Wednesday, October 25, 2023

முனீஸ்வரன் கோவில்..

குளக்கட்டாக்குறிச்சி ஊரிலிருந்து இளையரசனேந்தல் ஊருக்குச் செல்லும் சாலையில் மூன்று கி.மீ தொலைவில் வலது புறமாக உள்ள கரிசல் காட்டில் 0.5 கி.மீ தொலைவில் முனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. பெரிய அகலமான குத்துக்கல் போன்று சிறிய குன்றுபோல அமைந்துள்ள இந்த முனீஸ்வரனை, ஏகாளி குடும்பத்தைச் சேர்ந்த மாடத்தி அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவருடன் சென்று தினமும் வணங்கி வந்ததாக சொன்னார். இதற்குப் பின்னர் சுமார் இருபத்தைந்து(25) வருடங்களாக முனீஸ்வரன் எனும் சக்தி வாய்ந்த கடவுளாக சுற்று வட்டாரங்களிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் மக்களின் மனதில் ஆழமாக பதிந்தது.  


கடந்த பதினைந்து ஆண்டுகளாக கிடாவெட்டி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு விருந்து வைத்தல், சிறு பிள்ளைகளுக்கு காது குத்து வைபவம் நடத்துதல், பொங்கல் வைத்தல், ஆடு-கிடா வெட்டி நேர்த்திக் கடனை செலுத்துதல் என மாதத்தின் இருபது நாட்களும் விழாக்கோலமாக இருப்பதை பார்க்கலாம். எனது பால்ய வயது நண்பனான ராஜேஷ்கண்ணனுடைய குடும்பத்தினர் 2021ம் ஆண்டு செப்டம்பர் 4 சனிக்கிழமை அன்று.. குளக்கட்டாக்குறிச்சி ஊர் மக்கள் ஆயிரம் பேர்களை அழைத்து கிடா வெட்டி கறி உணவு சமைத்து விருந்து வைத்து நேர்த்திக் கடனை செலுத்தியபோது, நானும் விருந்து வைபவத்தில் கலந்து கொண்டேன். சிறு வயதிலிருந்து நானும் நூற்றுக்கணக்கான முறை முனீஸ்வரனை தரிசனம் செய்கையில், தேசத்தின் நலனுக்காக வைத்த வேண்டுகோள்களை நிறைவேற்றித் தந்த பிறகு ஆயிரம் அரிவாள் கோட்டை முனீஸ்வரா.. என அழைத்து மகிழ்ந்தேன். 


தமிழ் மக்களுக்கான ஈழம் மலர வேண்டி, இலங்கையில் மேதகு பிரபாகரன் தலைமையில் யுத்தம் உக்கிரமமாக நடந்து கொண்டிருந்தபோது ஸ்ரீமுனீஸ்வரன் கோவில் மண்டபம் கட்டப்பட்டதை கல்வெட்டின் மூலமாக கண்டது. சுமார் முன்னூறு பேர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடலாம். சீனிவாசன் அவர்கள், இந்திய நாட்டின் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி ஒய்வு பெற்றவர். தற்போது பெங்களூர் நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவருடைய மகன் ராம் பிரசாத் பெயரில் மண்டபம் கட்டப்பட்டுள்ளதை காண முடிகிறது.


முனீஸ்வரன் கோவிலுக்கு வலது புறமுள்ள கரிசல் காட்டில் மக்காச் சோளப் பயிர்கள் விளைச்சலாகி வளர்ந்துள்ளது. நேற்றைய நடுப்பகல் சூரிய வெளிச்சத்தில் முனீஸ்வரன் கோவிலுக்கு விஜயமாகி தரிசனம் பெற்று புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தது.

No comments:

Post a Comment