தென் மாவட்டங்களில் கடந்த வருடம் டிசம்பர் 17 தினம் தொடங்கி மறுதினம் காலை வரையிலும் இருபது மணி நேரம் பெய்த பெருமழைக்குப் பிறகு குளக்கட்டாக்குறிச்சி ஊரின் வழியாக கழுகுமலை, நடுவப்பட்டி ஊருக்குச் செல்லும் சிறிய சாலைகள் ஒன்றரை மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்படும் பணிகள் தொடங்கி சிறப்பாக நடந்தது. நடுவப்பட்டி ஊரிலிருந்து கழுகுமலை வரையிலான சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அகலப்படுத்தப்பட்டு சூரிய ஒளியின் வெளிச்சத்தில் பளபளவென மின்னுவதை பார்க்க முடிந்தது.
1997ம் ஆண்டிலிருந்து 1999ம் வருடம் வரை கழுகுமலை ஊரிலுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்க ஊரிலிருந்து சைக்கிளில் மிதித்து இந்த சிறிய சாலையின் வழியாக தினமும் சென்று கஷ்டப்பட்டு படித்த எனது அன்புச் சகோதரி தற்போது புதிதாக போடப்பட்ட புத்தம் புது சாலையின் அழகை பார்க்கும் பட்சத்தில் ஒரு பிரமிப்பு உருவாகும் என்பதை சொன்னேன்.
குவைத் நாட்டில் பணி புரியும் எனது உறவினரான மாமாவிற்கு இந்த புதிய சாலையின் புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பிய பிறகு லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட பிரபலமான நடிகரின் திடீர் அரசியல் வருகையும் இத்தகைய மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் எனும் யூகங்களை சொல்ல, வியப்பாக இருந்தது. நெருங்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலும் இத்தகைய பணிகள் நடைபெறுவதற்கு கிரியா ஊக்கியாக இருந்தாலும் மகிழ்ச்சியே.
No comments:
Post a Comment