Monday, July 7, 2014

ஹிந்து தமிழ் நாளிதழுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்..!!

மனித இனத்தின் நாகரிக வரலாற்றைத் தொடங்கும்போது நாம் அங்கிருந்துதான் தொடங்குகிறோம். நீரிலிருந்தும் நிலத்திலிருந்தும் வானத்திலிருந்தும். நாம் எல்லோருமே அங்கிருந்துதான் வந்திருக்கிறோம். நம் அனைவரின் வேர்களையும் தேடிப் பார்த்தால், மண்ணின் பிளவுகள் கடைசியில் நம்மைக் கொண்டுசேர்க்கும் இடம் ஒரு வனவாழ் சமூகத்திலோ, கடலோடி சமூகத்திலோதான் முடியும். ஆனால், இன்றைக்கு நாம் எங்கே இருக்கிறோம்..? நம்முடைய அடையாளம் என்ன? நாம் வந்த இடத்துக்கும் நமக்குமான தொடர்பு என்ன? நம்முடைய குழந்தைகளுக்கு நம்முடைய வேர்களை, தொல்குடிச் சமூகங்களை எந்த அளவுக்குத் தெரியும்? அவர்களுடைய இன்றைய வாழ்க்கைப்பாட்டின் நிலை எந்த அளவுக்குப் புரியும்? எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு, பாதுகாப்பான, மேம்பட்ட ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டதாக நினைக்கிறோம். கடலிலும் வயலிலும் காட்டிலும் என்ன நடந்தாலும் அது எங்கோ யாருக்கோ நடப்பதாக நினைத்து நகர்கிறோம். ஆனால், உண்மையான நிலை என்ன? நம் வேர்களை நோக்கிச் செல்லும் பயணம் இது. அடுத்த சில மாதங்களுக்கு, "நீர், நிலம், வனம்" தொடர் மூலமாக உங்களோடு கரம் கோர்த்து, தமிழ் மண்ணின் ஆதிகுடி சமூகங்களை நோக்கிச் செல்கிறது தி இந்து நாளிதழ். திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்ந்தும், அவ்வப்போது கொஞ்சம் இடைவெளி விட்டும் "நீர், நிலம், வனம்" தொடர் வெளியாகும். பயணத்தை நீரிலிருந்து தொடங்குவோம். முதலில் கடல், அடுத்து வயல், பிறகு வனம்..!!

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்குப் புறப்படுவோமா..?



இப்படியாக ஒரு விளம்பரத்தை ஹிந்து தமிழ் நாளிதழ் இன்று வெளியிட்டு ள்ளது. ஹிந்து தமிழ் நாளிதழ் வெளியான நாளிலிருந்து தீவிர வாசகனாக இருக்கிறேன். கடந்த ஒரு வருடங்களாக கிராமத்து வலைப்பூவின் கட்டுரை களை எழுத எழுத, மின்னஞ்சலில் ஹிந்து நிறுவனத்திற்கு அனுப்பிவிடுவேன். சமீபத்தில் கிராமத்திற்கு மதநல்லிணக்க விருது கிடைத்தவுடன், எனக்கு வாழ்த்துக்களைக் கூறி ஹிந்து நிறுவனத்தார் மின்னஞ்சல் அனுப்பினார்கள். உங்கள் நாளிதழில் தரமான கட்டுரைகளை பிரசுரம் செய்கிறீர்கள். கிராமங்க ளில் வாழும் விவசாயப் பெருமக்கள், ஏழைக் குடியானவர்களைப் பற்றிக் கட்டுரைகளை பிரசுரம் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்று இரண்டு நாளைக்கு ஒரு முறை மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டே இருந்தேன். மாதம் ஒரு முறை கடிதம் மூலமாகவும் வேண்டுகோள் விடுத்தேன். அதற்குப் பலன் இன்றுதான் கிடைத்ததாக நினைத்துக் கொண்டேன். அதிலும் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்குப் புறப்படுவோமா? என்று விளம்பரப்படுத்தி யது வியப்பாக இருந்தது. பத்திரிகை வரலாற்றில் இப்படியொரு அறிவிப்பு வருவது இதுதான் முதல்முறை. ராமகிருஷ்ண பரமஹம்சரின் புதல்வர் சுவாமி விவேகானந்தருக்கு கிடைத்த இமாலய வெற்றி!! இந்த நூற்றாண் டில் தென்னிந்தியாவிலிருந்து கிளம்பவிருக்கும் இமாலயப் பேரலையின் மற்றொரு சிறு அலை, இப்போது ஹிந்து தமிழ் நாளிதழ் வழியாக உருவாக இருக்கிறது. சிறு துளி பெருவெள்ளம் என்பதுபோல், இந்த நூற்றாண்டில் தினம் தினம் எனது கிராமத்து வலைப்பூவும் ஆன்மீக அலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை..!!