1992ம் ஆண்டின் ஜனவரி மாதம். ஊரிலுள்ள இந்து துவக்கப் பள்ளியில் ஏப்ரல் மாதத்துடன் ஐந்தாம் வகுப்பு படிப்பு முடிவடையும் தருணம். சிறுவர்களான எங்களுக்கு ஆசிரியர்களை பிரியப் போகிறோம் என்று மனதில் கவலை. இந்த தருணத்தில் வாத்தியார் பாலசுப்ரமணியன் அனைவரையும் சுற்றுலா அழைத்துச் செல்வதாக சொன்னபோது.. அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சி. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து மணிரத்னம் அவர்கள் இயக்கிய தளபதி படத்தின் பாடல்கள் ஒவ்வொரு வீட்டிலுள்ள வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்த சமயம். திருச்செந்தூர், கன்னியாகுமரி ஊர்களுக்கு சுற்றுலா செல்வது என்று முடிவானது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர் ரங்கசாமி, பாலசுப்ரமணியன், ஜெயராமசந்திரன் இவரது மகன் கண்ணன் ஆகியோருடன் உற்சாகமாக பயணம் கிளம்பியது. விவசாய வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் அப்பா உடன் வரவில்லை. சுற்றுலா வேனில் திருநெல்வேலி சாலையில் செல்லும்போது "காட்டுக்குள்ளே மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான் " பாடல் ஒலித்தது. திரையரங்குகளில் படம் வெளியாகி 'கலிவர்தன் கலிவர்தன்' என்ற இடிமுழக்கம் ஒலித்த தருணங்கள்...
சிறுவயதில் பள்ளி மாணவர்களுடன் சுற்றுலா செல்வது முதல் அனுபவமாதலால் சாலையின் இருமருங்கிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியான நினைவுகளோடு பயணித்தது. கன்னியாகுமரி ஊரின் முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில் சூரிய பகவானின் உதயத்தோடு பகவதி அம்மனின் தரிசனமும், சுவாமி விவேகானந்தரின் அருளாசியும் தெய்வீக அனுபூதியாக அமைந்தது. உடன் வந்த சிறுவர்கள் அனைவருக்கும் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளைக் காணுகையில் எல்லையில்லாத வியப்பு. எனது மனதிலோ அப்பா சொன்ன தீர்க்கதரிசனங்களின் திகைப்பு. இது கனவா..? நனவா.. என ஒரே ஆச்சரியம் கலந்த வியப்பு.
அனைத்தும் இன்பமயமாகக் கழிந்த பின்பு திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசிக்க அனைவருடன் வாகனம் கிளம்பியது. கடல் கொஞ்சும் ஆர்ப்பரிக்கும் அலைகளின் திருச்செந்தூர் முருகப்பெருமான் அருள்வடிவாக வீற்றிருக்கும் அழகைக் காண கண்கோடி வேண்டும் என்று வாத்தியார் பாலசுப்ரமணியன் சொல்லக் கேட்டது. முருகப் பெருமானின் தரிசனம், பெற்றோர்களின் திருமணம் சன்னிதி முன்பு நடைபெற்றது என்ற நினைவுகள் மனதில் தோன்றி தெய்வீகத்தை அருளியது. அங்கிருந்து கிளம்புகையில், ஓட்டப்பிடாரம் வழியாக பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நினைவுக் கோட்டையை தரிசித்து விட்டு ஊருக்குச் செல்லலாம் என முடிவாயிற்று...
1974ம் வருடம்.. ஆகஸ்ட் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் கட்டபொம்மன் நினைவுக் கோட்டையானது திறப்பு விழா கண்டுள்ளது. இந்த நாளினை எனது அப்பா அடிக்கடி நினைவு கூறுவதுண்டு. ஆசிரியர்களுடன் கோட்டையின் உள்ளே சென்று கம்பீரமாக வீரவாளுடன் வீற்றிருக்கும் கட்டபொம்மனின் சிலையைக் கண்டபோது மனதில் பிரமிப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீமந் நாராயணன் தனது கரங்களில் வீரவாளுடன் வெள்ளைக் குதிரையின் மேல் அமர்ந்து ஏழு கடல்கள், ஏழு கண்டங்களை தாண்டி புயலைப் போன்று விரைந்து வரும் காட்சி மனதில் தோன்றி நினைவாக சுழன்றது. அப்போதெல்லாம் கணிப்பொறி, இணையதளம் ஏது..! ஸ்ரீமத் பாகவதம் நூலில் வேத வியாசர் வரைந்த ஸ்ரீமந் நாராயணின் புகைப்படத்தை அப்பா காட்டியது. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை! சிற்றம்பலம் ஏகாம்பரம் என்று சில வாக்கியங்களை அப்பா அடிக்கடி உச்சரிப்பார். மகாபுருஷனின் வீரவாள் வெள்ளையர்களுடன் சமர் புரிந்து போரிட்ட வீரத்தையல்லவா எடுத்தியம்புகிறது. கட்டபொம்மன் நினைத்திருந்தால் பிரிட்டீஷாருடன் இணக்கமாக இணைந்து வளைந்து கொடுத்து தனது மக்கள் செல்வங்களுடன் ஆடம்பரமாக, அமைதியாக வாழ்ந்திருக்க முடியும்.
பாஞ்சாலம் என்ற பூமியில் முயல்கள் தன்னைத் துரத்தி வந்த நாய்களை வீரத்துடன் போரிட்டு துரத்தியதாம். இதைக் கண்ணுற்ற கட்டபொம்மனின் பாட்டனார்கள் அந்த மண்ணின் ஊரை பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டு அழைத்தார்களாம். நமது ஊரில் ஒரு கைபிடி கரிசல் மண்ணில் 'கொழுக்கட்டை' விளைந்ததால் கொழுக்கட்டான் என்ற ஊரின் பேர் மருவி, இந்த பாஞ்சாலங்குறிச்சி மண்ணின் பெருமையோடு குளக்கட்டாக்குறிச்சி என்று மருவியதாகக் அப்பா சொன்னார். கோட்டையைச் சுற்றி கண்ணுற்று அங்கே தெய்வீகமாக அருள்பாலிக்கும் மக்களின் குலதெய்வமான 'வீரசக்கதேவி' அம்மனை வணங்கி தரிசனம் பெற்றது. ஊரைவிட்டு கிளம்புகையில் மகாபுருஷனின் வீரவாளின் நினைவுகளோடு ஊர் வந்து சேர்ந்தது. இரண்டு நாட்களின் சுற்றுலா எங்கள் அனைவருக்கும் பேரின்பமாக அமைந்தது.
1990ம் ஆண்டில் அப்பா, அம்மாவுடன் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி நகரின் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதரின் கோவிலில் சந்திரனுக்கு சாபவிமோசனம் அளித்த பெரிய பெருமாள் எனும் அரங்கநாதரை தரிசனம் செய்தது. ஸ்ரீமந் நாராயணின் சன்னிதானம் முன்பு கம்பீரமாக அருள்வடிவாக வீற்றிருக்கும் கருடாழ்வாரை சிறுவயதில் காணும்போது, எல்லையில்லாத பிரமிப்பு. அவர்தான் கருட பகவான் என அப்பா அறிமுகம் செய்த வேளையில், பூஜைகள் நடைபெற்ற சமயம். அதன் பிறகு தன்னந்தனியாக ஆலயம் சென்று நாராயணரை தரிசனம் செய்தது என தெய்வீகமாக கழிந்த நாட்கள். ஒவ்வொரு முறை ஆலயம் செல்லும்போதும் பிரபஞ்ச ரகசியங்களை உணரும் பாக்கியம் என அமைந்த நாட்கள்...
05.05.1950 வெள்ளிக்கிழமை அன்று.. ராமசாமி, சோலையம்மாள் என்ற எனது தாத்தா பாட்டிக்கு அப்பா ராமகிருஷ்ணன் அவர்கள் பிறந்தார். முதலில் பெற்றோர்கள் வைத்த பெயர் ராமகிருஷ்ணசாமி. பள்ளியில் சேர்த்த பிறகு ராமகிருஷ்ணன் என ஆனது. ஊரிலும் வீட்டிலும் கிருஷ்ணசாமி.. கிருஷ்ணசாமி என அழைப்பார்கள். பெற்றோர்கள் என்னை செல்லமாக குமாரு.. குமாரு என்று அழைப்பார்கள். இதே தினத்தில்.. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.. டுவிட்டர் சமூக வலைதளத்த்தில் இணைந்து கோடான கோடி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தார்... இந்த ஆண்டின் 2017, மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை எனது அப்பா ராமகிருஷ்ணன் அவர்களின் 67வது ஆண்டு பிறந்த தினமாகும்.
ஓம் நமசிவாய..
ஓம் நமோ நாராயணா..
No comments:
Post a Comment