Monday, January 29, 2024

கேசவராஜின் குரலில் சிவபுராணம்..


மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் பாடலில் சிவபுராணத்தை பாடும் கேசவராஜின் குரலில் ஒலிக்கும் தெய்வீக ராக ஆலாபனையை @KeshavrajsOfficial யூடியூப் சேனலில் நாற்பது லட்சம் பார்வையாளர்கள் கேட்டு பரவசம் அடைந்துள்ளதை கண்டு பிரமிக்க வைத்தது. சிவபுராணத்தை காலை, மாலை வேளைகளில் பாடும்போது நம்மிடையே உண்டாகும் சூப்பர் நேச்சுரல் பவரை உணர முடிவதுபோல, திருவாசகம் முழுமையும் பாடும்போது எல்லையில்லாத பேரின்பத்தை அடைய முடியும் என்பதை, திருஆனைக்கா ஊரிலுள்ள பரமேஸ்வரனுடைய தண்ணீர் ஸ்தலமான அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவிலுக்கு விஜயமாகி ஒரு கற்தூணில் அமைந்த ஆலங்காட்டு காளியின் சிற்பத்தின் அருகில் அமர்ந்து பாடியபோது உணர்ந்து மகிழ்ந்தது. 2019ம் வருடம், ஜூலை 29 திங்களன்று பதிவேற்றமான வீடியோ காணொளி.  

Sunday, January 28, 2024

பயிர்களின் விலைவாசி..

டிசம்பர் 17 அன்று நண்பகல் 12 மணிக்கு மழை பெய்யத் தொடங்கி மறுநாள் காலை வரையில் இருபது மணி நேரமாக பெய்த பெருமழையில் கரிசல் காட்டில் அறுவடைக்குத் தயாராக இருந்த உளுந்துப் பயிர்கள் சேதாரமாகி மைப்பு எனும் இளவட்டு விழுந்ததில் குவிண்டாலுக்கு கிடைக்க வேண்டிய சரியான விலை இப்போது இல்லை என்பதை பயிர்களை வாங்கி ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் சொல்கிறார்கள். மாரியப்பன் என்பவர் கழுகுமலை ஊரில் தேரடி வீதிக்கு அருகில் மாரிசெல்வம் என்ற பெயரில் கமிஷன் கடை வைத்துள்ளார். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக குளக்கட்டாக்குறிச்சி ஊரிலிருந்து விளையும் மக்காச்சோளம், உளுந்து, பாசிபயிறு, சூரியகாந்தி, பருத்தி, ஆமணக்கு, எள், தட்டாம்பயிறு, மொச்சை பயிறு என இத்தைகைய பயிர்களை வாங்கி ஏற்றுமதி செய்து வியாபாரம் செய்கிறார். பக்கத்து ஊரான சீகம்பட்டியிலிருந்து ரமேஸ், குளக்கட்டாக்குறிச்சி ஊரிலிருந்து குமார் என கமிஷன் கடை வியாபாரம் செய்பவர்கள் உள்ளனர். 

மக்காச்சோள பயிர்கள் இருபது நாட்களுக்குப் பிறகு அறுவடைக்கு தயாராக உள்ளது. மாசி மாத இறுதியில் அறுவடை நடக்கும் எனச் சொல்லலாம்.

Thursday, January 11, 2024

ஆஞ்சநேயர் ஜெயந்தி..

திருப்பூர் நகரில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட இளைஞர்களை பிரிட்டீஷாரின் காவல் அதிகாரிகள் கையில் வைத்திருந்த லத்தி கம்புகளால் தாக்கியபோது, இந்த இளைஞர்களின் கூட்டத்தில் இருந்த குமரன் என்ற இளைஞர் மண்டையில் அடி வாங்கிய ரத்தமுடன் வந்தே மாதரம்.. வந்தே மாதரம்.. என்ற இடிமுழக்கமுடன் தேசியக் கொடியை கையில் பிடித்தவாறே மண்ணில் சரிந்து விழுந்து காளி தேவியின் பாதங்களில் தன்னுயிரை தியாகம் செய்தார் எனும் தியாக வரலாறு நடந்த திருப்பூர் குமரனின் நினைவு தினமான நேற்று, ஆஞ்சநேயர் ஜெயந்தி நாளாக அமைந்து சிறப்பு செய்தது. மார்கழி மாதம், மூலம் நட்சத்திரம் தினம்.

கோவில்பட்டி புறநகரில் சாத்தூர் செல்லும் நேஷனல் ஹைவே சாலையில் உள்ள சீதா ராமர் லட்சுமண ஆஞ்சநேயர் கோவிலுக்கு விஜயமாகி, கோவில் முகப்பிலே ஆஞ்சநேயரை தரிசனம் செய்து கோவிலுக்கு உள்ளே சென்று புதிதாக வெள்ளியிலான சிலையில் பிரதிஷ்டை செய்யப்பட ஆஞ்சநேயரை தரிசனம் செய்த பின்பு கருவறையின் சந்நிதானத்தில் சீதா ராமருடன் லட்சுமணரை தரிசனம் செய்த பின்பு கீழே இருக்கும் சந்நிதியில் பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசனம் செய்கையில், தென்காசி மாவட்டம்.. கிருஷ்ணாபுரம் ஊரில் வயற்காட்டில் அமைந்த பிரசித்தி பெற்ற அபயகஸ்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்த பாக்கியம் அமைந்தது.  

Tuesday, January 9, 2024

மழை..

இன்று காலையில் வானம் கருகருவென மேகமூட்டமாக இருந்தது. பத்து மணி அளவில் சிறு மழையாக பெய்யத் தொடங்கி பன்னிரெண்டு மணிக்கு கொஞ்சம் பெரிய மழையாக பெய்ய ஆரம்பித்து இரண்டு மணிபோல கொஞ்சம் கொஞ்சமாக நின்றது. மூன்று மணி வரையில் தூரலாக பெய்தது. சில விவசாய பெருமக்களுக்கு உளுந்துப் பயிறு அறுவடைக்கு தயாராக இருக்கும் சூழலில், இந்த மழையானது பெரும் துன்பமாக அமைந்துள்ளதை பார்க்கிறோம். சில கரிசல் காடுகளில் உளுந்துப் பயிரை அறுத்து போட்ட பிறகு தினமும் தூரல் மழை, சிறு மழை, பெருமழை என பெய்வது பருவநிலை மாறுபாட்டின் தன்மையை குறிக்கிறது. ஐந்து நாட்கள் முன்பு, கிழக்கு திசை மார்க்கமாக விஸ்வாமித்திரன் அவர்களுடைய ஐந்து ஏக்கர் காட்டில் அறுவடையான உளுந்துப் பயிர் மறுதினம் தொடங்கி பெய்த மழை காரணமாக எந்திரம் கொண்டு பயிரை பிரிக்க முடியாத சூழலில், பயிர்கள் சேதாரமாக சாத்தியம் ஆனதைக் கண்டு துன்பமாக இருந்தது.

Friday, January 5, 2024

மழை..

இன்று அதிகாலை மூன்று மணி அளவில் பதினைந்து நிமிடம் தூரல் மழை பெய்ததாக பெண்கள் காலையில் பேசிய வேளை அறிந்தது. இதனுடன், மாலை ஏழு மணிபோல இருபது நிமிடம் லேசான மழையாக பெய்து பூமியை குளிரச் செய்தது. மார்கழி மாதம் தொடங்கி இன்று வரையில் சூரியனின் ஒளியை பார்க்க முடியாது, மேகங்கள் கருகருவென வானத்தை மூடியவாறே இருப்பதை கண்டு மகிழ்ச்சி ஏற்படவே இல்லை. ஆயிரக்கணக்கான ஹெக்டேர் அளவுள்ள விவசாய நிலப்பரப்பை வீட்டு மனைகளாக மாற்றி அமைத்து இயற்கையுடன் ஒன்றிணைந்த லட்சக்கணக்கான மரங்களை மனித சமூகம் வெட்டியதால் இந்திய பெருங்கடலில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகி, இதனால் கடலில் உருவாகும் வெப்பச் சலனத்தால் இருபது மணி நேரம் நிற்காமல் பெய்யக்கூடிய பெருமழையாக உருவாகி பிரபஞ்சமே துன்பக் கடலில் மூழ்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதை பார்க்கிறோம். 

நாளை பெருமழைக்கான அறிவிப்பை வெளியிட்ட சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், தூத்துக்குடி ஊர் மற்றும் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை செய்துள்ளது.

Thursday, January 4, 2024

குறிப்புகள்..

பெரியப்பா ராமசாமி அவர்களை 2013ம் வருடம் ஜனவரி தினமாக நேர்காணல் செய்கையில், சூலூர் அருகே கலங்கல் ஊரில் பிறந்த சயின்டிஸ்ட் கோபால்சாமி துரைசாமி நாயுடு போன்ற உருவ அமைப்பில் அச்சு அசலாக இருப்பதை சொன்னேன். விவசாயிகளின் போராட்ட களத்திற்கு பெரிதும் உறுதுணை புரிந்த நாராயணசாமி நாயுடு அவர்களை பற்றி நேர்காணலில் நன்றாக பேசினார். 1997ம் ஆண்டு வாங்கிய வீட்டு மின் இணைப்பை கண்டு கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் நினைவு தினமாக இருந்ததை சொல்ல.. தற்செயலாக அமைந்த நிகழ்வு எத்தகைய வரலாற்றுப் பூர்வமாக உள்ளது என வியப்பாக பேசினார்.


மின் இணைப்பு எண்.. 08 
மின் இணைப்பு பெற்ற தினம்.. 1997ம் வருடம், ஜனவரி 04

மெட்ராஸ் நகரில் வடபழனி பஸ் நிலையம் பின்புறமாக உள்ள வீட்டில் வசிக்கையில் அருகிலுள்ள அரசு நூலகத்திற்கு அடிக்கடி சென்று தினசரி பத்திரிகைகள், நூல்களை படிப்பதுடன், படித்த விசயங்களை பேசுவதை கேட்பதற்கு என்போன்ற ஒரு சிலரே ஊரில் இருந்தனர். இலக்கியம், வரலாறு, தத்துவம், ஆன்மீகம் குறித்தான நூல்களை வாசிக்கும் பழக்கம் எனக்கும் இருந்தபடியால் பெரியப்பா ராமசாமி அவர்களை நேர்காணல் செய்வது எளிதாக இருந்தது. இதற்கும் பெரிய முயற்சி எடுக்க வேண்டி இருந்தது. அப்போது நான் கோவை நகரில் பணி செய்து கொண்டிருந்து விடுமுறையில் ஊருக்கு வரும்போது ஊரில் இருக்கும் பெரியவர்களை ஒரு பத்து நிமிடம் பேச வைப்பது மகிழ்ச்சியாக இருந்தது. 

அறுவடைப் பணி..

இரண்டு நாட்கள் முன்பு, வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்ட வேலை ஆட்களுடன் கிழக்கு திசை கரிசல் காட்டில் உளுந்து பயிரை அறுவடை செய்த விஸ்வாமித்திரன் அவர்கள், இன்றைய தினம் அரைக்கும் எந்திரம் கொண்டு காட்டிலே உளுந்துப் பயிரை அரைத்து மூடையில் கட்டி டிராக்டரில் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு காட்டில் அறுவடை செய்த உளுந்து, பாசி பயிறுகளை ஊரிலுள்ள களத்திற்கு எடுத்து வந்து வட்டமாக உலரப் போட்டு டிராக்டர் கொண்டு அதை உழவடித்து பாடம் செய்து காற்றில் மேலாக வீசி உளுந்து, பாசி பயிறுகளை தனியாக ஒதுக்கி மூடைகளில் கட்டி வீட்டிற்கு கொண்டு வரப்படும். 2013ம் வருடத்திற்கு பிறகான பத்து ஆண்டுகளில் விவசாய பணிகளை எளிதாக செய்ய நவீன கருவிகள் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது, விவசாயத்தை ஒரு படி மேலே கொண்டு சென்று புதிய பரிமாணத்தை உருவாக்கியது என்று சொல்ல முடியும்.

Tuesday, January 2, 2024

குறிப்புகள்..

இன்று வானம் சூரிய ஒளியின்றி மேக மூட்டமுடன் இருந்தாலும் மழை எதுவும் பெய்யவில்லை. விஸ்வாமித்திரன் அவர்கள், இளையரசனேந்தல் ஊருக்குச் செல்லும் சாலையின் கிழக்கு திசையிலுள்ள கரிசல் காட்டில் வேலை ஆட்களுடன் உளுந்து பயிரை அறுவடை செய்தார். உளுந்துப் பயிரில் ஈரப்பதம் எதுவும் இல்லை என்று சொன்னார். ஒரு வாரம் முன்பு உளுந்துப் பயிரை அறுவடை செய்தவர்களுக்கு ஈரப்பதம் இருப்பதால் குவிண்டாலுக்கு சரியான விலை கிடைக்கவில்லை. பயிரின் தன்மையை பொறுத்து குவிண்டாலுக்கு ஐந்தாயிரம் ரூபாயிலிருந்து ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் மகசூல் விலை உள்ளது. குவிண்டாலுக்கு பன்னிரண்டு ஆயிரம் விலை இருந்தால் மட்டுமே உளுந்துப் பயிரை அறுவடை செய்த விவசாய பெருமக்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், வங்கியில் வாங்கிய கடனையும் செலுத்த முடியும்.

வேலை ஆட்களுடன் அறுவடை செய்ய ஒரு ஏக்கருக்கு நான்காயிரம் ரூபாய். உள்ளூரிலிருந்து பெரும்பாலும் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இத்தைகைய சூழலில், சங்கரன்கோவில் அருகிலுள்ள கிராமத்து ஊர்களிலிருந்து வேன்களில் ஆட்கள் கொண்டு வரப்பட்டு அறுவடைப் பணிகள் நடைபெறும். அழகுநாச்சியாபுரம், வீரிருப்பு, நெற்கட்டான்செவல், நிறைகுளத்தான் குளம், மேலநீலிதநல்லூர் போன்ற ஊர்களிலிருந்து வேலை ஆட்கள் வருவார்கள். இந்த வேலை ஆட்களை ஒரு மேஸ்திரி நிர்வாகம் செய்வார். இவரே வேலை ஆட்களுக்கு சம்பளம் வாங்கி கொடுப்பவர்.