எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக ஊரிலுள்ள மக்களிடம் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் பெரிதாக தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. புரட்சி நடிகரான எம்.ஜி.ராமச்சந்திரனின் தீவிரமான ரசிகர்களாக இருப்பவர்கள், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் முக்கிய உறுப்பினர்களாக அங்கம் வகித்து தேர்தல் நடைபெறும் சமயங்களில் நன்றாக பணி செய்வார்கள். திராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல், இடைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறும் சமயங்களில் பரபரப்பாக பணி செய்வார்கள். இப்படியாக, அரசியல் கட்சியில் தீவிரமாக பணி செய்பவர்கள் எழுத்தாளர், பேச்சாளர் எனும் அந்தஸ்திற்கு எவருமே உருவாகவில்லை. இருபதாம் நூற்றாண்டு தொடங்கிய காலம் முதலாக ஊரிலிருந்த பெரும்பாலான மக்கள் விவசாயம் சார்ந்த பணிகளை செய்வதில் மட்டுமே கண்ணும், கருத்துமாக இருந்த காரணத்தால், இருபதாம் நூற்றாண்டின் ஐம்பது வருடங்களை கடந்து பிறகான முப்பது வருடங்களை கடந்த பின்பும் அரசியல் பெரிதாக புதிய தலைமுறையிடம் எந்த விதமான தாக்கத்தினையும் ஏற்படுத்தவில்லை.
ஊரில் ஆரம்ப பள்ளிக்கூடம் இருந்ததுபோல, நூலகமோ கிளை நூலகமோ உருவாகவில்லை. 1996ம் வருடம், ஊரிலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளை நூலகம் ஒன்றினை தொடங்குவதற்காக நிறைய புத்தகங்கள் வாங்கப்பட்டு அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. ஏழு மாத காலகட்டத்தில் நூலகம் உருவாகுவதற்கான அறிகுறியே இல்லாமல் மறைந்து போனது. நூலகம் அமையப் பெற்று பத்திரிகைகள், புத்தகங்களை குழந்தைகளும் பையன்களும் வாசிக்கத் தொடங்கும்போது, அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான படிப்பினைகள் மெல்ல மெல்ல உருவாகத் தொடங்கும். குறைந்த பட்சமாக.. தினசரி பத்திரிகைகளை படிப்பதற்கென்று ஒரு படிப்பகம்கூட உருவாகவில்லை. அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்களின் பெயரில்கூட ஒரு படிப்பகம் தொடங்கி பத்திரிகைகளை கொண்டு வாருங்கள் என்று பெரியப்பா ராமசாமி அவர்களிடம் வற்புறுத்தி சொல்லியும் காரியம் பெரிதாக கைகூடவில்லை.
ஊரிலிருந்து தெற்கு திசையில் மூன்று கிமீ தொலைவிலுள்ள துரைச்சாமிபுரம் ஊரில் 1995ம் வருடத்தில் கிளை நூலகம் ஒன்று உருவாகி இன்று வரையிலும் சிறப்பாக செயல்படுவதை, அந்த ஊரின் வழியாக பயணம் செய்கையில் பார்க்கும்போது வியப்பாக இருக்கும். நூலகர் விடுமுறை எடுத்து அன்றைய தினம் வரவில்லை என்றாலும், பெரிய மனிதர்கள் தினசரி பத்திரிகைகளை எடுத்து படித்துக் கொண்டு இருப்பதை சில நேரங்களில் பார்க்க முடிந்தது. இந்த ஊரிலிருந்து கோவில்பட்டி நகரில் பசுவந்தனை சாலையில் உள்ள நாடார் மேல்நிலை பள்ளியில் 1992ம் வருடம் தொடங்கி 1994ம் வருடம் வரையில் 1, +2 வகுப்பு படித்த அண்ணன் ரமேஸ் அவர்கள், இங்கிலீஷில் சரளமாக பேசுவதை கேட்பதற்கே வியப்பாக இருக்கும். சிவபெருமானின் லிங்கத்தைப்போல அண்ணன் ரமேஸ்.. பள்ளிக்கூடத்தில் உள்ள நூலகத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து படிப்பதை பார்க்கும் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இவருடைய ஊரில் நூலகம் தொடங்குவதற்கு அண்ணன் ரமேஸ் அவர்களே கிரியா ஊக்கியாக இருந்ததை 1999ம் வருடத்திலே அறிந்தபோது வியப்பாக இருந்தது. எங்கள் ஊருக்கு ஒரு நூலகம் வேண்டும் என்று மெட்ராஸ் நகரிலுள்ள மாநில நூலக இயக்குநருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். இந்த ஒரு கடிதமே துரைச்சாமிபுரம் ஊருக்கு நூலகம் வருவதற்கு அடித்தளமாக அமைந்ததை கண்டது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு தொடங்கிய பிறகு எங்கள் ஊருக்கு ஒரு நூலகம் வேண்டும் என்று அண்ணன் ரமேஸ் எழுதிய கடிதம்போல மாநில நூலக இயக்குநருக்கு கடிதம் அனுப்பியதற்கு பலன்கள் கிடைக்கப்பெற்றும், ஊரிலுள்ள மக்களிடம் புத்தங்கங்களை படிப்பதற்கு பெரிதாக ஆர்வம் இல்லாத காரணத்தால், நூலகம் வந்த வேகத்திலே மறைந்து போனது.
No comments:
Post a Comment