நமது கிராமம் குளக்கட்டாக்குறிச்சி
2014ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் மத நல்லிணக்க விருது பெற்ற கிராமம். காலம் சென்ற நமது கிராமத்தின் முன்னோர்களுக்கும், வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கும் இந்த கிராமத்து வலைப்பூ சமர்ப்பணம்..
Wednesday, February 26, 2025
2024ம் வருடத்தின் விவசாயப் பணிகளின் ஊடாக மக்களின் போராட்டம் மிகுந்த வாழ்க்கை..
Thursday, January 2, 2025
வாசிப்பு பழக்கத்தின் மூலமாக எழுதும் கலையினை கற்றுக் கொள்ளுதல்..
Wednesday, January 1, 2025
அறுவடை எந்திரங்களின் வரவு..
எனது தாயின் கருவிலிருந்து நான் குழந்தையாக பிறந்த 1982ம் வருடம் தொடங்கி பத்து வருட காலகட்டத்தில் கரிசல் காட்டு மண்ணில் வேளாண்மை பணிகளைச் செய்யும் விவசாய மனிதர்களுக்கு கடினமான பணியாகவே இருந்தது. வெள்ளை நிறத்தில் யானையின் தந்தத்தினை போன்று இரண்டு கொம்புகளை வைத்துக் கொண்டு சாதுவான குணத்துடன், இந்த நாட்டு மாடுகளை பராமரிக்கும் மனிதர்கள் சொல்லும் வேலைகளை எந்த விதமான எதிர்ப்புகளுமின்றி சக்கர வண்டியில் மூட்டைகள், உரங்களை எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளை செய்வதை பார்ப்பதற்கே ஒருவிதமான பரவசமான அனுபவமாக இருக்கும். வரப்பு அடித்த பிறகு விதைகளை நடுவதற்கு இரண்டு மாடுகளை கொண்டு நடுவினில் ஏர் கலப்பையினை கட்டி வைத்து இந்த கலப்பையின் மீது இரண்டு கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டு பாய்.. பாய்.. எனச் சொல்லிக் கொண்டே போகையில், பின்னால் வரும் வேலையாட்கள் விதைகளை நடவு செய்துகொண்டே வருவார்கள்.
விதைகளை நடவு செய்த பிறகு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள்ளாக நல்ல மழை பெய்ய வேண்டும். ஒரு வார காலம் தாமதமானால் நடவு செய்த விதைகளை அழித்துவிட்டு மீண்டும் விதைகளை நடவு செய்ய வேண்டும். இந்த சமயத்தில் விவசாய பெருமக்களுக்கு கூடுதலாக செலவு செய்த சுமையும் ஏறிக்கொள்கிறது. கடந்த 2024ம் வருடத்தில், விதைகளை நடவு செய்த பிறகு மழைப் பொலிவு இல்லாமல் இரண்டு, மூன்று முறைகள் விதைகளை நடவு செய்த துன்பகரமான காலகட்டமாக அமைந்தது. களை எடுத்தல், அறுவடை செய்தல் என பருத்தி, உளுந்தம் பயிறு, பாசிப் பயிறு, மக்காச்சோளம், சூரியகாந்தி, நிலக்கடலை, அவுரி என அனைத்து விதமான வெள்ளாமையை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பதற்குள்ளாக கடினமான பணியாக இருக்கும்.
மேலே சொன்னதுபோல, விவசாயம் செய்யும் ஊரில் வாழும் மனிதர்களுக்கு கடினமான பணிச்சுமைகள் இருப்பதை பார்க்கும் வேளை, என்னுடைய அப்பா ராமகிருஸ்ணன் அவர்கள், காட்டிற்கு வந்து விவசாய வேலைகளில் ஒத்தாசையாக இருப்பதற்கும்,சின்ன சின்ன உதவிகளை செய்வதற்கும் அவசியம் வரவேண்டும் என்று சொல்லி கட்டாயப்படுத்தமாட்டார். தண்ணீர் குடிப்பதற்கு இரண்டு குடங்களை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு காட்டிற்குச் செல்லுதல், தேநீர் மற்றும் உணவுகளை கொடுப்பதற்கு மட்டுமே பெரும்பாலான நேரங்களில் செல்வது உண்டு. பள்ளிப் பாடங்களை நன்றாக படித்து, நல்ல மதிப்பெண்களை எடுக்க வேண்டும். இத்தகைய கஷ்டமான விவசாய வேலைகள் எங்களுடனே இருக்கட்டும் எனச் சொல்லுவார்.
2010ம் வருட காலகட்டத்த்தில், விவசாய பணிகளை செய்வதற்கு அனைத்து விதமான எந்திரங்களும் வரத்தொடங்கி பெரிய நில உடமைகளுக்கு உரிமையாளராக அப்போது இருந்த கந்தசாமி நாயக்கர் அவர்களுடைய வீட்டில் மக்காச் சோளம் அறுவடை எந்திரம், உழவுப் பணிகளை செய்யும் எந்திரம் என்று மூன்றுக்கும் மேற்பட்ட எந்திரங்களை இவருடைய வீட்டிற்கு அருகே கிணற்றிலிருந்து அருகிலுள்ள பெரிய காலி இடத்தில் கம்பீரமாக நின்று கொண்டு இருப்பதை பார்த்தது. பன்னிரெண்டு லட்சம், இருபது லட்சம் மதிப்புடைய அறுவடை மற்றும் விவசாய எந்திரங்களை வாங்கியுள்ளோம் என கந்தசாமி அவர்களின் மூத்த மகனும், எனது சிறுவயது நண்பனுமான ராஜேஸ்கண்ணன் சொன்னார். ராஜேஸ்கண்ணனுடைய வீட்டில் இரண்டு, மூன்று டிராக்டர்கள் எப்போதுமே நின்று கொண்டு இருக்கும்.
நான் பிறந்த 1982ம் வருடம் தொடங்கி ஒவ்வொரு பத்து வருடங்களிலும் விவசாயம் செய்வதில் ஏற்பட்ட தொழிற் புரட்சிகள், ஊரில் வாழும் மக்களுடைய வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கியது. அறுவடை எந்திரங்களுடைய வருகையினால், விவசாயப் பணிகளில் கடுமையான வேலைப்பாடுகள் குறைந்து முப்பது, ஐம்பது, நூறு ஏக்கர்களில் விவசாயம் செய்யும் அளவிற்கு பெரிய அளவிலான பொருளாதார முதலீடுகளுடன் வேளாண்மைப் பணிகளைச் செய்யும் உற்சாகம் கரிசல் காட்டினை நம்பி வாழும் விவசாயப் பெருமக்களிடம் உருவானது.
புகைப்படம்: 2024ம் வருடம், பிப்ரவரி தினமாக.. கழுகுமலை ஊருக்குச் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்த மக்காச்சோளம் அறுவடை செய்யும் எந்திரத்தினை மொபைலில் புகைப்படம் எடுத்தது.