சேட்டிலைட் சேனலின் வரவு இல்லாமல் தூர்தர்ஷன் சேனல் மட்டுமே இருந்தது. தினமும் டிவியில் சினிமாப் படங்களை பார்ப்பதற்கு உண்டான வாய்ப்பு கிடையாது. வாரத்தின் சனி, ஞாயிற்று கிழமைகளில் மாலை வேளை ஒரு சினிமாப் படம் ஓடும். இந்த ஒரு படம் ஆக்ஸன், காமெடி, குடும்பத்தின் கதை சம்பந்தமான படம் என்று எந்த வகையான படமாகவும் இருக்கலாம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், சிலம்பரசன் போன்ற நடிகர்கள் நடித்த படங்களுக்கு சிறுவயது பையன்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும்.
மற்றபடிக்கு விளையாட்டுக்களை விளையாடுவதில் அதிகமான ஆர்வமுடன் இருப்போம். 1993ம் வருடத்திற்கு பிறகுதான் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு கரிசல் காடுகளில் அறுவடை காலம் முடிந்த பிறகு கழுகுமலை சாலையின் ஓரமாக அமைந்துள்ள ஏதேனும் ஒரு கரிசல் காட்டில் காரட் அல்லது ரப்பர் பந்தினைக் கொண்டு பையன்களுடன் விளையாட வந்தது. கனகராஜ், ராசா ஆசாரியின் மகன் ஈஸ்வரன், லெஃப்ட் முருகன், கண்ணன் போன்ற பையன்கள் பேட்டிங் செய்கையில் சிக்ஸர், போர்களை விளாசி அதிரடியாக ரன்களை எடுத்து விளையாடுவார்கள். நான் மிதமான வேகத்திலே விளையாடுவேன். ஒரு சிக்ஸர் சாட்டினை அடிக்கும் பட்சத்தில் வெகுதொலைவில் சென்று பந்து விழும்படியாக மட்டையை சுழற்றுவது மிகவும் பிடிக்கும். ஸ்பின் பவுலிங் பந்தினை வீசி லெக் ஸ்பின்னில் விக்கெட்டை எடுத்த பின்பு அதிரடியாக விளையாடும் பையன்களுக்கு எப்படி..? அவுட் ஆனோம் என்பது தெரியாமலே குழம்பிபோய் இருப்பார்கள். ஸ்பின் பவுலிங்கை நன்றாக வீச வேண்டும் என்பதற்காக, ரப்பர் பந்தினை கொண்டு வீட்டிலே பயிற்சி செய்வதால் கிரிக்கெட் விளையாடுகையில் நன்றாக பந்து வீச வரும். நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் அதிரடி பேட்ஸ்மேனாக இருந்த நாதன் ஆஸ்ட்லேவின் பெயரினை சொல்லி என்னை அழைப்பார்கள். உயரே தூக்கி அடிக்கப்பட்ட பந்து கேட்சாக வரும் பட்சத்தில், லாவகமாக பிடித்து விடுவது உண்டு. கேட்ச் வாய்ப்பினை தவற விடுவதே இல்லை. பெரிதாக ரிஸ்க் எடுத்து விளையாடுவது கிடையாது.
காலை வேளை, கழுகுமலை சாலையில் ஒரு அரை மணி நேரம் ஓட்டப் பயிற்சினை செய்வது மிகவும் பிடித்தமான பழக்கமாக இருந்தது. +1 +2 வகுப்பினை படித்த பிறகு 1999ம் வருடத்தில் சாத்தூரிலுள்ள எஸ்.ராமசாமி நாயுடு கல்லூரியில் இளங்கலை கணிப்பொறி படிப்பில் சேர்ந்த பிறகு ஊரில் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தியது. மற்றபடிக்கு, பையன்கள் கிரிக்கெட் விளையாடுவது தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது.
2002ம் வருடம்போல.. திருமலை யாதவ் அவர்களுடைய மகன் தமிழ்நாடு போலீஸில் வேலையில் சேர்ந்த பிறகு இன்று வரையிலும் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்கையில் வியப்பாக இருக்கும். கண்ணனுக்கு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை மிகவும் பிடிக்கும். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் கிரிக்கெட் விளையாடும்போது மிகவும் ஆர்வமுடன் பார்ப்பான். 1999ம் வருடம், ஜூலை மாதம் 5ம் தேதி.. சாத்தூர் ஊருக்கு அருகிலுள்ள சடையம்பட்டி ஊரில் அமைந்துள்ள எஸ்.ராமசாமி நாயுடு கல்லூரியில் இளங்கலை கணினி வகுப்பில் சேர்ந்த பிறகு மூன்று நாட்களுக்கு முன்பு The God Father எனும் இங்கிலீஸ் நாவலை எழுதிய எழுத்தாளர் மரியோ புஸோ அவர்கள், சிவபதவி அடைந்த நிகழ்வினை இந்து ஆங்கில இதழில் பார்த்த பின்பு வரலாற்றுத் துறை பேராசிரியர் கோவிந்தராஜ் அவர்களிடம் மரியோ புஸோ குறித்தான விபரங்களை கேட்டபோது, The God Father நாவலினை தழுவி ஹாலிவுட் நடிகர் அல்பசினோ நடித்த "காட்பாதர்" மூன்று பாகங்களை கொண்ட படங்களாக ரிலீசாகி கேங்ஸ்டர் கதையாக உலகமெங்கும் உள்ள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதை சொன்னார்.
முதுகலை வரலாற்றுப் படிப்பினை மெட்ராஸ் நகரிலுள்ள லயோலா கல்லூரியில் படித்தபோது, @காட்பாதர் படத்தின் முதல் இரண்டு பாகங்களை பார்த்த பிறகு சில வருடங்கள் இடைவெளியில் மதுரை நகரிலுள்ள மாப்பிளை விநாயகர் திரையரங்கில் மூன்றாவது பாகம் படத்தினை பார்த்ததாகச் சொன்னார். அதிகார வர்க்கத்தினர், அரசியல் ரெளடிகள் போன்றவர்களின் மூலமாக பெரிய பிரச்சினைகளை சந்திக்கும் நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் குடும்பங்களை காப்பாற்றுவதற்காக தன்னுடைய அப்பாவின் மறைவிற்குப் பிறகு கேங்ஸ்டர் மைக்கேல் கார்லியோன் கேரக்டரில் நடிக்கும் அல்பசினோவின் நடிப்பு, அப்போதைய காலகட்டங்களில் இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்திய வேளை, மைக்கேல் கார்லியோன் கேரக்டரில் அல்பசினோ அணிந்திருக்கும் ஆடைகளை இளைஞர்கள் விரும்பி அணிந்து கொண்டு பொது இடங்களில் சுற்றித் திரிவதை பார்த்த அனுபவங்களை பேசியதை கேட்கையில் வியப்பாக இருந்தது. கோவில்பட்டி நகரில் கடலையூர் செல்லும் சாலையில், ஜான் பாஸ்கோ பள்ளியின் எதிர்புறமுள்ள தெருவில் கொடிக்காம்பரம் ஊரினைச் சேர்ந்த ஜமீன்தாரின் குடியிருப்பு வளாகத்தில் வழக்கறிஞர் பெரியப்பா அய்யலுசாமி அவர்களுடைய வீட்டிலுள்ள டிவியில் 2003ம் வருடம்போல HBO சேனலில் @காட்பாதர் முதல் பாகம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.
இணையத்தில் விக்கிபீடியா வளர்ச்சி அடைந்த பிறகு நடிகர் அல்பஸினோவின் பிறந்த நாள் 1940ம் வருடத்தில் ஏப்ரல் 25 என்பதை பார்த்தபோது, 1987ம் வருடமாக.. ஊரிலுள்ள இந்து துவக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படிக்க நான் சேர்ந்தபோது, என்னுடைய அப்பா ஏப்ரல் 25ம் நாளினை பள்ளிக்கூடத்தின் பதிவேட்டில் பதிவு செய்து ஏதோ ஒரு மாயாஜாலம் செய்திருப்பதை அறிந்து மெய்சிலிர்க்க வைத்தது.
No comments:
Post a Comment