Friday, November 10, 2023

அர்ஜுனன் தபஸு சிற்பம்..

நவம்பர் 5 தினமாக பெருமழை பெய்தது. மறுநாள், வானம் தெளிவாக சூரியனின் தரிசனமுடன் காட்சி தந்த வேளை, மழை பெரிதாக பெய்யாது என்று நினைத்து தென்காசி நகரிலுள்ள புகழ்பெற்ற உலகம்மன் சமேத காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு விஜயமாக கழுகுமலை ஊரிலிருந்து பஸ்ஸில் பயணமாக சென்று தென்காசி புறநகரிலுள்ள புதிய பஸ் நிலையத்தில் இறங்கியபோது, மேகங்கள் குபுகுபுவென இருட்டிக் கொண்டு வந்தது. அருகிலுள்ள உணவகத்தில் காரமுடன் டீ குடித்துவிட்டு பஸ் நிலையம் வந்தபோது, அரை மணி நேரம் பெருமழை பெய்து சரியான மழை என இரண்டு பேர் சொல்ல.. பெரிய மழை என தெரிந்தது. பஸ் ஏறி பழைய பஸ் நிலையம் சென்று பொடி நடையாக காசிவிஸ்வநாதர் கோவிலுக்குச் சென்றது. 


நவம்பர் 6 திங்கள், கலிங்கப்பட்டி ஊரில் வாழ்ந்து மறைந்த தாய் மாரியம்மாள் அவர்களின் நினைவு தினம் என்பதை, இடிமுழக்கமுடன் பெய்யும் மழையே குறிப்பால் உணர்த்தியது. காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு பல முறை வந்திருந்தாலும் இம்முறை அர்ஜுனன் தபஸு சிற்பத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது. ஆரல்வாய்மொழி ஊரிலுள்ள கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்த காக்கும் பெருமாள் எழுதிய திருவட்டாறு @ஆதிகேசவ பெருமாள் கோவில் நூலில் "அர்ஜுனன் தபஸு" சிற்பம் குறித்து புகைப்படமுடன் எழுதிய குறிப்புகள் ஏற்படுத்திய தாக்கம், பரமேஸ்வரன் கோவில்களில் இந்த சிற்பத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆவலினை உருவாக்கியது. கோவிலுக்கு உள்ளே விஜயமாகி காசிவிஸ்வநாதர், உலகம்மன், சோமாஸ்கந்த முருகனுடன், அறுபத்து மூன்று நாயன்மார்களை தரிசனம் செய்த பின்பு கோவிலில் உள்ள தூண்களில் பார்க்கையில், அர்ஜுனன் தபஸு சிற்பம் எங்குமே தென்படவில்லை. 


கோவிலின் வலதுபுறமாக உள்ள காலபைரவர், பராசக்தி பீடம், வீரகண்ட விந்தயனார் சித்தர் கோவில், மதுரை மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் போன்ற கடவுள்களை தரிசனம் செய்து வானுயர்ந்த கோபுரத்தின் மையப் பகுதிக்கு வந்தபோது, பெருமழை பெய்யத் தொடங்கி அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்து கொண்டே இருந்தது. மழை பெய்த வேளையில்.. நின்று கொண்டு இருந்த இடத்திலிருந்து பின்னால் திரும்பி பார்க்கையில், பரமேஸ்வரனிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெறுவதற்காக கடுமையான தவத்தினை புரியும் அர்ஜுனன் தபஸு சிற்பத்தினை கண்டு பிரமிக்கச் செய்தது. குந்தியின் மகனான அர்ஜுனனின் காலுக்கு அடியில் ஒரு பன்றி இருக்கும். இதுவே, இந்த சிற்பத்திற்கு ஒரு அழகினையும் பிரமிப்பை காட்டும். மழை நின்றபாடில்லை. மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஓம் நமசிவாய.. என்று சொல்லி, கோபுரத்தின் மையப் பகுதியிலிருந்து கிளம்பியது. 

மழை நின்றபாடில்லை. விடிய விடிய சிறு மழையாக, மிதமான மழையாக பெய்து கொண்டே இருந்தது. காலை வேளை ஊருக்கு வந்தது. அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பரில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் லீக் ஆட்டங்கள் நடந்து கொண்டு இருந்தது, ஒரு சிறப்பம்சமாகும். 

No comments:

Post a Comment