Wednesday, February 26, 2025

2024ம் வருடத்தின் விவசாயப் பணிகளின் ஊடாக மக்களின் போராட்டம் மிகுந்த வாழ்க்கை..

கடந்த வருடம் விவசாய பணிகளுக்கான வேலைகள் உழவு எந்திரமான டிராக்டரினை கொண்டு கரிசல் காட்டு மண்ணில் உழவு அடிக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்தனர். பருவ மழையினை நம்பி விதைகளை நடவு செய்வதுபோல, இந்த வருடமும் விதைகளை நடவு செய்யும் பணிகள் நல்ல மகசூலினைத் தரும் விதைகளை கொண்டே நடவு செய்யப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் தேவையான அளவிற்கு மழை பெய்யாமல் குறைந்த அளவு மழையே பெய்து விதைகளுக்கு சேதாரம் விளைவித்த காரணத்தால், நடவு செய்யப்பட்ட விதைகளை அழித்துவிட்டு இரண்டாவது முறையாக உழவு அடித்து விதைகளை நடவு செய்தனர். உளுந்தம் பயிறு, மக்காச்சோளம், பருத்தி இவைகளே தொண்ணூறு(90%) சதவீதம் மேலாக ஊரிலுள்ள விவசாயம் செய்யும் மக்களால் பயிர் செய்யப்பட்டு அறுவடை ஆகிறது. 

மேற்கு திசை மூலக்காடு, தென்கிழக்கு மூலைகாடுகளில் சிற்சில இடங்களில் இரண்டாவது நடவு செய்த விதை பயிர்களுக்கு தேவையான அளவு மழை பெய்யாமல், மூன்றாவது முறையாக விதைகளை நடவு செய்யும் பட்சத்தில் கூடுதலான பொருளாதாரச் செலவுகள் ஏற்படுகிறது என்பதை பார்க்கிறோம். சில வாரங்களில் பருவ மழை பெய்யத் தொடங்கி அனைத்து விதமான பயிர்களும் வளரத் தொடங்கியது. 

இத்தகைய சூழலில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ம் தேதி தொடங்கி டிசம்பர் 14ம் நாள் வரையில் இருபத்தி எட்டு மணி நேரமாக பெய்த கனமழையால் மக்காச்சோளம் பயிர்கள் நன்றாக வளர்வதற்கான அடித்தளம் அமைந்தது. 2023ம் வருடம், டிசம்பர் 17 அன்று நண்பகல் ஒரு 01:00 மணிபோல பெய்யத் தொடங்கிய பெருமழை, மறுதினம் டிசம்பர் 18 அன்று காலை வரையிலும் பெய்து ஊரிலுள்ள குளம் நிரம்பி மாறுகால் செல்லும் பொழுதாக, எட்டு மணி அளவில் வானம் கும்மிருட்டாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் ஒரு சொட்டு மழைகூட பெய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. இதேபோல அதிக கனமழைதான் கடந்த 2024ம் வருடத்தின் டிசம்பரில், மூன்று நாட்களுக்கு முன்பாக பெய்து பொதுமக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருந்தது. 

அக்டோபர் மாதம் பெய்ய வேண்டிய பருவ மழை பெய்யாமல் போக்குகாட்டிக் கொண்டே இருந்த வேளை, அக்டோபர் மாதத்தின் கடைசி தினமாக பெருமழையாக பெய்து மக்களை நிம்மதி பெருமூச்சினை அடையச் செய்தது. மக்காச்சோளம், உளுந்துப் பயிருக்கான அறுவடைப் பணிகள் தை திருநாளுக்குப் பிறகான நாட்களில் வேகமாக நடைபெறத் தொடங்கியது. 

மக்காச்சோளம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2700/- எனவும், உளுந்தம் பயிறு குவிண்டாலுக்கு ரூ.7000/- எனவும், இந்த வருடம் மார்ச் மாதத்தின் முதல் வாரமாக வேளாண்மை சந்தையில் விலை நிர்ணயமாக இருப்பதை அறிய முடிந்தது. மார்ச் மாதம், முதல் வாரம் நிலவரப்படி உளுந்தம் பயிறு அறுவடைப் பணிகள் முழுமையாக முடிவடைந்து, மக்காச்சோளம் அறுவடை மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. மக்காச்சோளம் ஒரு ஏக்கருக்கு இருபது முதல் இருபத்தி ஐந்து குவிண்டால் வீதம் மகசூலினை பெற்றுள்ளது.

Thursday, January 2, 2025

வாசிப்பு பழக்கத்தின் மூலமாக எழுதும் கலையினை கற்றுக் கொள்ளுதல்..

2016ம் வருடமாக, பிப்ரவரி மாதத்தில் மெட்ராஸில் ராமாபுரத்தில் வசிக்கும் நண்பன் ராமகிருஷ்ணன் இந்த வலைப்பூவில் எழுதப்பட்ட கட்டுரைகளை வாசித்தபோது, எனது  பார்வையிலிருந்து சொல்லப்படும் நினைவுக் குறிப்புகள் ஆரம்ப நிலையில் நன்றாக உள்ளது. இடைசெவல் ஊரில் பிறந்து புதுச்சேரியில் வசிக்கும் கரிசல் இலக்கிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதிய  நூல்களையும், பசுமை விகடன் இதழ்களையும் தொடர்ச்சியாக படித்து வரும் பட்சத்தில், ஊரில் நடைபெறும் விவசாயப் பணிகள் சார்ந்த துல்லியமான, நுட்பமான விசயங்களை நன்றாக எழுத முடியும். பத்து வருடங்களுக்குப் பிறகு பார்க்கையில், செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தப்போகும் உலகத்தில் இந்த கிராமத்து வலைப்பூவில் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைவரிடமும் கவனம் பெறக்கூடும் என்ற விசயத்தை தீர்க்கதரிசனமாக சொல்லி ஊக்கப்படுத்தினார்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான கோவை நகருக்கு வந்து காளப்பட்டி ஊருக்குச் செல்லும் சாலையிலுள்ள நல்லாம்பாளையம் பழனிசாமி கவுண்டர் என்ற பெயரில் செயல்படும் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை கணினி வகுப்பில் சேர்ந்து படிக்கையில், கணிப்பொறி பாடங்களுடன் இலக்கியம், வரலாறு, அறிவியல் புனைகதை, ஆன்மீகம் சம்பந்தமான புத்தகங்களுடன் விகடன், குமுதம், இந்தியா டுடே போன்ற பத்திரிகை குழுமத்திலிருந்து வெளிவரும் வார இதழ்களை படிப்பது ஆரம்ப நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறி இருபது வருட காலகட்டங்களில் பல்வேறு விசயங்களை கற்றுத் தந்துள்ளதை நினைத்து பிரமிக்க வைத்தது. நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் பல்வேறு விதமான துன்பகரமான விசயங்கள், சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அத்தகைய தீமைகளை வேருடன் பிடுங்கி எறிந்து எதிர்கால சமுதாய குழந்தைகளுக்கு நம்மால் இயன்ற ஒரு சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பு 2008ம் வருடத்தின் ஆரம்ப காலகட்டத்திலே உருவானது, கிரியா ஊக்கியாக அமைந்தது. 


விகடன் பத்திரிகை குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளிவரும் பசுமை விகடன் இதழானது, எண்பதிலிருந்து(80) எண்பத்தி ஐந்து(85) பக்கங்களை கொண்டதாக வேளாண்மை உற்பத்தியில் சாதிக்கும் மனிதர்களின் நேர்காணல்கள், பல்வேறுவிதமான பயிர் சாகுபடியில் கடைபிடிக்கும் முறைகளை அவர்களே செய்முறை விளக்கங்களுடன் சொல்லுவதை படிக்கையில், குளக்கட்டாக்குறிச்சி ஊரில் பருவ மழையை நம்பி கரிசல் பூமியில் மானாவரி விவசாயம் செய்யும் பணிகளுடன் ஒப்பீடு செய்து பார்க்க முடிந்தது. ஆடு, கோழிகள், வாத்து, முயல், காடை போன்ற சிறு விலங்கு பிராணிகளை வளர்த்து பெருவாரியான லாபத்தினை பார்க்கும் மனிதர்களுடைய சாதனைகளை பேசும் கட்டுரைகள், நம்முடைய ஊரில் ஆடு, கோழிகளை எப்படியாக வளர்த்து லாபம் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஆக, தொடர்ந்த வாசிப்பு பழக்கமும், சிந்திக்கும் திறனும் இருந்தால் மட்டுமே இந்த வலைப்பூவில் டைரி குறிப்புகளைபோல தொடர்ச்சியாக விசயங்களை எழுதிக் கொண்டிருக்க முடியும் என்பதை அகத்தில் உணர முடிந்தது. இத்தைகைய நினைவுகளை டிஜிட்டலின் மூலமாக மற்றவர்களுக்கு பகிரப்படும் வேளையில், நம்முடைய மனதையும் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள பேருதவி செய்கிறது. 

புகைப்படம்: கடந்த வருடம் அக்டோபர் 10 நாளின் தேதியுடன் வெளியான பசுமை விகடன் இதழின் அட்டைப் படம்.

Wednesday, January 1, 2025

அறுவடை எந்திரங்களின் வரவு..

எனது தாயின் கருவிலிருந்து நான் குழந்தையாக பிறந்த 1982ம் வருடம் தொடங்கி பத்து வருட காலகட்டத்தில் கரிசல் காட்டு மண்ணில் வேளாண்மை பணிகளைச் செய்யும் விவசாய மனிதர்களுக்கு கடினமான பணியாகவே இருந்தது. வெள்ளை நிறத்தில் யானையின் தந்தத்தினை போன்று இரண்டு கொம்புகளை வைத்துக் கொண்டு சாதுவான குணத்துடன், இந்த நாட்டு மாடுகளை பராமரிக்கும் மனிதர்கள் சொல்லும் வேலைகளை எந்த விதமான எதிர்ப்புகளுமின்றி சக்கர வண்டியில் மூட்டைகள், உரங்களை எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளை செய்வதை பார்ப்பதற்கே ஒருவிதமான பரவசமான அனுபவமாக இருக்கும். வரப்பு அடித்த பிறகு விதைகளை நடுவதற்கு இரண்டு மாடுகளை கொண்டு நடுவினில் ஏர் கலப்பையினை கட்டி வைத்து இந்த கலப்பையின் மீது இரண்டு கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டு பாய்.. பாய்.. எனச் சொல்லிக் கொண்டே போகையில், பின்னால் வரும் வேலையாட்கள் விதைகளை நடவு செய்துகொண்டே வருவார்கள். 

விதைகளை நடவு செய்த பிறகு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள்ளாக நல்ல மழை பெய்ய வேண்டும். ஒரு வார காலம் தாமதமானால் நடவு செய்த விதைகளை அழித்துவிட்டு மீண்டும் விதைகளை நடவு செய்ய வேண்டும். இந்த சமயத்தில் விவசாய பெருமக்களுக்கு கூடுதலாக செலவு செய்த சுமையும் ஏறிக்கொள்கிறது. கடந்த 2024ம் வருடத்தில், விதைகளை நடவு செய்த பிறகு மழைப் பொலிவு இல்லாமல் இரண்டு, மூன்று முறைகள் விதைகளை நடவு செய்த துன்பகரமான காலகட்டமாக அமைந்தது. களை  எடுத்தல், அறுவடை செய்தல் என பருத்தி, உளுந்தம் பயிறு, பாசிப் பயிறு, மக்காச்சோளம், சூரியகாந்தி, நிலக்கடலை, அவுரி என அனைத்து விதமான வெள்ளாமையை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பதற்குள்ளாக கடினமான பணியாக இருக்கும்.

மேலே சொன்னதுபோல, விவசாயம் செய்யும் ஊரில் வாழும் மனிதர்களுக்கு கடினமான பணிச்சுமைகள் இருப்பதை பார்க்கும் வேளை, என்னுடைய அப்பா ராமகிருஸ்ணன் அவர்கள், காட்டிற்கு வந்து விவசாய வேலைகளில் ஒத்தாசையாக இருப்பதற்கும்,சின்ன சின்ன உதவிகளை செய்வதற்கும் அவசியம் வரவேண்டும் என்று சொல்லி கட்டாயப்படுத்தமாட்டார். தண்ணீர் குடிப்பதற்கு இரண்டு குடங்களை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு காட்டிற்குச்  செல்லுதல், தேநீர் மற்றும் உணவுகளை கொடுப்பதற்கு மட்டுமே பெரும்பாலான நேரங்களில் செல்வது உண்டு. பள்ளிப் பாடங்களை நன்றாக படித்து, நல்ல மதிப்பெண்களை எடுக்க வேண்டும். இத்தகைய கஷ்டமான விவசாய வேலைகள் எங்களுடனே இருக்கட்டும் எனச் சொல்லுவார்.

2010ம் வருட காலகட்டத்த்தில், விவசாய பணிகளை செய்வதற்கு அனைத்து விதமான எந்திரங்களும் வரத்தொடங்கி பெரிய நில உடமைகளுக்கு உரிமையாளராக அப்போது இருந்த கந்தசாமி நாயக்கர் அவர்களுடைய வீட்டில் மக்காச் சோளம் அறுவடை எந்திரம், உழவுப் பணிகளை செய்யும் எந்திரம் என்று மூன்றுக்கும் மேற்பட்ட எந்திரங்களை இவருடைய வீட்டிற்கு அருகே கிணற்றிலிருந்து அருகிலுள்ள பெரிய காலி இடத்தில் கம்பீரமாக நின்று கொண்டு இருப்பதை பார்த்தது. பன்னிரெண்டு லட்சம், இருபது லட்சம் மதிப்புடைய அறுவடை மற்றும் விவசாய எந்திரங்களை வாங்கியுள்ளோம் என கந்தசாமி அவர்களின் மூத்த மகனும், எனது சிறுவயது நண்பனுமான ராஜேஸ்கண்ணன் சொன்னார். ராஜேஸ்கண்ணனுடைய வீட்டில் இரண்டு, மூன்று டிராக்டர்கள் எப்போதுமே நின்று கொண்டு இருக்கும்.

நான் பிறந்த 1982ம் வருடம் தொடங்கி ஒவ்வொரு பத்து வருடங்களிலும் விவசாயம் செய்வதில் ஏற்பட்ட தொழிற் புரட்சிகள், ஊரில் வாழும் மக்களுடைய வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கியது. அறுவடை எந்திரங்களுடைய வருகையினால், விவசாயப் பணிகளில் கடுமையான வேலைப்பாடுகள் குறைந்து முப்பது, ஐம்பது, நூறு ஏக்கர்களில் விவசாயம் செய்யும் அளவிற்கு பெரிய அளவிலான பொருளாதார முதலீடுகளுடன் வேளாண்மைப் பணிகளைச் செய்யும் உற்சாகம் கரிசல் காட்டினை நம்பி வாழும் விவசாயப் பெருமக்களிடம் உருவானது. 

புகைப்படம்: 2024ம் வருடம், பிப்ரவரி தினமாக.. கழுகுமலை ஊருக்குச் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்த மக்காச்சோளம் அறுவடை செய்யும் எந்திரத்தினை மொபைலில் புகைப்படம் எடுத்தது.