Friday, January 13, 2012

அருள்மிகு காளியம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா..

நான் பத்து வயது சிறுவனாக என்னுடைய வயதினை ஒத்த சிறுவயது பையன்களுடன் ஓடியாடி வீதிகளில் விளையாடித் திரிகையில், காளியம்மன் பெண் தெய்வம் ஒரு கூரை வேயப்பட்ட மண் வீட்டில்தான் சின்னக் கோவிலாக இருந்தது. சில வருடங்களிலே பலம் வாய்ந்த கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஓரளவு பெரிய கோவிலாக வடக்கு திசையினை பார்த்தவாறு காளியம்மன் தேவி வீற்றிருந்து ஊரிலுள்ள மக்களுக்கு அருள்புரியத் தொடங்கினார். இந்த பெரிய கோவில் எப்போது எந்த வருடத்தில் கட்டப்பட்டு மஹா கும்பாபிஷேகம் விழா நடந்தது என்பதை கோவிலின் ஏதோ ஒரு இடத்தில் கல்வெட்டாக வைக்கப்படாத காரணத்தால், எந்த வருடத்தில் நடந்தது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. 1992ம் வருடத்திற்கு உள்ளாகவே நடந்திருக்கலாம் என அனுமானம் செய்ய முடிந்தது. 

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் காளியம்மன் கோவில் திருவிழா, சித்திரை மாதம் அல்லது ஆவணி மாதத்தில் நடந்து வந்தது. ஒரு குடும்பத்தில் தலைக்கட்டு எனச் சொல்லப்படும் வரி வசூலிக்கப்பட்டு கோவில் கொடை விழா நடத்தப்பட்டது. காளியம்மன் தேவியை சப்பரத்தில் ஊரிலுள்ள தெருவின் வழியாக கொண்டு வருதல், நையாண்டி மேளம் குழுவினர் மேளம் அடித்தல், சப்பரம் வரும் தெற்கு வீதியின் வழியாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மக்களுக்கு அறிவிப்பினை செய்ய ஒலி பெருக்கியினை வைப்பதற்கு என இத்தனை விதமான செலவுகளுக்கும் தலைக்கட்டு வரியிலிருந்தே பணம் எடுத்துக் கொள்ளப்பட்டு செலவுகள் செய்யப்படும். 

நாயக்கர், யாதவர் சமுதாயத்தினர் இருவரும் இணைந்து செயல்புரிந்தே காளியம்மன் கோவிலுடைய வருடாந்திர கொடை விழா நடைபெற்று வருகிறது. யாதவர் சமுதாயத்து வீட்டுப் பெண்கள் கும்மிப் பாட்டு பாடிக்கொண்டே முளைப்பாரி எடுக்கும் நிகழ்வு, அற்புதமான காட்சியாக இருக்கும். பெண் தெய்வங்களை வழிபடும் கோவில் விழாக்களில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்வானது, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் உள்ள கிராமங்கள், நகரங்களில் நடைபெறும் கோவில் கோடை விழாக்களில் முக்கியமான நிகழ்வாக நடைபெறுவதை அந்த மாவட்டங்களின் வழியாக பேருந்துகளில் பயணம் செய்யும்போது பார்க்கையில் அறிய முடிந்தது. 

தலைக்கட்டு வரியினை வசூலிப்பதற்கு ஐந்து, ஆறு பேர்கள் கொண்ட இளைஞர்கள், பெரியவர்கள் என ஒரு குழுவாக செயல்படுவார்கள். ஊரிலிருந்து வெளியூர்களில் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்து கொண்டு வசிக்கும் குடும்ப உறுப்பினர்களிடம் வரியினை வசூலிப்பதற்கு மூன்று பேர்கள் கொண்ட குழுவினர் சென்று வருவார்கள். காளியம்மன் சாமியின் சப்பரம் வீதியின் வழியாக உலா வந்து மறுதினம் மஞ்சள் நீராட்டு விழா முடிந்த பிறகு அன்றைய தினம் இரவு வேளை, சினிமாப் பாடல்களை கொண்டு பாடும் இன்னிசை கச்சேரி விழா நடைபெறும். எனக்கு நினைவு தெரிந்து 2006ம் வருடம் வரையிலும், ஒரு நாள் இரவு இரண்டு சினிமாப் படங்களும், மறுநாள் கரகாட்டம் எனும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 

Wednesday, January 11, 2012

மெட்ராஸில்..

முப்பது வருடங்கள் முன்பு நடுத்தர குடும்பமாக இருந்தவர்கள், இன்றைய நாளில் நல்ல பொருளாதார நிலையுடன் சிறிய பணக்காரர் எனும் நிலையை அடைந்த பின்பு.. முப்பது வருடங்கள் முன்பு பெரிய பணக்கார குடும்பமாக இருந்தவர்கள் பெரிய கோடீஸ்வரர்கள் எனும் நிலையை அடைந்ததை ஊரிலே கண்முன்னே பார்க்க முடிந்தது. நாச்சியார் அம்மா மகன் ஹரிபாலகண்ணன், இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலே இந்திய நாட்டின் ராணுவத்தில் பணிபுரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் முப்பது லட்சம் செலவில் வீடு கட்டி குடும்பத்துடன் வசிப்பதை மூத்த அண்ணன் ஹரிகேசவன் நான்கு வருடம் முன்பு சொன்னார். 2011ம் வருடம், டிசம்பரில்.. மெட்ராஸில் சென்ட்ரல் ரயில் நிலையம் முன்புறமுள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனை அருகிலுள்ள ராணுவ குடியிருப்பில் ஹரிபாலகண்ணன் தங்கி இருந்தபோது, சாலையில் நடந்து வருகையில் இரவு ஏழு மணி அளவில் பார்த்து நலம் விசாரித்தது. எவரிடமும் கடன் வாங்காமல் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நிம்மதியாக செல்வதாக சொல்ல.. மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வேளை மேற்கண்ட விசயங்களை சொன்னேன். முகமலர்ச்சியுடன் சிரித்தார்.

2011ம் வருடம்.. விடுதலை வீரன் வாஞ்சிநாதனின் நூற்றாண்டு வருடமாக அமைந்து, டிசம்பரில் முடியும் தருணத்தில் இருந்தது. மாமா ஹரிபாலகண்ணனை சந்தித்து பேசிய பின்பு ஐந்து நாட்களில் தானே புயல் வந்து கடலோர மாவட்டங்களில் பலத்த சேதாரங்களை ஏற்படுத்தி இருந்தது. மருத்துவர்கள் சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டங்களை நடத்திக் கொண்டு இருந்தார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளிடம் மருந்து கட்டும் காம்பவுண்டர்கள் இருபது, முப்பது ரூபாய் என பணம் வசூலித்து வயிறை நிரப்பிக் கொண்டு இருந்தார்கள். ஹரிகேசவன், ஹரிபாலகண்ணன் இருவருடன் பிறந்த இளைய தம்பி கற்பகராஜ். இந்தப் பையனும் இந்திய நாட்டின் ராணுவத்தில் பதினேழு வருடங்கள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று ஊரில் வசித்துக் கொண்டு விவசாயம் செய்கிறார். இரண்டு அண்ணனுடன் பிறந்த இளைய சகோதரி, கற்பகராஜின் அக்கா மணிமேகலை என்பவர் கல்யாணமாகி வெளியூரில் வசிக்கிறார்.