Thursday, January 5, 2023

முகநூல் பையன் மார்க் சக்கர்பெர்க் @மார்க் ஆண்டனி..

பதினோரு வருடங்களுக்கு முன்பு 2004ம் வருடம், பிப்ரவரி 4 தினமாக.. உதயமான Facebook @முகநூல் எனும் சமூக வலைதளம், நான்கு வருடங்களில் உலகம் முழுமையும் கோடான கோடி வாசகர்களை தன்னகத்தே ஈர்த்து ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் ஆழிப்பேரலையாக பிரபஞ்சம் முழுவதையும் வாகைசூடியது. வருடங்கள் செல்லச் செல்ல இன்றைய நாளில் ஒவ்வொரு மனிதனும் முகநூலில் முகவரி கணக்கு வைத்திருப்பதை பார்க்கும் வேளையாக, தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்து வந்த இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் நம்முடைய வாழ்க்கையின் சிந்தனை முறைகளில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளதை பார்க்கிறோம்.

புதிய நூற்றாண்டு தொடங்குவதற்கு முந்தைய காலகட்டம் வரையில் கல்லூரியில் படிக்கும்போது வாரத்திற்கு ஒரு கடிதம் எழுதி வீட்டிற்கு அனுப்பி வைப்பது ஒரு பழக்கமாக இருந்தது. மாதத்திற்கு ஒரு முறை விடுமுறையில் வீட்டிற்கு வரும்போது எழுதி அனுப்பிய கடிதத்தின் மூலமாக பெற்றோர்களுடன் எப்போதும்போல பேசிக்கொண்டு இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான உணர்வினை தந்தது. 2005ம் வருடத்தின் பிற்பாதியில் மொபைல் போனுடன் இணைந்த இன்டர்நெட்டின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக வீட்டிற்கு கடிதங்களை எழுதி அனுப்பும் பழக்கமானது, படிப்படியாக குறைந்து போனது. ஏனெனில், மொபைலின் மூலமாக பெரும்பாலான விசயங்களை பேசி விடுகிறோம் எனும்போது கடிதங்களை எழுத வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது.

இலக்கியம், வரலாறு, ஆன்மீகம் சம்பந்தமான புத்தகங்களை நாள்தோறும் தொடர்ச்சியாக படித்து வந்தாலும், ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சியானது எதிர்கால இளைய தலைமுறையின் கற்பனை சக்தி, புதிதாக உருவாக்கும் திறன்களை மழுங்கடிக்கச் செய்துவிடுமோ..? என்ற அச்சம்கூட உருவானது. இதைப் பற்றி அதிகமாக நினைப்பதைவிட கணிப்பொறி அறிவியல் படித்த நம்முடைய சிந்தனைகளை எழுத்து, பேச்சு மூலமாக உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சி செய்வோம் என இதற்கு செயல்வடிவம் கொடுக்க யோசனை செய்து கொண்டிருந்த சமயமாக, 2010ம் வருடம் தொடங்கி ஜூன் மாதமாக, கோவை நகரில் நடைபெற இருந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் உற்சாகமுடன், கோவை நகரிலிருந்து சிறுவாணி செல்லும் சாலையில் செல்வபுரம் ஊரில் வசிக்கும் நண்பர் பேரெழில்குமரன் கூகுளின் வலைப்பூவில் நினைவுக்  குறிப்புகளை எழுதும் பயிற்சிக்கு கிரியா ஊக்கியாக இருந்தார். வலைப்பூவின் மூலமாக எழுத்து எனும் பயணத்தினை தொடங்கியது.

No comments:

Post a Comment