சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து விதமான வாக்குப் பதிவும் காளியம்மன் கோவிலுக்கு இடதுபுறமாக உள்ள கட்டிட வளாகத்தில் நடைபெறும். கோவிலை புனரமைத்து புதிதாக கட்ட வேண்டி கடந்த வருடம் காளியம்மன் கோவில் இடிக்கப்பட்டு புதிதாக கட்டிட வளாகப் பணிகள் நடைபெறுவதால், அருகிலுள்ள கட்டிடத்தில் வாக்குப் பதிவு நடைபெறவில்லை. இதற்கு மாற்றாக, கழுகுமலை ஊருக்குச் செல்லும் சாலையிலிருந்து ஐநூறு மீட்டர் தொலைவில் வலதுபுறமாக உள்ள குடியிருப்பில் புதிதாக கட்டப்பட்ட அறையில் ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை காலை வேளை தொடங்கி மாலை வேளை வரை வாக்குப் பதிவு நடந்தது. என்னுடைய வாக்கினை நடுப்பகல் சூரிய வெளிச்சம் பொழுதாகச் சென்று பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினேன். ஸ்ரீராமனின் பெயரை தன்னுடைய பெயரில் கொண்ட தீவிரமான கட்சி நண்பர், எனக்குப் பிறகு வந்து தன்னுடைய வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை செய்ததாக சொல்லி மகிழ்ச்சியுடன் பேசினார்.
நமது கிராமம் குளக்கட்டாக்குறிச்சி
2014ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் மத நல்லிணக்க விருது பெற்ற கிராமம். காலம் சென்ற நமது கிராமத்தின் முன்னோர்களுக்கும், வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கும் இந்த கிராமத்து வலைப்பூ சமர்ப்பணம்..
Saturday, April 20, 2024
Thursday, April 18, 2024
தேர்தலில் ஓட்டுப்போட பணம்..
2012ம் வருடம், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஓட்டுப்போட ஒரு ஓட்டுக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபாயை வீட்டிற்கே வந்து கொடுத்தார்கள். சங்கரன்கோவில் நகரில் பணம் என்பது கங்கை வெள்ளமாக பாய்ந்ததை கண்டு பொது மக்களே பிரமித்து போனார்கள். இதற்குப் பின்னர் 2016ம் வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுக்குப் பணம் கொடுப்பதில் புதிய பரிமாணம் அடைந்தது. 2019ம் வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப்போட ஒரு கட்சி ஐநூறு ரூபாயும், ஒரு கட்சி நூறு ரூபாயும் கொடுத்தது. இரண்டு வருடங்கள் பிறகு 2021ம் வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுப்போட ஒரு கட்சி ஆயிரம் ரூபாயும், ஒரு கட்சி இருநூறு ரூபாயும் கொடுத்தது.
ஐநூறு.. நூறு ரூபாய்.. **ஆயிரம், இருநூறு ரூபாய்.. இந்த இரண்டு வகையான வள்ளல் குணத்திற்கு உண்டான ஒற்றுமையை பார்க்கும்போது ஓட்டுப்போடும் ஏழை, எளிய பாமர மக்களை அரசியல் கட்சியினர் எப்படி புரிந்து கொண்டு செயல்படுகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
Sunday, March 10, 2024
மக்காச்சோளம் அறுவடை..
மக்காச்சோள பயிரில் மகரந்த சேர்க்கை நடைபெறும் டிசம்பர் மாதம் காலத்தில் ஒரே நாளில் சுமார் இருபது மணி நேரம் பெருமழை பெய்த காரணத்தால் மாசி மாதம் நடைபெறும் அறுவடையில் ஏக்கருக்கு பத்து, பதினைந்து, இருபது குவிண்டால் அளவுக்கு மட்டுமே விவசாயிகளுக்கு மகசூல் கிடைத்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஏக்கருக்கு இருபத்தைந்திலிருந்து முப்பது குவிண்டால் வரையில் மக்காச்சோள பயிறு மகசூல் கிடைத்தது. இன்றைய வருடம் குவிண்டாலுக்கு ரூபாய் 2250, 2150 என மக்காச்சோள பயிரின் தரத்தை பொறுத்து இடைத் தரகர்களான வியாபாரிகள் விலைக்கு வாங்குகின்றனர். மார்க்கெட்டில் என்ன விலையோ அந்த விலைக்கு இடைத் தரகர்கள் வாங்குகின்றனர். திடீரென ஏதேனும் ஒரு நாள் மட்டும் குவிண்டாலின் விலையை அதிகரித்து வேண்டியவர்களிடம் பயிறுகளை வாங்கும் நிகழ்வும் நடக்கிறது. 2020ம் ஆண்டில் இப்படியான ரகசிய பேரத்தில் ஒரு வாரம் இடைவெளியில் நாற்பதாயிரம் ரூபாய்க்கு என்னுடைய குடும்பத்திற்கு நஸ்டம் ஏற்பட்டது. கடந்த நான்கு வருடங்களாக விவசாயம் செய்யாத காரணத்தால் இந்த இடைத் தரகர்களின் வியாபார உத்திகளால் எனக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.
Saturday, February 10, 2024
அறுவடை எந்திரங்கள்..
உளுந்துப் பயிறு, மக்காச்சோளம் போன்ற பயிர்களை அறுவடை செய்ய பெரிய எந்திரங்கள் வந்துவிட்ட பிறகு கிராமப்புற ஊர்களில் இளைய தலைமுறை மத்தியில் விவசாயம் செய்வதில் மிகுந்த ஆர்வம் அதிகமாகிவிட்டதை கடந்த ஆறு வருடங்களாக பார்க்க முடிகிறது. இது நல்ல ஆரோக்கியமான விசயமே. இப்போதைய தலைமுறை குழந்தைகள் பொறியியல், கலை அறிவியல். மருத்துவம் போன்ற இளநிலை, முதுகலை படிப்புகளை சர்வ சாதாரணமாக படித்து முடித்து விடுகிறார்கள். சில பத்து வருடங்கள் படித்த படிப்புக்கு வேலை செய்துவிட்டு மீண்டும் பிறந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்வதை பார்க்கையில் வியப்பாக உள்ளது. இத்தகைய ஆர்வத்திற்கு முக்கிய காரணம் அறுவடை எந்திரங்களின் வருகையால் சாத்தியமாகி உள்ளது.
இன்று காலையில் ஊரிலிருந்து இளையரசனேந்தலுக்கு செல்கையில் தருமத்துப்பட்டி ஊரிலிருந்து மேலப்பட்டி ஊரின் வழியாக மக்காச்சோளம் அறுவடை எந்திரம் செல்கையில், கிராமப்புறங்களில் போடப்பட்ட சின்ன சாலை முழுவதையும் ஆக்கிரமித்து இருந்த வேளை, முன்னாலும் பின்னாலும் செல்லும் வாகனங்களால் இந்த அறுவடை எந்திரத்தை விரைவில் கடந்து செல்ல முடியவில்லை. நானும் கடந்து செல்ல பத்து நிமிடங்கள் ஆனது. இது நாள் வரைக்கும் இந்த அறுவடை எந்திரங்களால் எங்குமே விபத்து என்பது ஏற்படவில்லை. மார்ச், ஏப்ரல் மாதம் வரையிலும் சாலைகளில் மக்காச்சோளம் அறுவடை எந்திரங்களின் போக்குவரத்து இருக்கும் என்பதால் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கொஞ்சம் சிரமம் எனச் சொல்லலாம்.
இரவு நேரம் மேலப்பட்டி வழியாக ஊருக்கு வருகையிலும் இந்த மக்காச்சோளம் அறுவடை எந்திரம் வருகை தந்து பயணிகளின் பஸ்ஸிற்கு ஒரு பதினைந்து நிமிடம் காலதாமதம் ஆனது. இருசக்கர டூவீலர் வாகனத்தில் வந்தவர்கள் ஒரு ஓரமாக ஒதுங்க வேண்டி இருந்தது.
Monday, February 5, 2024
புதிய சாலை..
தென் மாவட்டங்களில் கடந்த வருடம் டிசம்பர் 17 தினம் தொடங்கி மறுதினம் காலை வரையிலும் இருபது மணி நேரம் பெய்த பெருமழைக்குப் பிறகு குளக்கட்டாக்குறிச்சி ஊரின் வழியாக கழுகுமலை, நடுவப்பட்டி ஊருக்குச் செல்லும் சிறிய சாலைகள் ஒன்றரை மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்படும் பணிகள் தொடங்கி சிறப்பாக நடந்தது. நடுவப்பட்டி ஊரிலிருந்து கழுகுமலை வரையிலான சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அகலப்படுத்தப்பட்டு சூரிய ஒளியின் வெளிச்சத்தில் பளபளவென மின்னுவதை பார்க்க முடிந்தது.