ராமசாமி அவர்களை ஊர் மக்கள் தலைவர் என அழைப்பார்கள். மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் மத்தியஸ்தராக இருந்து நல்லதொரு தீர்வை சொல்லுவார் எனபதால் காலப்போக்கில் தலைவர் எனும் சிறப்பு பெயருக்கு சொந்தம் ஆனார். எனக்கு நினைவு தெரிந்து இவருடைய வீட்டில் ஒரு கருப்பு-வெள்ளை டிவி இருந்து, சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபு நடித்த குருசிஷ்யன் படத்தை முதலில் இந்த டிவியில் பார்த்தது. கிரிக்கெட் போட்டிகளை பெரியப்பா ராமசாமி விரும்பி பார்க்கும் சமயங்களில் சிறுவர்களுடன் சேர்ந்து நானும் பார்ப்பேன். இவருடைய வீட்டில் போஸ்ட் ஆபீஸ் நடத்தி வந்தார். தீப்பெட்டி பெட்டிகளை உற்பத்தி செய்யும் தொழிலை பத்து வருடங்களுக்கு மேல் நடத்தினார். வீட்டுக்கு ஒருவர் என இந்த குடிசைத் தொழிலில் வேலை செய்தவர் இருந்ததை உறுதியாக சொல்லும் அளவுக்கு சிறப்பாக நடந்தது.
2014ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் மத நல்லிணக்க விருது பெற்ற கிராமம். காலம் சென்ற நமது கிராமத்தின் முன்னோர்களுக்கும், வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கும் இந்த கிராமத்து வலைப்பூ சமர்ப்பணம்..
Wednesday, January 18, 2023
தலைவர் ராமசாமி அவர்களுடன்..
Friday, January 13, 2023
தம்பி விக்னேஸ்வரன்..
சிறுவயது நண்பன் விக்னேஸ்வரனின் ஒரே மகன். மகன் தர்ஷன் பிறந்து இரண்டு வயதில் எடுத்த புகைப்படம். இப்போது பத்து ஆண்டுகளை கடந்து விட்டது. பள்ளிக்கூடம் செல்கிறான், நன்றாக ஓடியாடி விளையாடுகிறான். அப்பா விக்னேஸ்வரன் வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்த்து வந்த பிறகு தற்போது ஊரிலேயே விவசாயம் செய்கிறார். கடந்த பத்து ஆண்டுகளில் விவசாய பணிகளுக்கு மழைப் பொழிவு தங்கு தடையின்றி கிடைப்பது பெரும் பாக்கியமாக அமைந்துள்ளது.
Thursday, January 5, 2023
முகநூல் பையன் மார்க் சக்கர்பெர்க் @மார்க் ஆண்டனி..
பதினோரு வருடங்களுக்கு முன்பு 2004ம் வருடம், பிப்ரவரி 4 தினமாக.. உதயமான Facebook @முகநூல் எனும் சமூக வலைதளம், நான்கு வருடங்களில் உலகம் முழுமையும் கோடான கோடி வாசகர்களை தன்னகத்தே ஈர்த்து ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் ஆழிப்பேரலையாக பிரபஞ்சம் முழுவதையும் வாகைசூடியது. வருடங்கள் செல்லச் செல்ல இன்றைய நாளில் ஒவ்வொரு மனிதனும் முகநூலில் முகவரி கணக்கு வைத்திருப்பதை பார்க்கும் வேளையாக, தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்து வந்த இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் நம்முடைய வாழ்க்கையின் சிந்தனை முறைகளில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளதை பார்க்கிறோம்.
புதிய நூற்றாண்டு தொடங்குவதற்கு முந்தைய காலகட்டம் வரையில் கல்லூரியில் படிக்கும்போது வாரத்திற்கு ஒரு கடிதம் எழுதி வீட்டிற்கு அனுப்பி வைப்பது ஒரு பழக்கமாக இருந்தது. மாதத்திற்கு ஒரு முறை விடுமுறையில் வீட்டிற்கு வரும்போது எழுதி அனுப்பிய கடிதத்தின் மூலமாக பெற்றோர்களுடன் எப்போதும்போல பேசிக்கொண்டு இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான உணர்வினை தந்தது. 2005ம் வருடத்தின் பிற்பாதியில் மொபைல் போனுடன் இணைந்த இன்டர்நெட்டின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக வீட்டிற்கு கடிதங்களை எழுதி அனுப்பும் பழக்கமானது, படிப்படியாக குறைந்து போனது. ஏனெனில், மொபைலின் மூலமாக பெரும்பாலான விசயங்களை பேசி விடுகிறோம் எனும்போது கடிதங்களை எழுத வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது.
இலக்கியம், வரலாறு, ஆன்மீகம் சம்பந்தமான புத்தகங்களை நாள்தோறும் தொடர்ச்சியாக படித்து வந்தாலும், ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சியானது எதிர்கால இளைய தலைமுறையின் கற்பனை சக்தி, புதிதாக உருவாக்கும் திறன்களை மழுங்கடிக்கச் செய்துவிடுமோ..? என்ற அச்சம்கூட உருவானது. இதைப் பற்றி அதிகமாக நினைப்பதைவிட கணிப்பொறி அறிவியல் படித்த நம்முடைய சிந்தனைகளை எழுத்து, பேச்சு மூலமாக உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சி செய்வோம் என இதற்கு செயல்வடிவம் கொடுக்க யோசனை செய்து கொண்டிருந்த சமயமாக, 2010ம் வருடம் தொடங்கி ஜூன் மாதமாக, கோவை நகரில் நடைபெற இருந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் உற்சாகமுடன், கோவை நகரிலிருந்து சிறுவாணி செல்லும் சாலையில் செல்வபுரம் ஊரில் வசிக்கும் நண்பர் பேரெழில்குமரன் கூகுளின் வலைப்பூவில் நினைவுக் குறிப்புகளை எழுதும் பயிற்சிக்கு கிரியா ஊக்கியாக இருந்தார். வலைப்பூவின் மூலமாக எழுத்து எனும் பயணத்தினை தொடங்கியது.
Wednesday, January 4, 2023
மார்க் ஆண்டனி எனும் மார்க்கண்டேய நடிகன்..
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் எட்டையாபுரம் செல்லும் சாலையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு நேராக நடக்கும் பாதையில் வலது புறமாக உள்ள வணிகவரித் துறை அலுவலக வளாகத்தில் பெரிய வேப்ப மரத்தின் கீழே உள்ள கோவிலில் அருள்புரியும் ஸ்ரீவரசக்தி விநாயகர் கோவிலின் சந்நிதியில் அமர்ந்து 1996ம் வருடம் தொடங்கி 1997ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் உட்கார்ந்து படித்த வேளை, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல பலன்கள் கிடைத்தது.
பதினொன்றாம் வகுப்பில் கணித பாடப்பிரிவில் சேர்ந்து படித்தால் கல்லூரி படிப்பில் பொறியியல், கணிப்பொறி வகுப்பை தேர்ந்தெடுத்து படிக்கும் வாய்ப்பு உள்ளதாலே கணித பாடத்தில் பெரிதாக விருப்பம் இல்லாமல் இருந்தும் அப்பாவினுடைய அன்பு கட்டளை மற்றும் தொந்தரவு காரணமாக +1 வகுப்பில் கணித பாடப்பிரிவில் சேர்ந்தது. என்னுடைய அன்புச் சகோதரியும் கழுகுமலை ஊரிலுள்ள கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வந்து +1 வகுப்பில் சேருவார் என எதிர்பார்க்காத நேரத்தில் கழுகுமலைக்கே வந்தார்.
கழுகுமலை அரசு பள்ளி கணித வகுப்பில் என்னை சேர்த்து மொத்தம் பதினேழு மாணவர்களில் இரண்டு பெண்கள் என பதினைந்து பேர்கள் பையன்களாக இருந்தோம். கரடிகுளம் ஊரிலிருந்து படிக்க வந்த ராஜ்குமார் என்னுடைய குடும்பத்தின் விறகு வியாபாரத்தை பார்க்க போகிறேன் என்று பள்ளியில் சேர்ந்த ஐந்து மாதத்திலே மாற்றுச் சான்றிதழை வாங்கி சென்று விட்டான். ராஜ்குமார் சென்ற இரண்டு மாத கால இடைவெளியில் ஒரு மாணவன் வந்து சேர்ந்த பிறகு பதினேழு என்ற வகுப்பு எண்ணிக்கை சமன் செய்தது.
மாலை வேளை 04:30 மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்த பின்பு கழுகுமலை ஊரின் சார்பதிவாளர் அலுவலகம் அருகிலுள்ள அரசு நூலகத்தில் அரை மணி நேரம் பத்திரிகை, புத்தகம் என வாசிக்கத் தொடங்கி பின்பு ஒரு மணி நேரமாக நூல்களை படித்தது.
கல்யாண கிருஸ்ணமூர்த்தி எனும் அமரர் கல்கி எழுதிய சிவகாமியின் சபதம், "பொன்னியின் செல்வன்" போன்ற வரலாற்று நாவல்களை +1 +2 வகுப்பு படித்த இரண்டு வருடங்களில் மூன்று முறை படித்தது. விகடன் பத்திரிகை குழுமத்திலிருந்து வரும் இதழ்களை கழுகு பார்வையில் பார்க்கையில் முக்கியமான கட்டுரைகளை படித்து குறிப்புகளை எடுத்துக் கொள்வது, சுவராஸ்யமான அனுபவமாக இருந்தது. பள்ளி பாட புத்தகங்களை பள்ளியிலும், வீட்டிலும் மட்டுமே படித்தாலும், அரசு நூலகத்தில் வாசித்த பல்வேறு விதமான புத்தக அறிவின் மூலமாக +2 வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பிறகு நல்ல பலன்கள் கிடைத்தது.
இதே அரசு பள்ளியில் ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரையிலும் படித்து என்னுடன் +1 +2 வகுப்பில் இணைந்து படித்த நண்பன் ராஜேஸ்வரன்.. +2 பொதுத் தேர்வில் 758 மதிப்பெண்கள் எடுக்க எனக்கு 757 மதிப்பெண்கள் பெற்றதை பார்த்தபோது, சென்னை நகரில் அண்ணா சாலையிலுள்ள @விகடன் பத்திரிகை அலுவலகத்தின் முகவரி எண்: 757 என்பதே.. +2 தேர்வு மதிப்பெண்ணாக அமைந்ததை கண்டு வியப்பாக இருந்தது.
இரண்டு வருடங்கள் எங்களுக்கு கணித பாடத்தினை நடத்திய ஆசிரியர் செல்வராஜ், கொஞ்சம் அக்கறையுடன் இன்னும் நன்றாக படித்திருந்தால் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேலாக எடுத்திருக்கலாம் என நோட்டீஸ் போர்டில் மதிப்பெண்களை பார்த்துக் கொண்டிருந்த எங்கள் இருவரிடமும் சொன்னபோது, இந்த அளவிற்கு அதிகமான மதிப்பெண்களை எப்படி எடுத்தோம் என நானும் ராஜேஸ்வரனும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தோம். இப்படியாக, பாட புத்தகங்களுடன் இலக்கியம், வரலாற்று புதினங்கள், ஆன்மீக நூல்கள், புராண நூல்களுடன் வாசிப்பு பயணம் நெடும் பயணமாக தொடர்ந்து கொண்டே இருந்தது.
புகைப்படம்: அமெரிக்கா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடியின் தனிச் செயலாளராக வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த தியோடர் சோரன்ஷன் எழுதிய ஜான் கென்னடி பற்றிய பயோகிராஃபி புத்தகத்தினை 2019ம் வருடம், ஆகஸ்ட் மாதமாக.. மெட்ராஸ் நகரின் எழும்பூரிலுள்ள கன்னிமாரா நூலகத்திற்கு சென்றபோது புத்தகத்தினை தற்செயலாக பார்த்து முக்கியமான குறிப்புகளை படித்த பின்பு கடைசி பக்கத்தினை பார்த்த வேளை பக்கம் எண்: 758 என பள்ளி வகுப்பு நண்பன் ராஜேஸ்வரனுடைய +2 மதிப்பெண்ணாக இருந்ததை கண்டு வியப்பாக இருந்தது.
Tuesday, January 3, 2023
சக்கரங்களின் சுழற்சிபோல நாட்களின் தொடர்ச்சியான நினைவுகள்..
ஒரு ஊரில் பள்ளிக்கூடமும், கோவிலும் கட்டாயமாக இருக்க வேண்டும் எனச் சொல்லுவார்கள். ஊரில் வாழும் மக்களின் சாதி, சமயங்களைப் பொறுத்து இந்து கோவிலுடன் இணைந்த சிறு தெய்வங்களின் கோவிலோ, தேவாலயமோ, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் மசூதியோ அமையப் பெறுகிறது. என்னுடைய வீட்டுக்கு அருகில் இந்து துவக்கப் பள்ளி இருந்தது. கோவில்பட்டி நகருக்குச் செல்லும் சாலையில் முத்தாலம்மன் கோவில், காளியம்மன் கோவில் இருந்தது. பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கலாம். ஊரில் ஜமீன்தார் வீடு என்று அழைக்கப்படும் ராமலிங்கசுவாமி நாயக்கர் அவர்களுடைய குடும்பத்தினர் பள்ளிக்கூடத்தின் நிர்வாகத்தினை மேற்கொண்டனர். அரசு உதவி பெரும் பள்ளியாக செயல்பட்டது. 1987ம் வருடமாக, நான் ஒன்றாம் வகுப்பில் இந்து துவக்கப் பள்ளியில் சேர்ந்தபோது ராமலிங்கசாமி அவர்களின் மகனான விஸ்வாமித்திரன் அவர்கள், ஊரினுடைய பஞ்சாயத்து தலைவராக பொறுப்பிலிருந்து பள்ளிக்கூட நிர்வாகத்தையும் கவனித்து வந்தார்.
ஊரிலிருந்து தெற்கு திசையில் கழுகுமலை ஊருக்குச் செல்லும் சாலையில் நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ராமநாதபுரம் ஊரிலிருந்து பள்ளிக்கு வருகை தந்த வாத்தியாரை "ராமநாதபுரம் வாத்தியார்" என்றே அழைத்துப் பழகியதால், இவருடைய பெயர்கூட சரியாக தெரியாமல் போனது. ஆசிரியர், பாலசுப்பிரமணியன், டீச்சர் கிருஸ்ணவேணி இருவருமே கோவில்பட்டி நகரிலிருந்து பயணமாக ஊருக்கு வந்து பள்ளியில் பணிபுரிந்தனர். ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒவ்வொரு வருடமாக ஐந்தாம் வகுப்பு வரையிலும் படித்தபோது, ஒவ்வொரு வருடமும் கடந்து செல்வதே தெரியவில்லை. பெரிதாக ரிஸ்க் எடுத்து படிக்கும் அளவுக்கு தேர்வு முறைகள் இல்லாததால், இங்கிலீஷ், கணிதம், அறிவியல் படிப்பினை வாசித்தவாறே விருப்பத்துடன் படித்தது.
பள்ளிக்கூடத்தின் எதிர்புறமாக பெரிய கனவு வீட்டினை அப்பா ராமகிருஸ்ணன் அவர்கள் கட்டத் தொடங்கி அஸ்திவாரம் போடப்பட்டு இடுப்பளவு உயரத்தில் சுவர் எழும்பி நின்றது. மாலை வேளையாக, இந்த அஸ்திவார தளத்தில் அமர்ந்து கொண்டு அப்பாவுடன் ரேடியோ கேட்கையில், இலங்கை வானொலியில் விடுதலை புலிகள் அமைப்பினர் மேற்கொள்ளும் போர்க்களம் நிலவரம் பற்றிய செய்திகளை கேட்டுக் கொண்டே சினிமாப் பாடல்களை கேட்பது பழக்கமாக இருந்தது. இரண்டு மணி நேரம் புதிய விசயங்களை கேட்ட திருப்தியுடன், ஒரு மணி நேரம் கதை புத்தகங்களை படித்த பின்பு உறங்கச் சென்று விடுவது ஒரு சக்கரத்தின் சுழற்சிபோல இருந்தது.
ஏப்ரல் 25 பிறந்த நாளுடன் ஊரிலுள்ள இந்து துவக்கப் பள்ளியில் படித்த 1987ம் வருடத்திலிருந்து 1992ம் வருடத்தின் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் இங்கிலீஸ் படிப்பிற்கான அடித்தளம் குறைவாகவே அமைந்து, 1995ம் வருடத்திற்கு பிறகே ஆங்கிலத்தின் மீதான நாட்டமும், விருப்பமும் அதிகமாகத் தொடங்கியது. கோவில்பட்டி நகரில் வசிக்கும் வழக்கறிஞர் பெரியப்பா அய்யலுசாமி அவர்கள் வீட்டிற்கு விடுமுறை நாட்களில் செல்லும் வேளை, சேட்டிலைட் சேனலில் இங்கிலீஸ் படங்களை பார்ப்பதன் மூலமாக ஆங்கில அறிவினை புதிய முறையில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.
புகைப்படம்: 2009ம் வருடம், தருமபுரி மாவட்டத்தில் உள்ள நண்பன் ராஜாவின் ஊரான நெருப்பூருக்குச் சென்று "மக்கள் சமூக முன்னேற்றக் கழகம்" எனும் இளைஞர்களுக்கான அமைப்பின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்பு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எழுதிய "சத்திய சோதனை" நூலினை அன்பளிப்பாக கொடுத்த வேளை பெற்றுக் கொண்டது. நண்பன் ராஜா, தற்போது மத்திய அரசில் சிபிஐ(CBI) அதிகாரியாக பணிபுரிகிறார்.
Monday, January 2, 2023
சூரியனைப் போன்று அஸ்தமனம் ஆகிப்போன நூலகம் எனும் கருவறை..
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக ஊரிலுள்ள மக்களிடம் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் பெரிதாக தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. புரட்சி நடிகரான எம்.ஜி.ராமச்சந்திரனின் தீவிரமான ரசிகர்களாக இருப்பவர்கள், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் முக்கிய உறுப்பினர்களாக அங்கம் வகித்து தேர்தல் நடைபெறும் சமயங்களில் நன்றாக பணி செய்வார்கள். திராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல், இடைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறும் சமயங்களில் பரபரப்பாக பணி செய்வார்கள். இப்படியாக, அரசியல் கட்சியில் தீவிரமாக பணி செய்பவர்கள் எழுத்தாளர், பேச்சாளர் எனும் அந்தஸ்திற்கு எவருமே உருவாகவில்லை. இருபதாம் நூற்றாண்டு தொடங்கிய காலம் முதலாக ஊரிலிருந்த பெரும்பாலான மக்கள் விவசாயம் சார்ந்த பணிகளை செய்வதில் மட்டுமே கண்ணும், கருத்துமாக இருந்த காரணத்தால், இருபதாம் நூற்றாண்டின் ஐம்பது வருடங்களை கடந்து பிறகான முப்பது வருடங்களை கடந்த பின்பும் அரசியல் பெரிதாக புதிய தலைமுறையிடம் எந்த விதமான தாக்கத்தினையும் ஏற்படுத்தவில்லை.
ஊரில் ஆரம்ப பள்ளிக்கூடம் இருந்ததுபோல, நூலகமோ கிளை நூலகமோ உருவாகவில்லை. 1996ம் வருடம், ஊரிலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளை நூலகம் ஒன்றினை தொடங்குவதற்காக நிறைய புத்தகங்கள் வாங்கப்பட்டு அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. ஏழு மாத காலகட்டத்தில் நூலகம் உருவாகுவதற்கான அறிகுறியே இல்லாமல் மறைந்து போனது. நூலகம் அமையப் பெற்று பத்திரிகைகள், புத்தகங்களை குழந்தைகளும் பையன்களும் வாசிக்கத் தொடங்கும்போது, அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான படிப்பினைகள் மெல்ல மெல்ல உருவாகத் தொடங்கும். குறைந்த பட்சமாக.. தினசரி பத்திரிகைகளை படிப்பதற்கென்று ஒரு படிப்பகம்கூட உருவாகவில்லை. அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்களின் பெயரில்கூட ஒரு படிப்பகம் தொடங்கி பத்திரிகைகளை கொண்டு வாருங்கள் என்று பெரியப்பா ராமசாமி அவர்களிடம் வற்புறுத்தி சொல்லியும் காரியம் பெரிதாக கைகூடவில்லை.
ஊரிலிருந்து தெற்கு திசையில் மூன்று கிமீ தொலைவிலுள்ள துரைச்சாமிபுரம் ஊரில் 1995ம் வருடத்தில் கிளை நூலகம் ஒன்று உருவாகி இன்று வரையிலும் சிறப்பாக செயல்படுவதை, அந்த ஊரின் வழியாக பயணம் செய்கையில் பார்க்கும்போது வியப்பாக இருக்கும். நூலகர் விடுமுறை எடுத்து அன்றைய தினம் வரவில்லை என்றாலும், பெரிய மனிதர்கள் தினசரி பத்திரிகைகளை எடுத்து படித்துக் கொண்டு இருப்பதை சில நேரங்களில் பார்க்க முடிந்தது. இந்த ஊரிலிருந்து கோவில்பட்டி நகரில் பசுவந்தனை சாலையில் உள்ள நாடார் மேல்நிலை பள்ளியில் 1992ம் வருடம் தொடங்கி 1994ம் வருடம் வரையில் 1, +2 வகுப்பு படித்த அண்ணன் ரமேஸ் அவர்கள், இங்கிலீஷில் சரளமாக பேசுவதை கேட்பதற்கே வியப்பாக இருக்கும். சிவபெருமானின் லிங்கத்தைப்போல அண்ணன் ரமேஸ்.. பள்ளிக்கூடத்தில் உள்ள நூலகத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து படிப்பதை பார்க்கும் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இவருடைய ஊரில் நூலகம் தொடங்குவதற்கு அண்ணன் ரமேஸ் அவர்களே கிரியா ஊக்கியாக இருந்ததை 1999ம் வருடத்திலே அறிந்தபோது வியப்பாக இருந்தது. எங்கள் ஊருக்கு ஒரு நூலகம் வேண்டும் என்று மெட்ராஸ் நகரிலுள்ள மாநில நூலக இயக்குநருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். இந்த ஒரு கடிதமே துரைச்சாமிபுரம் ஊருக்கு நூலகம் வருவதற்கு அடித்தளமாக அமைந்ததை கண்டது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு தொடங்கிய பிறகு எங்கள் ஊருக்கு ஒரு நூலகம் வேண்டும் என்று அண்ணன் ரமேஸ் எழுதிய கடிதம்போல மாநில நூலக இயக்குநருக்கு கடிதம் அனுப்பியதற்கு பலன்கள் கிடைக்கப்பெற்றும், ஊரிலுள்ள மக்களிடம் புத்தங்கங்களை படிப்பதற்கு பெரிதாக ஆர்வம் இல்லாத காரணத்தால், நூலகம் வந்த வேகத்திலே மறைந்து போனது.