ஒவ்வொரு வருடமும் விவசாயம் செய்யும் பணிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதை பார்க்க முடிகிறது. பருவ மழையினை நம்பி விவசாயம் செய்யும் காடுகள் என்பதால், டிசம்பர் மாதம்போல பெய்யும் கட்டுக்கடங்காத பெருமழையினால் பயிர்களில் நல்ல விளைச்சலும் ஏற்படுகிற வேளையில், குறிப்பிட்ட பகுதிகளில் பயிர்களுக்கு சேதாரமும் ஏற்படுகிறது.
புதிய நூற்றாண்டு தொடங்குவதற்கு முந்தைய வருடமான 1999ம் வருடத்தில்.. பன்னிரெண்டாம் வகுப்பினை படித்து முடித்த சமயமாக ஊரிலுள்ள பையன்களுக்கு பொறியியல், மருத்துவம், அறிவியல் சார்ந்த படிப்புகளை படிப்பதற்கு கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும் என்பது பெரிதாக எவரிடமும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. பெற்றோர்கள் பெரிதாக பள்ளி படிப்பினை படிக்காதது ஒரு காரணமாக இருந்த வேளை, விவசாய தொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் என்பதால் பொருளாதாரம் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. இத்தகைய சூழலில், 1999ம் வருடத்தின் ஜூலை மாதமாக.. விருதுநகர் ஜில்லா, சாத்தூர் எனும் ஊரிலிருந்து புறநகரிலுள்ள சடையம்பட்டி எனும் கிராமத்திற்கு அருகிலுள்ள எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியலில் முதலாம் ஆண்டு சேர்ந்த பிறகு கணினி அறிவியல் பேராசியர்களுடன் மூன்று வருட காலமும் ஒரு பெரிய போர்க்களத்தில் போரிடுவதினைப் போன்ற அனுபவத்தினை தந்தது.
என்.எஸ்.எஸ்(NSS) இயக்கம் என்பது கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் சமூக சேவை எனும் எண்ணங்களை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்ட அமைப்பாகும். ஒவ்வொரு வருடமும் இந்த இயக்கத்தின் சார்பில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏதேனும் ஒரு ஊருக்குச் சென்று பத்து நாட்கள் நடைபெறும் முகாமிற்கு கணினி அறிவியல் துறையில் படிக்கும் மாணவர்கள் எவருமே செல்லக்கூடாது என்பது கடுமையான விதியாக இருந்தது. கல்லூரியில் சேர்ந்த பிறகான இரண்டாவது வருடத்தில் புதிய நூற்றாண்டு தொடங்கியது. இந்த வருடத்தில் நடைபெறும் என்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொள்வதற்கு முதல் மாணவனாக பெயரினை பதிவு செய்து கணினி துறை தலைவர் கிருஷ்ணவேணி அவர்களிடம் அனுமதியை பெற்ற பிறகு கணினி அறிவியலில் படிக்கும் அனைத்து மாணவர்களிடமும் மிகப்பெரிய அளவில் சலசலப்பினை உருவாக்கி, குளத்தில் கல்லினை எறிந்து அலையடிப்பது போன்ற காலச் சூழ்நிலை உருவானது.
No comments:
Post a Comment