Monday, May 27, 2013

நமது கிராமத்து பாரம்பரியத்தின் வரலாற்றுச் சுவடுகளை தேடி செல்கையில் - 1

நமது கிராமத்தின் வரலாற்றை பின்னோக்கி பார்த்தோமானால் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
நான் சிறுவயதாக இருக்கும்போதும், கோவைக்கு
வேலைக்கு சென்றபிறகு ஊருக்கு வரும்பொழுது சில பெரியவர்களிடம் கலந்து பழகி பல விசயங் களை தெரிந்துகொண்டேன்.சுமார் 160 வருடங்களு -க்கு முன்னர், அதாவது 1860 ம் ஆண்டுகளில் தோரயமாக, நமது கிராமத்தின் கண்மாயை உருவாக்கி இருக்கலாம் என்ற கணிப்பை சொல்ல முடியும். ஆனால் 1860 க்கும் 1890 க்கும் இடைப்பட்ட வருடங்களில் கண்மாயை உருவாக்கும் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. கண்மாயை உருவாக்கும் முன்னர் கள்ளிச்செடிகளும்,முட்புதர்களும், குண்டும், குழியும், மேடுமாக இருந்திருக்கிறது. இப்போதுள்ள உருவாக்கப்பட்ட குளத்தின் மீது ஒற்றையடி நடைபாதைகள் இருந்திருக்கிறது.ஊரிலுள்ள பெரியவர்கள் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து,கலந்தாலோசித்து இடத்தை தேர்வு செய்திருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில், அதாவது 1870 ம் ஆண்டுகளில் கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 200 பேர்தான்.வீட்டிற்கு ஒரு ஆள்வீதம் கண்மாயை உருவாக் -கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இப்புவியில் நான் 
வந்துசெல்வது ஒருமுறைதான் 
எனவே நான் இங்கே 
ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும் 
அதனை உடனே நிறைவேற்ற வேண்டும்!!
தள்ளி வைப்பதற்கோ 
அல்லது தவிர்ப்பதற்கோ இடமில்லை 
ஏனெனில் மீண்டும் ஒருமுறை 
நான் இப்புவியில் வரப்போவதில்லை!!

--கர்னல் ஜெ.பென்னிகுய்க் R.E.,C.S.I

பென்னிகுயிக் 
அந்த காலகட்டத்தில் நமது இந்திய தேசம் இங்கிலாந்து நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், பொதுப் பணித்துறையை சேர்ந்த வெள்ளைக்கார துரைமார் -களிடம், விவசாய நீர்பாசனத்திற்காக, கண்மாயை கட்டுவதற்கு அனுமதி பெறவேண்டும்.இந்த மாதிரி பணிகளுக்கெல்லாம் பிரிட்டீஷ் அரசாங்கம் முன்னு ரிமை தருவார்களாம்.மிகப்பெரிய நிதி உதவியும் அளிப்பார்களாம் நீர்பாசனத்துறையை சேர்ந்த அதிகாரி கள், கிராமத்து மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பார்களாம். எப்படி கண்மாயை அமைக்க வேண்டும் என்ற மாதிரி வரை படம், செயல்முறை விளக்கங்களை கிராமத்து பெரியவர் களுக்கு நன்றாக விளக்கி சொல்வார்களாம்.வெள்ளைக்கார துரைமார்களுடன் வரும் பிராமண வகுப்பை சேர்ந்த ஆங்கிலம் கற்றவர்கள், மொழிமாற்றம் செய்து,கிராமத்து மக்களுக்கு விளக்கி சொல்வார்கள். கண்மாயை தூர்வாரிய பிறகு,வீட்டிற்கு ஒருவர் வீதம் கண்மாயை சுற்றிலும் மரக்கன்றுகளை நடவேண்டுமாம்.அப்படி நடப்பட்ட மரங்கள்தான் இப்பொழுது குளத்தை சுற்றிலும் பிரமாண்டமாக வளர்ந்து காட்சிதரும் அரச மரம், புளிய மரங்கள், ஆலமரங்கள் போன்றவை. மேலக்காட்டுக்கு வழியாக செல்லும்போது, கருப்பசாமி கோயிலுக்கு அருகில் அந்த பிராமாண்டமான மரங்களின் அழகையும், குளுமையையும், வசந்தத்தையும் உணரமுடியும்.

முல்லைப்பெரியாறு அணை
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பென்னிகுயிக் என்ற வெள்ளைக்கார துரை (கலெக்டர்) யின் முயற்சியி -னால்தான் 1890 ம் ஆண்டுகளில் தேனீ, கம்பம் போன்ற பிற மாவட்ட விவசாய நீர்பாசனத்திற்க் -காக முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உருவாக்கப்பட்டது. பென்னிகுயிக் தன்னுடைய சொந்த சொத்துக்களையும், விலையுயர்ந்த தங்க நகைகளையும் விற்று,மேலும் மக்களிடம் கொஞ்சம் நிதி வசூல் செய்து முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கினார். தேசம் எல்லைகளை கடந்து நமது நாட்டு கிராமத்து மக்களின் நலனைப் பற்றியும், எதிர்கால வளர்ச்சியை பற்றியும் சிந்தித்து தனது கனவை நனவாக்கினார். 1895 ம் ஆண்டில் அணை பயன்பாட்டுக்கு வந்தது. 999 வருடத்திற்கு தமிழக மாநிலத்திற்கு சாசன உரிமையை பெற்றுக் கொடுத்தார். அதனால் தேனீ மாவட்ட மக்களின் பெரும்பாலான தாய்மார்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, பென்னிகுயிக் என்ற பெயரை சூட்டி, அந்த மகத்தான மனிதனுக்கு பெருமை சேர்த்தார்கள்.

இந்த அணைக்கட்டு பணிக்கு தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் விவசாயிகள், தொழிலாளிகள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். நமது கிராமத்திலிருந்து சுமார் பத்து பேர்கள் வேலைக்கு சென்றதாக என்னுடைய தாய் வழி தாத்தா, காலம் சென்ற மாரியப்பன் அவர்கள்
என்னிடம் கூறினார். என்னுடைய தந்தை வழி தாத்தா வரதராஜு அவர்களும், சுமார் ஒரு வருட
காலம் பணியாற்றியதாக என் தந்தையார் என்னிடம் அடிக்கடி சொல்லுவார். சுமார் பத்து வருடங்களுக்கு மேல் அணைக்கட்டு பணி நடந்திருக்கிறது. 1900 ம் ஆண்டுகளில் எல்லாம் தற்சமயம் உள்ளது போன்ற சாலை வசதிகளெல்லாம் கிடையாது. மண்பாதை வழியில்தான் நடந்து செல்ல வேண்டுமாம். மாட்டு வண்டி, வில்லுவண்டிகளில்தான் கழுகுமலை, குருவிகுளம், கோவில்பட்டி, நடுவப்பட்டி, மைப்பாரை, முக்கூட்டுமலை போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டுமாம். இளைய வயதினர்கள் முதியவர்களுக்கும், பெரியோர்களுக்கும் மிகுந்த மரியாதை அளித்த காலகட்டங்கள்!

நமது கிராமத்தின் காளியம்மன்  கோயில், பிள்ளை யார் கோயில்,கருப்பசாமி, அய்யனார் கோயில் களெல்லாம் எப்போது கட்டப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது குறித்த விஷயங்கள் ஒன்றும் கோவில் சுவரிலோ, வேறு எங்குமே காணப்படவில்லை. பெரியவர்கள் சில பேர் என்னிடம் ஒரு யூகமாக சொன்னது- கோவில் கள் உருவாக்கப்பட்டு சுமார் 150 வருடங்களுக்கு மேல் இருக்குமாம். வெறும் மண்சுவரில் கட்டிடம் எழுப்பி, பனை ஓலை,கூரை வேயப்பட்டு தெய்வத்தின் சிலையை செய்து பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். காளியம்மன் கோவில் வடக்கு நோக்கியும், பிள்ளையார் கோவில் தெற்கு நோக்கியும், இந்த இரு கோவில்களையும் பார்த்தவாறு கருப்பசாமி, அய்யனார், முத்தாலம்மன் சிலைகளை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எனக்கு நன்றாக விவரம் தெரிந்த 1990 ம் ஆண்டுகளில் -தான் காளியம்மன் கோவில் புதுபிக்கப்பட்டு, கற்சுவரால் கட்டப்பட்டது. சமீப ஆண்டுகளிதான் பிள்ளையார் கோயிலும் புதுப்பிக்கப்பட்டது.

பிள்ளையார் கோயில் 
பிள்ளையார் கோயிலுக்கு முன்னாள் உள்ள நாழிக்கிணறு எனக்கு மிகவும் பரவசம் ஊட்டக்கூடியது. நான் சிறுவயதாக இருக்கும் போது ஊரிலுள்ள தாய்மார்கள், பெண்கள், ஒரு வாளியில் கயிறுகட்டி தண்ணீர் சேந்துவார்கள்.
அவர்கள் தண்ணீர் இறைப்பதை பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாக இருக்கும். கலகல வென பேசிக்கொண்டு தண்ணீரை இறைக்கும்போது,
கோயிலுக்கு அருகில் சிறுவர்கள் பல பேர் விளையாடிக் கொண்டு இருப்போம். தண்ணீர் தாகம் எடுக்கும்போது அவர்களிடம் கேட்டு வாங்கி குடிப்போம். இன்று அந்த கிணறு மயான அமைதியாக காட்சிதருகிறது. அந்த கிணற்றின் பக்கம் சென்றாலே, அதிலுள்ள தண்ணீரும், கற்களும் பல அற்புதமான கதைகளை சொல்லும். ஏன்? என்னை புறம் தள்ளிவிட்டீர்கள் என்று கேட்பதுபோல் இருக்கும். ஒரு காலத்தில் நான் உங்களை அன்போடு அரவணைத்துக் கொண்டு, தாகம் தீர்க்கவும், இன்ன பிற தேவைகளுக்காகவும், உங்களின் இரத்தத்தோடும், ஆன்மாவோடும் வாழ்ந்தேன். இன்று யாரும் ஆதரிப்பாரின்றி அனாதையாக இருக்கிறேன் என்று கண்ணீர்விட்டு அழுவதுபோல் காட்சி தரும். நானும் சில சமயங்களில் பிள்ளையார் கோயிலுக்கு செல்லும்போதெல் -லாம், அந்த கிணற்றின் முன்னாள் சுமார் பதினைந்து நிமிடம் உட்கார்ந்து, சிறுவயது நினைவுகளை அசைபோடுவேன். கண்ணீர்த்துளிகள் என் நெஞ்சை நனைக்கும். பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில் குடிகொண்டிருந்த காலம் சென்ற பெரிய பூசாரி அய்யாவின் நினைவுகளும், இதயத்தில் மின் அதிர்வுகளை ஏற்படுத்தும்.

நமது கிராமத்தின் வரலாறு முன்னூறு (300) வருடங்களுக்கு முற்பட்டதாக
இருக்கலாம். ஊரிலுள்ள ஆசாரிகள், சலவைத் தொழிலாளர்கள், முடி
திருத்தம் செய்யும் தொழிலாளிகள், துப்புரவு பணியாளர்களெல்லாம் வெளியூர்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களாக இருக்கலாம். 1953 ம் ஆண்டு வரைக்கும் மொழி வாரி மாநிலங்களாக  பிரிக்கப்படாத தேசம்தான்
நமது பாரத தேசம். தெலுங்கு மாகாணம் பிரிக்கப்படவேண்டும் என்று பொட்டி ஸ்ரீ.ராமுலு அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டார்.
ஆந்திர மாகாணத்தில் பெரும் கலவரங்கள் மூண்டது. இதனையடுத்து
பண்டித ஜவஹர்லால் நேரு, இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.
1890 ம் ஆண்டுகளில் நமது கிராமம் கர்நாடகவின் ஆற்காடு நவாபு ஆட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு இருந்திருக்கிறது. அதாவது மதராசப்பட்டிணம்   சமஸ்தானத்திற்குட்பட்ட ஆற்காடு நவாபு ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.

 சுவடுகள் தொடரும்...