா கண்டது, ஒரு சிறப்பம்சமாகும்.   

பெரியப்பா ராமசாமியின் மகளான வத்சலா அவர்கள், பூ.சா.கோ பொறியியல் கல்லூரியில் முதுகலை கணிப்பொறி படித்த பின்பு கத்தார் நாட்டிற்கு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பணிக்குச் சென்றதை சிறு வயதில் பெரியப்பா சொல்லி அறிந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராக பணி புரிந்தார். மாமன்னர் பூலித்தேவனின் 307வது ஆண்டு பிறந்த தினமன்று.. சென்னை நகரில் தனது மகனுக்கு திருமண வைபவத்தை சிறப்பாக நடத்தி முடித்ததை.. பாட்ஸா படத்தின் புரொடியூஷர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் பிறந்த தினமன்று(செப்டம்பர் 9).. கோவில்பட்டி அருகிலுள்ள உப்பத்தூர் ஊரின் அருகில் வத்சலா அவர்கள் நடத்தும் பள்ளிக்கூடத்திற்கு விஜயமானபோது, திருமண வைபவத்தை அறிந்து மகிழ்ச்சி அடைந்தது.  

1993ம் ஆண்டு ரிலீசாகி உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற ஜுராஸிக் பார்க் படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் பிறந்த தினமன்று.. கடந்த ஆண்டு டிசம்பர் 18 தினமாக.. கத்தார் நாட்டில் நடைபெற்ற உலககோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வென்று கேப்டன் மெஸ்ஸி விளையாடிய அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றதை மறுதினம்.. வத்சலா அவர்களிடம் சொல்லி பெருமிதம் அடைந்தேன்.

குறிப்பு: மாமன்னர் பூலித்தேவனின் போர் படைத் தளபதி ஒண்டிவீரன். ஒண்டிவீரனின் இருநூறாவது ஆண்டு நினைவு தினம்.. 1971ம் ஆண்டு ஆகஸ்டு 20.

Saturday, April 22, 2023

அண்ணன் ராஜு..

2020ம் வருடம்.. பெரியப்பா ருத்திரப்பா நாயக்கரின் நினைவு தினத்தினை அனுஷ்டிக்கும் விதமாக அனைவருக்கும் அழைப்பு விடுத்து அண்ணன் ராஜு, தமயந்தி அவர்களின் வீட்டில் வைத்து அக்டோபர் 12 திங்களன்று திதியினை செய்தபோது, 2004ம் வருடம் அக்டோபர் 12 செவ்வாய் தினமாக ருத்திரப்பா நாயக்கர் அவர்கள் சிவபதவி அடைந்ததை அண்ணன் ராஜுவிடம் கேட்டு தெரிந்து கொண்டது. அண்ணன் ராஜு, தூத்துக்குடி நகரிலுள்ள புகழ்பெற்ற வ.உ.சிதம்பரம் அரசு கல்லூரியில் இளங்கலை தாவரவியல் படிப்பை படித்தவர். முப்பது ஆண்டுகள் ஊரிலேயே விவசாயம் செய்தார். ராஜு, தமயந்தி இருவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். கிருஷ்ணபிரியா, சாந்தா என இரண்டு மகள்கள். இரண்டு பெண் பிள்ளைகளும் பொறியியல் பிரிவில் கணிப்பொறி படித்து பெங்களூர், மெட்ராஸ் எனும் இரண்டு பெரிய நகரங்களில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் கணினி துறையில் பணி புரிகின்றனர். 

தமயந்தி அவர்கள் தூத்துக்குடி ஜில்லா, அழகாப்புரம் ஊரில் பிறந்து வளர்ந்து குளக்கட்டாக்குறிச்சி ஊருக்கு திருமணமாகி வந்தார். திருமணம் ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நடந்தது. கிருஷ்ணபிரியா, கோவில்பட்டி நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்தார். பெங்களூரில் பணி புரிகிறார். பெரம்பலூரில் உள்ள ஹென்ஸ் ரோவர் பொறியியல் கல்லூரியில் இளங்கலை கணினியில் பட்டம் பெற்றவர். முதுகலை பட்டம் பெறவில்லை. கோவை புறநகரிலுள்ள கலைமகள் பொறியியல் கல்லூரியில் சாந்தா இளங்கலை கணினியில் பட்டம் பெற்று மெட்ராஸில் பணி புரிகிறார்.

கிருஷ்ணபிரியா, சாந்தா எனும் இரண்டு மகள்களை பெற்றெடுத்த தமயந்தி அவர்கள், தன்னுடைய அறுபத்து எட்டு வயதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 2023ம் வருடம் ஏப்ரல் 20 அன்று சிவபதவி அடைந்தார். மறுதினம் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது. ருத்திரப்பா நாயக்கர் அவர்களுக்கு ஒரே மகன் ராஜு அவர்கள். ருத்திரப்பா அவர்களுடன் உடன் பிறந்த தம்பி அய்யலுசாமி அவர்கள், காரைக்குடி ஊரிலுள்ள அழகப்பா பல்கலைகழகத்தில் இளங்கலை சட்டம் பயின்று கோவில்பட்டி நகரிலுள்ள நீதிமன்றத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராக பணி புரிந்தார். இவருக்கு இரண்டு மகன், மூன்று மகள் என ஐந்து குழந்தைகள். மூத்த மகன் பாபு என்பவர் அமெரிக்கா நாட்டில் சிவில் இன்ஜினியராக பணி செய்கிறார். மூத்த மகள் கமலா அவர்கள், இளங்கலை மருத்துவம் படித்து கோவில்பட்டி நகரில் கமலா மருத்துவமனை என்ற பெயரில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு மருத்துவம் பார்க்கிறார். மூன்று வருட காலமாக உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த அய்யலுசாமி அவர்கள், 2015ம் வருடம், மே மாதம் நாளன்று சிவபதவி அடைந்தார்.


கமலா, சம்பத்குமார் தம்பதியினர். கமலா அவர்கள், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கல்லூரியில் இளங்கலை மருத்துவம் பட்டம் பெற்றவர். சம்பத்குமார் கால்நடை மருத்துவராக திருநெல்வேலி நகரில் பணி புரிந்தார். பிரபலமான புலனாய்வு பத்திரிகையான நக்கீரன் வார இதழின் நிறுவனரான கோபால் அவர்கள், சம்பத்குமார் அவர்களுடன் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் என்பதை நக்கீரன் பத்திரிகையில் நிருபராக பணி புரியும் கோவில்பட்டி நண்பர் சொன்ன பிறகே அறிந்தது. மேற்கண்ட கட்டுரையில் உள்ளவர்கள் அனைவருமே எனது குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள்.

Wednesday, January 18, 2023

தலைவர் ராமசாமி அவர்களுடன்..

ராமசாமி அவர்களை ஊர் மக்கள் தலைவர் என அழைப்பார்கள். மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் மத்தியஸ்தராக இருந்து நல்லதொரு தீர்வை சொல்லுவார் எனபதால் காலப்போக்கில் தலைவர் எனும் சிறப்பு பெயருக்கு சொந்தம் ஆனார். எனக்கு நினைவு தெரிந்து இவருடைய வீட்டில் ஒரு கருப்பு-வெள்ளை டிவி இருந்து, சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபு நடித்த குருசிஷ்யன் படத்தை முதலில் இந்த டிவியில் பார்த்தது. கிரிக்கெட் போட்டிகளை பெரியப்பா ராமசாமி விரும்பி பார்க்கும் சமயங்களில் சிறுவர்களுடன் சேர்ந்து நானும் பார்ப்பேன். இவருடைய வீட்டில் போஸ்ட் ஆபீஸ் நடத்தி வந்தார். தீப்பெட்டி பெட்டிகளை உற்பத்தி செய்யும் தொழிலை பத்து வருடங்களுக்கு மேல் நடத்தினார். வீட்டுக்கு ஒருவர் என இந்த குடிசைத் தொழிலில் வேலை செய்தவர் இருந்ததை உறுதியாக சொல்லும் அளவுக்கு சிறப்பாக நடந்தது. 


வலைப்பூவிற்காக நேர்காணல் செய்ய வேண்டும் என 2012ம் வருடம், டிசம்பர் முதல் வாரமாக மொபைலில் அழைத்து சொன்ன பிறகு என்ன விசயங்களை பேச வேண்டும் என்பதை வீட்டிலே அமர்ந்து குறிப்புகள் எடுக்கிறேன் எனச் சொன்ன வேளை, மகிழ்ச்சியாக இருந்தது. முக்கடலின் சங்கமம் கன்னியாகுமரி ஊரில் நடைபெறும் சுவாமி விவேகானந்தரின் 150ம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்ட விழாவில் கலந்து கொள்வதற்காக கோவை நகரிலிருந்து பிறந்த ஊருக்கு வந்த அன்றைய தினம், கொடிகாத்த குமரன் எனும் திருப்பூர் குமரனின் நினைவு தினமாக(ஜனவரி 11) பெரியப்பா ராமசாமி அவர்களை நேர்காணல் செய்தது பெரும் பாக்கியமாக அமைந்தது. 

குறிப்பு: BADA OS எனும் செயலியில் இயங்கும் ஸ்மார்ட் போனில் பத்து நிமிட நேர்காணலை பதிவு செய்த பின்பு Canon கேமராவில் ஒளிப்பதிவு செய்தது.

Friday, January 13, 2023

தம்பி விக்னேஸ்வரன்..

சிறுவயது நண்பன் விக்னேஸ்வரனின் ஒரே மகன். மகன் தர்ஷன் பிறந்து இரண்டு வயதில் எடுத்த புகைப்படம். இப்போது பத்து ஆண்டுகளை கடந்து விட்டது. பள்ளிக்கூடம் செல்கிறான், நன்றாக ஓடியாடி விளையாடுகிறான். அப்பா விக்னேஸ்வரன் வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்த்து வந்த பிறகு தற்போது ஊரிலேயே விவசாயம் செய்கிறார். கடந்த பத்து ஆண்டுகளில் விவசாய பணிகளுக்கு மழைப் பொழிவு தங்கு தடையின்றி கிடைப்பது பெரும் பாக்கியமாக அமைந்துள்ளது.



1980ம் வருடத்தில் துவங்கி 2000ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் புகைப்படம் எடுப்பது என்பது இலவச பாஸ் பாஸ், பள்ளி அடையாள அட்டை, பத்து - பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கான அடையாள அட்டை போன்ற விஷயங்களுக்காக மட்டுமே இருந்தது. அபூர்வமாக பள்ளிக்கூடத்தில் நடைபெறும் ஆண்டு விழா, பள்ளி ஆண்டு மலருக்காக எடுத்த புகைப்படங்கள் மட்டுமே இருக்கும். ஸ்மார்ட் போன் எனும் மொபைல் போன்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு புகைப்படம் எடுப்பது என்பது எளிதான விசயமாக ஆகிவிட்டது. புகைப்படங்கள் எப்போதுமே பொக்கிஷம் என்பதை சில ஆண்டுகள் கடந்த பிறகே நமக்கு தெரியவரும்.