கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997ம் வருடத்தின் ஜூன் மாதம், +1 வகுப்பில் கணித பாடப்பிரிவில் சேர்ந்த பிறகு இந்த வருடத்தின் டிசம்பரில் கேபிள் டிவி இணைப்பினை அப்பா ராமகிருஷ்ணன் வீட்டிற்கு கொண்டு வந்தார். வீட்டில் இருந்தது போர்டபிள் கருப்பு - வெள்ளை டிவி. +2 வகுப்பு பொதுத்தேர்வு சமயமாக இந்த சேட்டிலைட் கேபிள் டிவி இணைப்பு பாடங்களை படிப்பதிலே பாதிப்புகளை ஏற்படுத்துமே என்று அப்பாவிடம் சொன்னதற்கு காதில் வாங்கி கொள்ளாது, பெரிய விசயமாக எடுத்துக் கொள்ளவே இல்லை. புதிய புதிய படங்களை பார்ப்பதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கிற காரணத்தால், மேற்கொண்டு எதுவுமே சொல்லவில்லை. அன்புச் சகோதரியின் வீட்டிலும் சேட்டிலைட் கேபிள் டிவி இணைப்பு வந்துவிட்டதாக சொன்னார். அன்புச் சகோதரியுடன் கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணிதப் பிரிவில் படிக்கும் ஒரு மாணவியின் உடன் பிறந்த சகோதரனே அருகிலுள்ள வடக்கூர் ஊரில் ஒரு வீட்டினை வாடகைக்கு பிடித்து அங்கு டிஸ் ஆண்டனாக்களை பொருத்தி கேபிள் டிவி இணைப்பினை கொண்டு வந்து ஊரில் பெரிய புரட்சி ஒன்றினை செய்திருந்தார். வெளியுலகம் பற்றி அதிகமாக தெரியாத ஊரிலுள்ள மக்களுக்கு சேட்டிலைட் டிவியின் மூலமாக ஒளிபரப்பாகும் நாட்டு நடப்பு செய்திகளை கேட்டு உலகத்தில் நடக்கும் அரசியல், சமூகம் சம்பந்தமான விசயங்களை தெரிந்து கொள்வார்கள் என மனதில் நினைத்தது.
ஐந்து, ஆறு மாதங்களில் ஊரிலுள்ள மக்கள் பார்க்கும் பொழுதுபோக்கு சம்பந்தமான விசயங்கள் நேருக்கு மாறாக இருந்தது. குடும்பங்கள் சம்பந்தமான டிவி சீரியல்களே வீட்டிலுள்ள பெண்களிடம் வரவேற்பை பெற்று சினிமாப் படங்களை பின்னுக்குத் தள்ளி இருந்தது. இந்திரா செளந்திரராஜன் எழுதிய "விட்டு விடு கருப்பா" புதினத்தை மையமாக கொண்டு இயக்குநர் சிகரம் என அழைக்கப்படும் கே.பாலச்சந்தர் சாரின் மின்பிம்பங்கள் தயாரிப்பில் உருவான @விடாது கருப்பு "மர்ம தேசம்" டிவி சீரியல் ஸ்ரீமந் நாராயணனின் கடைசி அவதாரமான @கல்கி அவதாரத்தினை பேசும் விதமாக ஒளிபரப்பாகி ஒரு மாத காலத்திற்குள்ளாக அனைத்து தரப்பு ரசிகர்களின் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.
பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு @விடாது கருப்பு "மர்ம தேசம்" இந்த ஒரு டிவி சீரியலை மட்டுமே மிகவும் ஆர்வமுடன் பார்த்துவிட்டு +1 வகுப்பு பாடங்களை படிக்கத் தொடங்கிவிடுவது அன்றாடப் பழக்கமானது. பெளர்ணமி நிலவின் பிரகாசமான ஒளி வெளிச்சத்தில் மர்மதேசம் என்ற மிரட்டலான குரலுடன், வெள்ளைக் குதிரையின் கணைப்புச் சத்தமுடன் ஸ்ரீமந் நாராயணின் பத்து அவதாரங்களை பேசும் புகைப்படங்களுடன் டைட்டில் காட்சி ஓடும் இசையினை கேட்பதற்கே பிரமிப்பாக இருக்கும்.
ஓம் நமோ நாராயணா.