தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் எட்டையாபுரம் செல்லும் சாலையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு நேராக நடக்கும் பாதையில் வலது புறமாக உள்ள வணிகவரித் துறை அலுவலக வளாகத்தில் பெரிய வேப்ப மரத்தின் கீழே உள்ள கோவிலில் அருள்புரியும் ஸ்ரீவரசக்தி விநாயகர் கோவிலின் சந்நிதியில் அமர்ந்து 1996ம் வருடம் தொடங்கி 1997ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் உட்கார்ந்து படித்த வேளை, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல பலன்கள் கிடைத்தது.
பதினொன்றாம் வகுப்பில் கணித பாடப்பிரிவில் சேர்ந்து படித்தால் கல்லூரி படிப்பில் பொறியியல், கணிப்பொறி வகுப்பை தேர்ந்தெடுத்து படிக்கும் வாய்ப்பு உள்ளதாலே கணித பாடத்தில் பெரிதாக விருப்பம் இல்லாமல் இருந்தும் அப்பாவினுடைய அன்பு கட்டளை மற்றும் தொந்தரவு காரணமாக +1 வகுப்பில் கணித பாடப்பிரிவில் சேர்ந்தது. என்னுடைய அன்புச் சகோதரியும் கழுகுமலை ஊரிலுள்ள கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வந்து +1 வகுப்பில் சேருவார் என எதிர்பார்க்காத நேரத்தில் கழுகுமலைக்கே வந்தார்.
கழுகுமலை அரசு பள்ளி கணித வகுப்பில் என்னை சேர்த்து மொத்தம் பதினேழு மாணவர்களில் இரண்டு பெண்கள் என பதினைந்து பேர்கள் பையன்களாக இருந்தோம். கரடிகுளம் ஊரிலிருந்து படிக்க வந்த ராஜ்குமார் என்னுடைய குடும்பத்தின் விறகு வியாபாரத்தை பார்க்க போகிறேன் என்று பள்ளியில் சேர்ந்த ஐந்து மாதத்திலே மாற்றுச் சான்றிதழை வாங்கி சென்று விட்டான். ராஜ்குமார் சென்ற இரண்டு மாத கால இடைவெளியில் ஒரு மாணவன் வந்து சேர்ந்த பிறகு பதினேழு என்ற வகுப்பு எண்ணிக்கை சமன் செய்தது.
மாலை வேளை 04:30 மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்த பின்பு கழுகுமலை ஊரின் சார்பதிவாளர் அலுவலகம் அருகிலுள்ள அரசு நூலகத்தில் அரை மணி நேரம் பத்திரிகை, புத்தகம் என வாசிக்கத் தொடங்கி பின்பு ஒரு மணி நேரமாக நூல்களை படித்தது.
கல்யாண கிருஸ்ணமூர்த்தி எனும் அமரர் கல்கி எழுதிய சிவகாமியின் சபதம், "பொன்னியின் செல்வன்" போன்ற வரலாற்று நாவல்களை +1 +2 வகுப்பு படித்த இரண்டு வருடங்களில் மூன்று முறை படித்தது. விகடன் பத்திரிகை குழுமத்திலிருந்து வரும் இதழ்களை கழுகு பார்வையில் பார்க்கையில் முக்கியமான கட்டுரைகளை படித்து குறிப்புகளை எடுத்துக் கொள்வது, சுவராஸ்யமான அனுபவமாக இருந்தது. பள்ளி பாட புத்தகங்களை பள்ளியிலும், வீட்டிலும் மட்டுமே படித்தாலும், அரசு நூலகத்தில் வாசித்த பல்வேறு விதமான புத்தக அறிவின் மூலமாக +2 வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பிறகு நல்ல பலன்கள் கிடைத்தது.
இதே அரசு பள்ளியில் ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரையிலும் படித்து என்னுடன் +1 +2 வகுப்பில் இணைந்து படித்த நண்பன் ராஜேஸ்வரன்.. +2 பொதுத் தேர்வில் 758 மதிப்பெண்கள் எடுக்க எனக்கு 757 மதிப்பெண்கள் பெற்றதை பார்த்தபோது, சென்னை நகரில் அண்ணா சாலையிலுள்ள @விகடன் பத்திரிகை அலுவலகத்தின் முகவரி எண்: 757 என்பதே.. +2 தேர்வு மதிப்பெண்ணாக அமைந்ததை கண்டு வியப்பாக இருந்தது.
இரண்டு வருடங்கள் எங்களுக்கு கணித பாடத்தினை நடத்திய ஆசிரியர் செல்வராஜ், கொஞ்சம் அக்கறையுடன் இன்னும் நன்றாக படித்திருந்தால் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேலாக எடுத்திருக்கலாம் என நோட்டீஸ் போர்டில் மதிப்பெண்களை பார்த்துக் கொண்டிருந்த எங்கள் இருவரிடமும் சொன்னபோது, இந்த அளவிற்கு அதிகமான மதிப்பெண்களை எப்படி எடுத்தோம் என நானும் ராஜேஸ்வரனும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தோம். இப்படியாக, பாட புத்தகங்களுடன் இலக்கியம், வரலாற்று புதினங்கள், ஆன்மீக நூல்கள், புராண நூல்களுடன் வாசிப்பு பயணம் நெடும் பயணமாக தொடர்ந்து கொண்டே இருந்தது.
புகைப்படம்: அமெரிக்கா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடியின் தனிச் செயலாளராக வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த தியோடர் சோரன்ஷன் எழுதிய ஜான் கென்னடி பற்றிய பயோகிராஃபி புத்தகத்தினை 2019ம் வருடம், ஆகஸ்ட் மாதமாக.. மெட்ராஸ் நகரின் எழும்பூரிலுள்ள கன்னிமாரா நூலகத்திற்கு சென்றபோது புத்தகத்தினை தற்செயலாக பார்த்து முக்கியமான குறிப்புகளை படித்த பின்பு கடைசி பக்கத்தினை பார்த்த வேளை பக்கம் எண்: 758 என பள்ளி வகுப்பு நண்பன் ராஜேஸ்வரனுடைய +2 மதிப்பெண்ணாக இருந்ததை கண்டு வியப்பாக இருந்தது.
No comments:
Post a Comment