Tuesday, January 3, 2023

சக்கரங்களின் சுழற்சிபோல நாட்களின் தொடர்ச்சியான நினைவுகள்..

ஒரு ஊரில் பள்ளிக்கூடமும், கோவிலும் கட்டாயமாக இருக்க வேண்டும் எனச் சொல்லுவார்கள். ஊரில் வாழும் மக்களின் சாதி, சமயங்களைப் பொறுத்து இந்து கோவிலுடன் இணைந்த சிறு தெய்வங்களின் கோவிலோ, தேவாலயமோ, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் மசூதியோ அமையப் பெறுகிறது. என்னுடைய வீட்டுக்கு அருகில் இந்து துவக்கப் பள்ளி இருந்தது. கோவில்பட்டி நகருக்குச் செல்லும் சாலையில் முத்தாலம்மன் கோவில், காளியம்மன் கோவில் இருந்தது. பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கலாம். ஊரில் ஜமீன்தார் வீடு என்று அழைக்கப்படும் ராமலிங்கசுவாமி நாயக்கர் அவர்களுடைய குடும்பத்தினர் பள்ளிக்கூடத்தின் நிர்வாகத்தினை மேற்கொண்டனர். அரசு உதவி பெரும் பள்ளியாக செயல்பட்டது. 1987ம் வருடமாக, நான் ஒன்றாம் வகுப்பில் இந்து துவக்கப் பள்ளியில் சேர்ந்தபோது ராமலிங்கசாமி அவர்களின் மகனான விஸ்வாமித்திரன் அவர்கள், ஊரினுடைய பஞ்சாயத்து தலைவராக பொறுப்பிலிருந்து பள்ளிக்கூட நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். 

ஊரிலிருந்து தெற்கு திசையில் கழுகுமலை ஊருக்குச் செல்லும் சாலையில் நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ராமநாதபுரம் ஊரிலிருந்து பள்ளிக்கு வருகை தந்த வாத்தியாரை "ராமநாதபுரம் வாத்தியார்" என்றே அழைத்துப் பழகியதால், இவருடைய பெயர்கூட சரியாக தெரியாமல் போனது. ஆசிரியர், பாலசுப்பிரமணியன், டீச்சர் கிருஸ்ணவேணி இருவருமே கோவில்பட்டி நகரிலிருந்து பயணமாக ஊருக்கு வந்து பள்ளியில் பணிபுரிந்தனர். ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒவ்வொரு வருடமாக ஐந்தாம் வகுப்பு வரையிலும் படித்தபோது, ஒவ்வொரு வருடமும் கடந்து செல்வதே தெரியவில்லை. பெரிதாக ரிஸ்க் எடுத்து படிக்கும் அளவுக்கு தேர்வு முறைகள் இல்லாததால், இங்கிலீஷ், கணிதம், அறிவியல் படிப்பினை வாசித்தவாறே விருப்பத்துடன் படித்தது.

பள்ளிக்கூடத்தின் எதிர்புறமாக பெரிய கனவு வீட்டினை அப்பா ராமகிருஸ்ணன் அவர்கள் கட்டத் தொடங்கி அஸ்திவாரம் போடப்பட்டு இடுப்பளவு உயரத்தில் சுவர் எழும்பி நின்றது. மாலை வேளையாக, இந்த அஸ்திவார தளத்தில் அமர்ந்து கொண்டு அப்பாவுடன் ரேடியோ கேட்கையில், இலங்கை வானொலியில் விடுதலை புலிகள் அமைப்பினர் மேற்கொள்ளும் போர்க்களம் நிலவரம் பற்றிய செய்திகளை கேட்டுக் கொண்டே சினிமாப் பாடல்களை கேட்பது பழக்கமாக இருந்தது. இரண்டு மணி நேரம் புதிய விசயங்களை கேட்ட திருப்தியுடன், ஒரு மணி நேரம் கதை புத்தகங்களை படித்த பின்பு உறங்கச் சென்று விடுவது ஒரு சக்கரத்தின் சுழற்சிபோல இருந்தது. 

ஏப்ரல் 25 பிறந்த நாளுடன் ஊரிலுள்ள இந்து துவக்கப் பள்ளியில் படித்த 1987ம் வருடத்திலிருந்து 1992ம் வருடத்தின் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் இங்கிலீஸ் படிப்பிற்கான அடித்தளம் குறைவாகவே அமைந்து, 1995ம் வருடத்திற்கு பிறகே ஆங்கிலத்தின் மீதான நாட்டமும், விருப்பமும் அதிகமாகத் தொடங்கியது. கோவில்பட்டி நகரில் வசிக்கும் வழக்கறிஞர் பெரியப்பா அய்யலுசாமி அவர்கள் வீட்டிற்கு விடுமுறை நாட்களில் செல்லும் வேளை, சேட்டிலைட் சேனலில் இங்கிலீஸ் படங்களை பார்ப்பதன் மூலமாக ஆங்கில அறிவினை புதிய முறையில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.  

புகைப்படம்: 2009ம் வருடம், தருமபுரி மாவட்டத்தில் உள்ள நண்பன் ராஜாவின் ஊரான நெருப்பூருக்குச் சென்று "மக்கள் சமூக முன்னேற்றக் கழகம்"  எனும் இளைஞர்களுக்கான அமைப்பின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எழுதிய "சத்திய சோதனை" நூலினை அன்பளிப்பாக கொடுத்த வேளை பெற்றுக் கொண்டது. நண்பன் ராஜா, தற்போது மத்திய அரசில் சிபிஐ(CBI) அதிகாரியாக பணிபுரிகிறார்.

No comments:

Post a Comment