Sunday, March 3, 1996

கராத்தே வீரன் புரூஸ் லீ பிறந்த 1940ம் வருடத்தின் காலண்டரே 1996ம் வருடத்தின் காலண்டராக அமைந்து 1996ம் வருடம் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் என மூன்று நாடுகளில் நடந்த வில்ஸ் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடந்தபோது, கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். மார்ச் 2 அன்று தலைநகர் டெல்லியிலுள்ள பெரோஷா கோட் மைதானத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் லீக் போட்டியை பார்க்க வகுப்பை கட் அடித்துவிட்டு எந்த மாணவரும் சென்று விடக்கூடாது என்பதற்காக தலைமை ஆசிரியர் செல்வராஜ் ஒவ்வொரு வகுப்பிலும் வந்து சொல்லிவிட்டு சென்றார். அந்த அளவிற்கு 1996ம் வருடம் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய நாட்டிலுள்ள இளைஞர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. சச்சின் டெண்டுல்கர் என்ற இளம் வீரர் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடுகிறார். சச்சினுடன் களமிறங்கும் மனோஜ் பிரபாகருக்கு இலங்கை அணியுடன் விளையாடிய போட்டியே கடைசி ஒரு நாள் போட்டியாக அமைந்தது. 36 பந்துகளை எதிர்கொண்டு வெறும் ஏழு ரன்களுடன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 137 பந்தில் 137 ரன்களை விளாசிய சச்சின் டெண்டுல்கரைபோல.. இலங்கை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சனத் ஜெயசூர்யா 76 பந்தில் 79 ரன்களை விளாசி டீம் ஸ்கோர் 137 ரன்னில் கேட்சாகி பெவிலியன் திரும்பினார். இந்த ஆட்டத்தின் மூலம் ஜெயசூர்யாவின் பேட்டிங் பரபரப்பாக பேசப்பட்டது. 

ஊரிலிருந்து கழுகுமலை அரசு பள்ளியில் படிக்கும் பையன்கள் மதியத்திற்கு மேல் வகுப்பை கட் அடித்துவிட்டு எளிதாக வந்து கிரிக்கெட் போட்டிகளை பார்த்தனர். ஆனால், எனக்கு அப்படியான வாய்ப்பு அமையவில்லை. மார்ச் 3 ஞாயிறன்று எந்த போட்டிகளும் நடைபெறாத ஓய்வு நாளாக இருந்தது. 

No comments:

Post a Comment