Tuesday, July 16, 2013

பிரிட்டிஷ் ஆட்சி கால இந்தியாவில் கிராமங்களில் நிலவிய ஜமீன்தார்களின் கொடுங்கோல் ஆட்சியின் நடைமுறைகள் - 2

கட்டுரை - எனது இந்தியா(ஜூனியர் விகடன்) - எஸ்.ராமகிருஷ்ணன்

1054 ம் ஆண்டு சோழர்காலக் கல்வெட்டு,வீரபுத்திரன் என்பவனின் மனைவி சேந்தன் உமையாள் என்ற பெண் வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து
கொண்டதைக் குறிப்பிடுகிறது.அவளிடம் வரி வாங்கி வந்த அரசு அதிகாரி 'அரசு ஆணைக்கு' அவளை உட்படுத்தினான்.அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் அவள் நஞ்சு குடித்து இறந்துபோனாள்.இதற்க்குக் காரணமான அரசு அலுவலருக்கு 32 காசுகள் விளக்கு எரிக்க வழங்கும்படி தண்டனை விதிக்கப்பட்டது.

வரி வசூலிக்கும்போது,சுடுசொற்களைப் பயன்படுத்துவதை 'அரவதண்டம்' என்று சோழர் காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பிராமணர், வெள்ளாளர் வீடுகளில் அரவதண்ட முறையைப் பயன்படுத்தக் கூடாது என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.'கடமைக்காக' வெள்ளாளரை சிறைபிடிக்கக் கூடாது' என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.இதனால்,ஆதிக்க வகுப்பினரிடம் வரி வாங்குவதில் கடுமை காட்டக் கூடாது என்ற நிலைப்பாடு சோழர் காலத்தில் வழக்கில் இருந்தது புலனாகிறது.ஜமீன்தார் முறை,இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் அறிமுகமானபோதும் வட இந்தியாவில் இருந்த அளவுக்கு தென்னிந்தியாவில் ஜமீன்தார்கள் எண்ணிக்கை அதிகம் இல்லை.
அதிகாரத்திலும் ஆடம்பரத்திலும் மோசமான நடத்தையிலும் வட இந்திய
ஜமீன்தார்களே முன்னோடிகளாக இருந்தனர்.

விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் 'நாயக்கர்' என்ற படைத் தலைவர் தமிழகத்தில் நியமிக்கப்பட்டார்.விஸ்வநாத நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் பாஞ்சலங்குறிச்சி, சிவகங்கை, எட்டயபுரம் உட்பட 72 பாளையங்களை அங்கீகரி த்தார்.'பாலாமு' என்ற தெலுங்குச் சொல்லில் இருந்துதான் பாளையம் என்ற சொல் உருவானது. 'பாலாமு' என்றால் 'ராணுவ முகாம்'  எனப் பொருள்.பேரரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட்ட பாளையக்காரர்கள் நிலையான ஒரு படையை வைத்திருந்தனர். பாளையங்களில் வரி வசூல் செய்தல்,போர்க்காலங்களில் நாயக்கர்களுக்கு படை உதவியளித்தல் ஆகியவை இவர்களின் முக்கியப் பணி.தமிழகத்தில் இருந்த பாளையங்கள் அளவில் ஒன்றுபோல இல்லை.சில பாளையங்கள் சிறியதாகவும்,சில பெரியதாகவும் இருந்தன.தலைக்கோட்டை யுத்தத்தில் விஜயநகரப் பேரரசு தோற்ற பிறகு,பிஜப்பூர் சுல்தான்களின் ஆட்சி ஏற்பட்டது. அப்போதுதான் சமஸ்தானங்கள் உண்டாக்கப்பட்டன.புதிய ஸ்தானாபதிகள் உருவாகினர்.அதன் தொடர்ச்சியாகவே,ஜமீன்தார்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்
களால் உருவாக்கப்பட்டனர்.1799 -ல் தான் சென்னை மாகாணத்தில் ஜமீன்தார்
முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.ஜமீன்தார்கள் எல்லோரும் மோசமான வர்கள் என்று வரையறுக்க முடியாது.சிலர் இந்திய சுதந்திரப் போராட்டத்து க்குப் பல்வேறு விதங்களிலும் உதவி செய்திருக்கின்றனர்.கலை,சமயம் மற்றும் மொழி வளர்ச்சிக்கு உதவி இருக்கின்றனர்.ஆனால்,பொதுவாக
ஜமீன்தார்களின் ஆடம்பர வாழ்க்கை முறையையும் அவர்களின் வரி வசூல்
செய்யும் கடுமையையும் கருத்தில்கொள்ளும்போது ஜமீன்தார்களில் பலரும்
கொடுங்கோலர்களாகவே இருந்திருக்கின்றனர்.

தென்னிந்தியாவில் ஜமீன்தார்கள் படிப்பதற்கு என்றே 'நியூட்டன் கல்லூரி' ஆங்கிலேய அரசால் நிறுவப்பட்டது.அதை,லண்டன் கல்லூரி என்றும் கூறுவார்கள்.மில்டன் இதன் முதல்வராகப் பணியாற்றினார்.மதுரை மாவட்டத்தில் நிலவிய ஜமீன்தார் முறை குறித்து ஆவ்யு செய்த வர்கீஸ்
ஜெயராஜ் தமது ஆய்வு நூலில்,வரி வசூலிக்க ஜமீன்தார்கள் மேற்கொண்ட மோசமான வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளார்.அதாவது,ஐந்து தோல் பட்டைகளைக் கொண்ட சாட்டை ஒன்றால் வெறும் உடம்பில் அடிப்பது.இவ்வாறு அடிப்பதால்,அது நிரந்தரமான தழும்பை ஏற்படுத்தும்.இந்த சவுக்கடிக்கு பயந்து மக்கள் வரி செலுத்தினர்.அதுபோலவே,தங்களின் ஆட்களைக்கொண்டு வீடுகளில் கொள்ளையடிப்பது,பெண்களை தூக்கிச் செல்வது,தானியங்களை திருடுவது,எதிர்ப்போரை உயிரோடு எரித்துவிடுவது ஆகியவற்றையும் ஜமீன்தார்கள் செய்திருக்கின்றனர்.ஜமீன்தார்களுக்கு ஒவ்வொரு கோயிலிலும் முதல் மரியாதை வழங்கப்பட்டது.நில வரி பாக்கிக்காக குடியானவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஏலம் விட்டனர். ஜமீன்தாரே ஏலத்தில் பங்குகொள்வர்.அவருக்குப் பயந்து வேறு யாரும் ஏலம் கேட்க வரமாட்டாகள்.இதனால் 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை மதிப்புடைய நிலங்களை ஓரணா(ஆறு காசு) அல்லது இரண்டணாவுக்கு ஜமீன்தாரே ஏலத்தில் எடுத்துக்கொள்வார்.

திருவாங்கூர் ஆட்சிப் பகுதியில் வரி கொடதவர்கள் காதில் பூட்டுவதற் கென்றே 'இயர்லாக்' என்ற கருவியை வைத்திருந்தனர்.இதை ஒருவனது காதில் பூட்டிவிட்டால்,அதன் கணம் தாங்க முடியாமல் காதை இழுத்துத்
துன்புறுத்தும்.ஒரு கட்டத்தில் பளு தாங்காமல்,காது அறுந்துவிடும். இப்படிக் கொடுமைப்படுத்தித்தான் வரி வசூல் செய்திருக்கின்றனர். கிழக்கிந்தியக் கம்பெனியின் பல்வேறு பரிசோதனைகளுக்கு முதல் களமாக விளங்கியது
வங்காளம்.ஆகவே,நவாபுகளின் விசுவாசிகளிடம் வரி வசூல் செய்யும் பணியைத் தர விரும்பவில்லை. ஆகவே,ஜமீன்தாரி முறையை அமல்படுத் தியது.இந்த முறை வங்கத்தில் வெற்றிகரமாகச் செயல்படவே,இந்தியா முழுவதும் அது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

ஜமீன்தார்கள் தங்களை ராஜா, மகாராஜா, வதேரா, தாக்கூர்,சர்தார்,மாலிக்,சவுத்திரி எனப் பல்வேறு விதமாக அழைத்துக்கொண்டனர்.இவர்கள்,நிலவரி
வசூல்செய்வதுடன்,உள்ளூர் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கும் உரிமையைப் பெற்றிருந்தனர்.எல்லா ஜமீன்தார்களிடமும் குண்டர் படை ஒன்றும் இருந்தது. அதனால்,விவசாயிகளைப் பல்வேறு விதமாகக் கொடுமைப்படுத்தினர்.ஜமீன்தார்கள் செய்யும் கொடுமைகளை பிரிட்டிஷ் அரசு கண்டு கொள்ளவே இல்லை.ஆகவே,இந்த விசுவாசிகள், இந்தியாவை விட்டு பிரிட்டிஷ்காரர்கள் போகக் கூடாது என்று ஆதரவு இயக்கம் நடத்தினர்.
தங்களின் விசுவாசத்தைக் காட்டிக்கொள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு குடிவிருந்து நடத்தினர். இந்த விசுவாசத்துக்காக ஜமீன்தார்களுக்கு 'ராவ் பகதூர்', 'திவான் பகதூர்' ஆகிய சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

தார்பங்கா ஜமீன்தார், இந்தியாவி -லேயே மிக அதிக வருவாய் உடையவர். பர்த்வான் ஜமீன்தார், இந்தியாவிலேயே நில வரி வசூல் செய்வதில் முதல் இடம் பெற்றிருந் -தார்.தார்பங்கா,வட பீகாரில் உள்ளது.அதன் ஜமீன்தாராக இருந்த மகேஷ் தாக்கூர் தன்னை ஓர் அரசனாகவே கருதினார்.இவரது
ஆளுகையில் 4495 கிராமங்கள் இருந்தன.தார்பங்கா ஜமீன்,2400 சதுர மைல் பரப்புடையது.துக்ளக் காலத்திலயே வடக்கு பீகாரில் தொடர்ந்து குழப்பமும் சண்டையும் நீடித்தன.அதைத் தனது இரும்புக் கரம்கொண்டு துக்ளக் ஒடுக்கினார்.வடக்கு பீகாரில் மைதிலி பிராமணர்கள் அதிகம் வசித்தனர்.அவர்களைப் பயன்படுத்தி நிர்வாகம் செய்யவும்,வரிவசூலை முறையாக மேற்கொள்ளவும் அக்பர் வழிமுறை ஒன்றை உருவாக்கினார்.அதன்படி,பண்டிட் சக்கரவர்த்தி தாக்கூர் என்பவரின் இளைய மகன் மகேஷ் தாக்கூரை,இந்தப் பகுதியின் ஆட்சியா -ளராக நியமனம் செய்தார்.மகேஷ் தாக்கூரும் அவரது வம்சா வழியினரும் தார்பங்காவை ஆட்சிசெய்தனர்.இவர்கள் மதுபானி அரச குடும்பம் என்றே அழைக்கப்பட்டனர்.இவர்கள் மகாராஜா பட்டம் சூடிக்கொள்ள பிரிட்டிஷ் அரசு அனுமதித்தது.

தார்பங்கா ஜமீனில் வரி வசூல் செய்ய 7500 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.இவர்கள் கெடுபிடியாக வசூல் வேட்டை நடத்தினர்.தார்பங்கா ஜமீன்தார்கள்
மைதிலி பிராமணர்கள் என்ற காரணத்தால்,அதீத வைதீக மனப்பாங்கு கொண்டவர்களாக இருந்தனர்.இவர்களின் அனுமதி பெற்றே எவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.ஆண்டுக்கு 55 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டிக்கொண்டு இருந்த இவர்கள், வைரம்,வைடூரியம் என வாங்கிக் குவித்ததோடு மற்ற குறுநில மன்னர்க -ளுக்கு கடனுதவி செய்யுமளவு வசதியாகவும் இருந்தனர்.1685 - ல் இவர்கள் வரி வசூல் செய்த தொகை ரூ.769287.இது மிகப் பெரிய வருவாய்.

1880 - 1881 ஆண்டுகளில் வங்காளத்தில் 20 ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் வைத்திருந்த ஜமீன்தார்களின் எண்ணிக்கை 500.இவர்கள் மூலம் நில வரியாகப் பெறப்பட்ட தொகை 3,75,41,188.அதாவது நாலு மில்லியன் பவுண்ட்ஸ்.

தார்பங்கா ஜமீன்தார்களின் பிள்ளைகள் படிப்பதற்காக லண்டனுக்கு அனுப்பி
வைக்கப்பட்டனர்.மேற்கத்தியக் கல்வியும் கலாச்சாரமும் கொண்டவர்களாக
வளர்க்கப்பட்ட அவர்கள்,பிரிட்டிஷ் அரசின் தீவிர விசுவாசிகளாக செயல் பட்டனர். பின்னாட்களில் இந்திய சுதந்திர எழுச்சி எங்கே தங்களின் அதிகாரத்தைப் பறித்துவிடுமோ என்று அச்சம்கொண்டு காங்கிரஸ் கட்சியோடு இணைந்து செயல்பட ஆரம்பித்தனர்.காங்கிரஸ் மாநாடு
நடத்துவதற்கு உதவி செய்தனர்.ஜமீன்தார்களின் பொதுவான வழிமுறையாக
இருந்தது.

நேரடி வாரிசுகள் இல்லாமல் போன பல ஜமீன்தார்களின் குடும்பங்களில்
அடுத்த வாரிசு யார் என்பதற்கு மோதல்களும் வன்முறையும் நடந்தன. இங்கிலாந்தில் உள்ள ராணியிடம் நியாயம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டன.இந்த வழக்கு -களில் சில இன்னமும் நிலுவையில் இருக்கின்றன. சென்னை
மாகாணத்தை பொருத்தவரை,அதன் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு, அதாவது 20,945,456 ஏக்கர் நிலம் ஜமீன்தார்களிடம் இருந்தது.1911 - ல் இதன் மூலம் கிடைத்த வருவாய் தொகை,9,78,3,167 ரூபாய்.1946 - ல் ஜமீன்தார் முறையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக கமிட்டி அமைக்கப்பட்டது.அந்தக் கமிட்டி,1948 - ல் தனது ஆய்வறிக்கையை சமர்பித்தது.1950 - ம் ஆண்டு ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டது.ஆனாலும்,அது சார்ந்த வழக்குகள்,நிலப்பிரச்சினை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

நன்றி - எழுத்தாளர்-எஸ்.ராமகிருஸ்ணன் 
-------------------------------------------------------------------------------------------------------------------------------
வரலாறு என்பது கடந்த காலமில்லை.அது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்கும் அரூபசக்தி.வரலாற்றை புரிந்துகொள்வதும்,அதன் நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியதும் ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ள வேண்டிய செயல்களாகும். அதற்கான எத்தனிப்பாகவே "எனது இந்தியா" தொடரை எழுதி வந்தேன். வரலாறு என்பது பெருங்கடல்.அதன் ஊடகப் பயணித்து நான் கண்டறிந்த உண்மைகளில் சிலவற்றை இந்தத் தொடரின் வழியே வெளிப்படுத்த முடிந்தது சந்தோசமான அனுபவம். வரலாற்றை அறிந்து கொள்வதென்பது முடிவில்லாத தேடல்.உள்ளங்கையில் அள்ளிய கடலைப் போல என் அளவில் கற்றுக் கொண்ட வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.இன்னொரு தருணத்தில் இன்னொரு பயணத்தில் மீண்டும் நாம் வரலாற்றை பகிர்ந்து கொள்வோம் என்று கனத்த இதயத்துடன் 52 வது தொடர் வரைக்கும் எழுத்துலகில் ஒரு புதிய சகாப்தம் படைத்து வாசகர்களிடமிருந்து விடைபெற்றார்.தமிழ் உலகின் நட்சத்திர எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஜூனியர் விகடன் தொடரில் தமிழ் சமூகத்திற்கு புதியதொரு வரலாற்று தொடரை அறிமுகப் -படுத்தினார். இவரைப் போன்ற எழுத்தில் வல்லமை படைத்த ஜாம்பவானை எங்களைப் போன்ற இளைய சமுதாயத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்த விகடன் பத்திரிக்கைக்கு கோடான கோடி இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...

பிரிட்டிஷ் ஆட்சி கால இந்தியாவில் கிராமங்களில் நிலவிய ஜமீன்தார்களின் கொடுங்கோல் ஆட்சியின் நடைமுறைகள் - 1

கட்டுரை-எனது இந்தியா(ஜூனியர் விகடன்) - எஸ்.ராமகிருஷ்ணன் 


நமது கிராமத்தில் ஜமீன்தார்களின் காலத்தில் நிலவிய ரத்தம் தோய்ந்த வரலாற்று சம்பவங்களை என்னுடைய சிறு வயதில் பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.நிலத்தகராறு காரணமாக படுகொலை சம்பவங்கள் நடை பெற்றது,கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பத்து வருடங் களுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தது,வரி மற்றும் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் பலருடைய நிலங்கள் ஜமீன்தாரர்களால் ஜப்தி செய்யப்பட்டது என்று ரத்தம் தோய்ந்த, அழுகுரல் களும், கண்ணீர் சிந்தல்களும், தற்கொலைகளும் என்று கண்ணீரில் ரத்தத்தை வரவழைக்கும் சம்பவங்களை நான் நேரடியாக விவரிக்க விரும்பவில்லை. இது முடிந்து போன சம்பவங்களின் நிகழ்வுகள் அல்ல.ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெற்ற மக்களின் அழுகுரல்கள், மரண ஓலங்களின் நிஜங்கள்.ஆகையால் அப்போது நடைபெற்ற சம்பவங்களின் நிஜங்களை ஜூனியர் விகடன் கட்டுரையிலிருந்தே இங்கே சமர்ப்பிக்கிறேன்.


நிலவரி வசூல்தான்,ஒரு நாட்டின் முக்கிய வருமானம்.அதை எப்படி வசூல் செய்வது காலம் காலமாகத் தொடரும் பிரச்னை.தன் கையைக் கொண்டே தன் கண்ணைக் குத்தவைப்பது தான், பிரிட்டிஷ் அரசின் ராஜதந்திரம்.அப்படி,இந்தியாவின்   ஏழை விவசாயிகளை அடக்கி ஒடுக்கி வரி வசூல் செய்கிறேன் என்று,கடைசி சொட்டு ரத்தம் வரை உறிஞ்சி எடுப்பதற்கு பிரிட்டிஷ் வகுத்த திட்டமே   ஜமீன்தாரி முறை.தங்களின் வருவாயைப் பெருக்கிகொள்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய இந்த முறை,
1793 - ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.ஜமீன் என்ற பாரசீகச் சொல்லுக்கு,நிலம் என்று பொருள்.நில உடைமையாளர் என்ற பொருளில் தான் ஜமீன்தார் என்ற பெயர் உருவாக்கப்பட்டு  இருக்கிறது.நில வரி,குத்தகை
வரி,யுத்த காலங்களில் படைக்கு ஆள் அனுப்புவது,உள்ளூர் நீதி பரிபாலனம்
என்று செயல்பட்ட ஜமீன்தார்கள்,சுயேச்சையான குறிநில மன்னர்களைப் போல ஆணவமும் அதிகாரமுமாக நடந்துகொண்டனர்.

ஜமீன்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் வரலாற்றில் மறக்க முடியாத பாடம்.
மொகலாயர்கள் காலத்தில் தங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் நில வரிவசூல் செய்வதற்கும்,உள்ளூர் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வதற்க்கும் மான்சப்தார்கள் நியமிக்கப்பட்டனர்.உயர்குடியைச் சேர்ந்தவர்களும் ராஜ விசுவாசிகளும் மட்டுமே மான்சப்தார்களாக நியமிக்க ப்பட்டனர்.இது பெர்சிய நடைமுறை. அக்பரின் ஆட்சிக் காலத்தில் மான்சப்தார்கள் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர்.இவர்களுக்கு அரசு மானியங்களும் பட்டங்களும் உயர் மரியாதைகளும் கிடைத்தன.நிலவரி வசூல் செய்வதில் மான்சப்தார்கள் கடுமையாக நடந்து கொண்டனர்.அக்பர் காலத்தில் நிலவரி வருவாய் 363 கோடி தாம்கள் என அயினி அக்பரில் ஒரு குறிப்பு இருக்கிறது.அக்பர் காலத்தில்,மாநிலங்கள் சுபாக்கள் எனவும், மாவட்டங்கள் சர்க்கார் எனவும்,தாலுக்கா என்பது பர்கானா என்றும் பிரிக்கப்பட்டிருந்தன.1579 - ல் மொகலாயப் பேரரசு  12 சுபாக்களாக பிரிக்கபட்டி ருந்தன.அக்பர் காலத்தில் நிலம் அளக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது.

அந்த வகையில்,நிலம் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டது.பருவம் தவறாமல் பயிரிடப்படும் நிலம் பெலாஜ் என்றும்,சில பருவங்களுக்குத் தரிசாக விடப்படும் நிலம் பரவுதி எனவும்,மூன்று ஆண்டுகளு க்கும் மேலாகத் தரிசாக விடப்படும் நிலம் சச்சார் எனவும்,ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப் படமால் இருக்கும் நிலம் பஞ்சார் என்றும் அழைக்கப் பட்டன. மொத்த விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு விளைபொருள்,அரசாங்கத்துக்கு வரியாக
செலுத்தப்பட்டது.வரி வசூலிக்க,கார்கூன்கள் என்று அழைக்கப்பட்ட உள்ளூர் ஊழியர்கள் நியமிக்கப் பட்டனர்.அவர்களுக்குக் கூலியாக,தானியங்கள்
வழங்கப்பட்டன.மான்சப்தார் முறையின் தொடர்ச்சி யாகவே பிரிட்டிஷ்காரர்கள் ஜமீன்தார் முறையை நடைமுறைபடுத்தினர்.மொகலாயப் பேரரசர்
ஷா ஆலம் 1765 - ல் கம்பெனியுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி,வங்காளம்,
பீகார்,ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமை கிழக்கிந்தியக்
கம்பெனிக்கு கிடைத்தது.இதற்கு திவானி உரிமை என்று பெயர்.கம்பெனி இதைப் பயன்படுத்தி விவசாய வரியின் மூலம் தங்களின் செல்வாக்கை அதிகப்படுத்திக் கொள்ள முடிவு செய்தது.இதற்கு முன்னோடியாக கிழக்கிந்தியக் கம்பெனி 1767 - ல் நில அளவாய்வுத் துறையை உருவாக்கி, மொத்த நிலப்பரப்பையும் அளந்தது.ஆகவே,அவர்களால் எவ்வளவு வரி விதிப்பது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட முடிந்தது.

வாரன் ஹேஸ்டிங்ஸ் 1772 - ல் ஏலத்தில் விடும் முறையை அறிமுகம் செய்தார்.அதன்படி வரி வசூலிக்கும் உரிமையை விரும்பியவர்கள் ஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம்.உரிய வரியை வசூல் செய்து அரசுக்கு செலுத்திவிட்டு,மீதமுள்ள பணத்தை தாங்களே வைத்துக் கொள்ளலாம் என்பதே இந்த முறை. இதனால், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வரி முழுமையாகக் கிடைத்தது. ஆனால், ஏலமிடுவதிலும்,வசூல் செய்வதிலும் நிறைய முறைகேடுகள் நடந்தன.ஆகவே,இந்தத் திட்டம் தோல்வி அடைந்தது.(இன்று இதே முறையின் சற்று உருமாறிய வடிவமே,தமிழகத்தின் மாநகராட்சி மற்றும் பல்வேறு அரசுக் குத்தகைகளில் நடைமுறையில் இருக்கிறது எனபது வரலாற்று முரண்.)

அதன் பிறகு,கம்பெனி ஏஜென்ட்கள் என நியமிக்கப் பட்டவர்கள் வரி வசூல் செய்தனர்.இவர்களுக்கு நிலத்தின் வகைகள் மற்றும் குத்தகை முறை பற்றி
எதுவும் தெரியவில்லை.எனவே,ஏஜெண்டுகளாலும் நிலவரியை முழுமையாக வசூலிக்க முடியவில் லை.இந்தியாவில்,நிலம் யாருக்கு சொந்தம் என்பதைத் தீர்மானிக்க எழுத்துப்பூர்வமான சான்றுகள் மிகக் குறைவு.ஆகவே,இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது. இதனால்,வரி வசூல் செய்வதில் நிரந்தர முறை ஒன்றை அறிமுகம் செய்ய பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது.1793 - ல் காரன்வாலிஸ் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார்.அது நிரந்தரமாக வரி வசூலிக்கும் உரிமை தரும் 'பெர்மனெண்ட் செட்டில்மெண்ட்' திட்டம்.அதன்படி,முந்தைய காலங்களில் நிலவரி வசூலிக்கும் உரிமை மட்டுமே பெற்றிருந்தவர்கள்,அதே நிலத்தின் உரிமையாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.அவர்கள்,ஆண்டுதோறும் கம்பெனிக்குத் செலுத்த வேண்டிய வரி,நிலையாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தத் தொகைக்குப் பெயர் 'பெஷ்குஷ்'.

இப்படி நியமிக்கப்பட்டவர்கள் விவசாயிகளிடம் தங்கள் இஷ்டம்போல பணமாகவோ அல்லது பொருளாகவோ வசூலித்துக் கொள்ளலாம்.இவர்கள் 'ஜமீன்தார்', 'மிட்டாதார்',தாலுக்தார்' என்ற பெயர்களில் அழைக்க -ப்பட்டனர்.ஒருவேளை,ஒரு ஜமீன்தாரால் தனது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் நிலவரி வசூலிக்க முடியாமல் போய்விட்டால்,அந்த உரிமை கம்பெனியால் பிடுங்கப்படும்.பொதுவாக,ஜமீன்தார்கள் வாரிசு முறையில் தேர்வு செய்யப் படுவதால் ஜமீன் உரிமை வேறு ஒருவருக்குக் கிடைப்பது எளிதானது அல்ல.இந்த நடைமுறை காரணமாக,ஜமீன்தார்கள் என்ற புதிய நிலபிரபுக்கள் இந்தியாவெங்கும் உருவாக ஆரம்பித்தனர்.இவர்களில் சிலர் ஒருகாலத்தில் மன்னர்களாக இருந்து தங்களின் உரிமையை இழந்தவர்கள் மற்றும் குரு நிலமன்னர்களின் வாரிசுகள்.ஜமீன்தார் முறையால் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இரண்டு விதங்களில் லாபம் கிடைத்தது.ஒன்று,தாங்களே நேரடியாக விவசாயிக -ளிடமிருந்து வரி வசூல் செய்யும் சிக்கலில் இருந்து விடுபடுவது. இரண்டாவது தங்களுக்கு விசுவாசிகளாக ஜமீன்தார்கள் என்ற ஓர் இனத்தையே உருவாக்கிக்கொள்வது.

பண்டைய இந்தியாவில் கிராமத்தின் நிலவரி மூலம் கிடைக்கும் வருவாய், அந்தக் கிராமத்தின் உள்ளூர் கட்டுமானம் மற்றும் விவசாயம் சார்ந்த
வளர்ச்சிக்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. ஆனால்,ஜமீன்தார் முறை அறிமுகமான பிறகு உழைப்பவனிடமிருந்து நிலம் பறிக்கப்ப ட்டதுடன், நிலவரி முழுவதும் ஜமீன்தாரின் தனிச் சொத்தாக மாறத்தொடங்கியது. ஏழை விவசாயிகள் நிலவரி செலுத்த முடியமால் தங்கள் நிலங்களை பறிகொடுத்து கூலிகளாக  மாறினார்.சிலர் குத்தகைதாரர்களாக மாறி,அதே நிலத்தில் விவசாயம் செய்தனர்.குண்டர்களைக் கொண்டு கெடுபிடியாக வரி வசூல் செய்த ஜமீன்தார்கள்,அதில் ஒரு பகுதியை தாங்கள் வைத்துக்கொண்டு மீதியை மட்டுமே அரசுக்கு செலுத்தினர்.

இதனால்,ஜமீன்தார்கள் செல்வச் செழிப்புடன் சர்வதிகாரம் படைத்தவர்களாக வாழ்ந்தனர்.சென்னை மாகாணத்தின் ஆளுநராக 1820 - ல் பொறுப்பேற்ற சர் தாமஸ் மன்றோ, 'ரயத்வாரி' முறையை அறிமுகப்படுத்தினார். இதன்படி, வரியானது ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் நேரடியாக  வசூலிக்கப்பட்டது.'ரயத்' என்ற சொல்லுக்கு 'உழவர்' என்று பொருள்.இந்த முறையில் விவசாயிகளிடமிருந்து வரி வசூல் செய்து அரசுக்கு செலுத்த இடைத்தரகர்கள் கிடையாது.ஆனால்,விதிக்கப்பட்ட வரி மிகவும்
அதிகமாக இருந்தது.ரயத்வாரி முறையில் நிலச் சொந்தக்காரர்களுக்கு 'மிராசுதார்' என்று பெயர்.

மிராசுதாரர்கள் பெரும்பகுதி நிலத்தைக் கட்டுக் குத்தகைக்கோ அல்லது வாரக்குத்தகைக்கோ விவசாயிகளிடம் விடுவார்கள்.அந்த விவசாயிகளுக்கு நிலத்தில் எந்த உரிமையும் கிடையாது.நிலச் சொந்தக் காரர்கள் இப்படிப்பட்ட சமயத்தில் விவசாயிகளை வெளியேற்றி,வேறு விவசாயிக்கு அந்த நிலத்தைக் கொடுக்கலாம்.இதனால்,விளைபொருட்களில் 80
சதவிகிதத்தைக் குத்தகையாக மிராசுதாரார்களுக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த ரயத்வாரி முறையில் நிலங்கள் சில தனிநபர்கள் கையில் குவியத் தொடங்கின.

இதுபோலவே,'மகால்வாரி' என்றொரு வரிவிதிப்பு முறையை பஞ்சாபில் அமல்படுத்தினார்.இந்த முறையில் குத்தகை நிலங்களின் வரியை வசூல் செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டியது,உள்ளூர் நிர்வாகத்தின் கடமை.இதில் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப வரி விதிக்கப்பட்டது.பிரிட்டிஷாரின்
இத்தகைய கொடுமையான வரிவிதிப்பு முறைகள்,பாரம்பரிய இந்திய விவசாயத்தை கொஞ்சம் கொஞ்சம் அமுக்கிக் கொள்ளத் தொடங்கின.

பழந்தமிழகத்தில் வரி வசூல் செய்வது மிகவும் கெடுபிடியாக நடைபெற்றுள்ளது என்பதை விவரிக்கும் வரலாற்று ஆய்வாளர் ஆ.சிவசுப்பிர மணியன்,தனது 'தமிழ்ச் சமூகத்தில் வரி' என்ற கட்டுரையில்,பல அரிய தகவல்களைக் கொடுத்துள்ளார்.சோழர் காலக் கல்வெட்டுகள் சிலவற்றில் 'மண் களம் உடைத்து' வெண்கலம் எடுத்து' என்ற தொடர் இடம்பெற்று இருக்கிறது. இந்தத் தொடர் சோழப் பேரரசின் அலுவலர்கள் வரி வாங்குவதில் எவ்வளவு கடுமையாக நடந்து கொண்டனர் என்பதைக் காட்டுகிறது.வரி செலுத்த முடியாத ஒருவன் வீட்டுக்குள் நுழைந்து,அவனது வீட்டிலுள்ள மதிப்பு வாய்ந்த பொருளான வெண்கலப் பாத்திரங்களைப் பறிமுதல் செய்வதை 'வெண்கலம் எடுத்து' என்ற சொல் குறிக்கிறது. வெண்கலப் பாத்திரங்கள் எதுவும் இன்றி வெறும் மண் பாத்திரங்கள் மட்டுமே இருந்தால்,அதைப் பறிமுதல் செய்வதால் பயன் இல்லை. இருந்தாலும், அவனுக்குத் தண்டனை வழங்கும் வழிமுறையாக அந்த மண் பாத்திரங்களை உடைத்து நொறுக்குவதை 'மண்கலம் உடைத்து' என்ற சொல் உணர்த்துகிறது. வரி செலுத்த இயலாதவனின் உலோகப் பாத்திரங்களைப் பறிமுதல் செய்தும் மண் பாத்திரங்களை உடைத்தும் அவன் சமைத்து உன்ன முடியாது செய்வது பொற்காலச் சோழர்களின் வரிவாங்கும் வழிமுறைகளில் ஒன்றாக இருந்துள்ளது.

Monday, May 27, 2013

நமது கிராமத்து பாரம்பரியத்தின் வரலாற்றுச் சுவடுகளை தேடி செல்கையில் - 1

நமது கிராமத்தின் வரலாற்றை பின்னோக்கி பார்த்தோமானால் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
நான் சிறுவயதாக இருக்கும்போதும், கோவைக்கு
வேலைக்கு சென்றபிறகு ஊருக்கு வரும்பொழுது சில பெரியவர்களிடம் கலந்து பழகி பல விசயங் களை தெரிந்துகொண்டேன்.சுமார் 160 வருடங்களு -க்கு முன்னர், அதாவது 1860 ம் ஆண்டுகளில் தோரயமாக, நமது கிராமத்தின் கண்மாயை உருவாக்கி இருக்கலாம் என்ற கணிப்பை சொல்ல முடியும். ஆனால் 1860 க்கும் 1890 க்கும் இடைப்பட்ட வருடங்களில் கண்மாயை உருவாக்கும் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. கண்மாயை உருவாக்கும் முன்னர் கள்ளிச்செடிகளும்,முட்புதர்களும், குண்டும், குழியும், மேடுமாக இருந்திருக்கிறது. இப்போதுள்ள உருவாக்கப்பட்ட குளத்தின் மீது ஒற்றையடி நடைபாதைகள் இருந்திருக்கிறது.ஊரிலுள்ள பெரியவர்கள் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து,கலந்தாலோசித்து இடத்தை தேர்வு செய்திருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில், அதாவது 1870 ம் ஆண்டுகளில் கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 200 பேர்தான்.வீட்டிற்கு ஒரு ஆள்வீதம் கண்மாயை உருவாக் -கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இப்புவியில் நான் 
வந்துசெல்வது ஒருமுறைதான் 
எனவே நான் இங்கே 
ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும் 
அதனை உடனே நிறைவேற்ற வேண்டும்!!
தள்ளி வைப்பதற்கோ 
அல்லது தவிர்ப்பதற்கோ இடமில்லை 
ஏனெனில் மீண்டும் ஒருமுறை 
நான் இப்புவியில் வரப்போவதில்லை!!

--கர்னல் ஜெ.பென்னிகுய்க் R.E.,C.S.I

பென்னிகுயிக் 
அந்த காலகட்டத்தில் நமது இந்திய தேசம் இங்கிலாந்து நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், பொதுப் பணித்துறையை சேர்ந்த வெள்ளைக்கார துரைமார் -களிடம், விவசாய நீர்பாசனத்திற்காக, கண்மாயை கட்டுவதற்கு அனுமதி பெறவேண்டும்.இந்த மாதிரி பணிகளுக்கெல்லாம் பிரிட்டீஷ் அரசாங்கம் முன்னு ரிமை தருவார்களாம்.மிகப்பெரிய நிதி உதவியும் அளிப்பார்களாம் நீர்பாசனத்துறையை சேர்ந்த அதிகாரி கள், கிராமத்து மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தை ஆய்வு செய்து ஒப்புதல் அளிப்பார்களாம். எப்படி கண்மாயை அமைக்க வேண்டும் என்ற மாதிரி வரை படம், செயல்முறை விளக்கங்களை கிராமத்து பெரியவர் களுக்கு நன்றாக விளக்கி சொல்வார்களாம்.வெள்ளைக்கார துரைமார்களுடன் வரும் பிராமண வகுப்பை சேர்ந்த ஆங்கிலம் கற்றவர்கள், மொழிமாற்றம் செய்து,கிராமத்து மக்களுக்கு விளக்கி சொல்வார்கள். கண்மாயை தூர்வாரிய பிறகு,வீட்டிற்கு ஒருவர் வீதம் கண்மாயை சுற்றிலும் மரக்கன்றுகளை நடவேண்டுமாம்.அப்படி நடப்பட்ட மரங்கள்தான் இப்பொழுது குளத்தை சுற்றிலும் பிரமாண்டமாக வளர்ந்து காட்சிதரும் அரச மரம், புளிய மரங்கள், ஆலமரங்கள் போன்றவை. மேலக்காட்டுக்கு வழியாக செல்லும்போது, கருப்பசாமி கோயிலுக்கு அருகில் அந்த பிராமாண்டமான மரங்களின் அழகையும், குளுமையையும், வசந்தத்தையும் உணரமுடியும்.

முல்லைப்பெரியாறு அணை
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பென்னிகுயிக் என்ற வெள்ளைக்கார துரை (கலெக்டர்) யின் முயற்சியி -னால்தான் 1890 ம் ஆண்டுகளில் தேனீ, கம்பம் போன்ற பிற மாவட்ட விவசாய நீர்பாசனத்திற்க் -காக முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உருவாக்கப்பட்டது. பென்னிகுயிக் தன்னுடைய சொந்த சொத்துக்களையும், விலையுயர்ந்த தங்க நகைகளையும் விற்று,மேலும் மக்களிடம் கொஞ்சம் நிதி வசூல் செய்து முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கினார். தேசம் எல்லைகளை கடந்து நமது நாட்டு கிராமத்து மக்களின் நலனைப் பற்றியும், எதிர்கால வளர்ச்சியை பற்றியும் சிந்தித்து தனது கனவை நனவாக்கினார். 1895 ம் ஆண்டில் அணை பயன்பாட்டுக்கு வந்தது. 999 வருடத்திற்கு தமிழக மாநிலத்திற்கு சாசன உரிமையை பெற்றுக் கொடுத்தார். அதனால் தேனீ மாவட்ட மக்களின் பெரும்பாலான தாய்மார்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, பென்னிகுயிக் என்ற பெயரை சூட்டி, அந்த மகத்தான மனிதனுக்கு பெருமை சேர்த்தார்கள்.

இந்த அணைக்கட்டு பணிக்கு தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் விவசாயிகள், தொழிலாளிகள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். நமது கிராமத்திலிருந்து சுமார் பத்து பேர்கள் வேலைக்கு சென்றதாக என்னுடைய தாய் வழி தாத்தா, காலம் சென்ற மாரியப்பன் அவர்கள்
என்னிடம் கூறினார். என்னுடைய தந்தை வழி தாத்தா வரதராஜு அவர்களும், சுமார் ஒரு வருட
காலம் பணியாற்றியதாக என் தந்தையார் என்னிடம் அடிக்கடி சொல்லுவார். சுமார் பத்து வருடங்களுக்கு மேல் அணைக்கட்டு பணி நடந்திருக்கிறது. 1900 ம் ஆண்டுகளில் எல்லாம் தற்சமயம் உள்ளது போன்ற சாலை வசதிகளெல்லாம் கிடையாது. மண்பாதை வழியில்தான் நடந்து செல்ல வேண்டுமாம். மாட்டு வண்டி, வில்லுவண்டிகளில்தான் கழுகுமலை, குருவிகுளம், கோவில்பட்டி, நடுவப்பட்டி, மைப்பாரை, முக்கூட்டுமலை போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டுமாம். இளைய வயதினர்கள் முதியவர்களுக்கும், பெரியோர்களுக்கும் மிகுந்த மரியாதை அளித்த காலகட்டங்கள்!

நமது கிராமத்தின் காளியம்மன்  கோயில், பிள்ளை யார் கோயில்,கருப்பசாமி, அய்யனார் கோயில் களெல்லாம் எப்போது கட்டப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது குறித்த விஷயங்கள் ஒன்றும் கோவில் சுவரிலோ, வேறு எங்குமே காணப்படவில்லை. பெரியவர்கள் சில பேர் என்னிடம் ஒரு யூகமாக சொன்னது- கோவில் கள் உருவாக்கப்பட்டு சுமார் 150 வருடங்களுக்கு மேல் இருக்குமாம். வெறும் மண்சுவரில் கட்டிடம் எழுப்பி, பனை ஓலை,கூரை வேயப்பட்டு தெய்வத்தின் சிலையை செய்து பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். காளியம்மன் கோவில் வடக்கு நோக்கியும், பிள்ளையார் கோவில் தெற்கு நோக்கியும், இந்த இரு கோவில்களையும் பார்த்தவாறு கருப்பசாமி, அய்யனார், முத்தாலம்மன் சிலைகளை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எனக்கு நன்றாக விவரம் தெரிந்த 1990 ம் ஆண்டுகளில் -தான் காளியம்மன் கோவில் புதுபிக்கப்பட்டு, கற்சுவரால் கட்டப்பட்டது. சமீப ஆண்டுகளிதான் பிள்ளையார் கோயிலும் புதுப்பிக்கப்பட்டது.

பிள்ளையார் கோயில் 
பிள்ளையார் கோயிலுக்கு முன்னாள் உள்ள நாழிக்கிணறு எனக்கு மிகவும் பரவசம் ஊட்டக்கூடியது. நான் சிறுவயதாக இருக்கும் போது ஊரிலுள்ள தாய்மார்கள், பெண்கள், ஒரு வாளியில் கயிறுகட்டி தண்ணீர் சேந்துவார்கள்.
அவர்கள் தண்ணீர் இறைப்பதை பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாக இருக்கும். கலகல வென பேசிக்கொண்டு தண்ணீரை இறைக்கும்போது,
கோயிலுக்கு அருகில் சிறுவர்கள் பல பேர் விளையாடிக் கொண்டு இருப்போம். தண்ணீர் தாகம் எடுக்கும்போது அவர்களிடம் கேட்டு வாங்கி குடிப்போம். இன்று அந்த கிணறு மயான அமைதியாக காட்சிதருகிறது. அந்த கிணற்றின் பக்கம் சென்றாலே, அதிலுள்ள தண்ணீரும், கற்களும் பல அற்புதமான கதைகளை சொல்லும். ஏன்? என்னை புறம் தள்ளிவிட்டீர்கள் என்று கேட்பதுபோல் இருக்கும். ஒரு காலத்தில் நான் உங்களை அன்போடு அரவணைத்துக் கொண்டு, தாகம் தீர்க்கவும், இன்ன பிற தேவைகளுக்காகவும், உங்களின் இரத்தத்தோடும், ஆன்மாவோடும் வாழ்ந்தேன். இன்று யாரும் ஆதரிப்பாரின்றி அனாதையாக இருக்கிறேன் என்று கண்ணீர்விட்டு அழுவதுபோல் காட்சி தரும். நானும் சில சமயங்களில் பிள்ளையார் கோயிலுக்கு செல்லும்போதெல் -லாம், அந்த கிணற்றின் முன்னாள் சுமார் பதினைந்து நிமிடம் உட்கார்ந்து, சிறுவயது நினைவுகளை அசைபோடுவேன். கண்ணீர்த்துளிகள் என் நெஞ்சை நனைக்கும். பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில் குடிகொண்டிருந்த காலம் சென்ற பெரிய பூசாரி அய்யாவின் நினைவுகளும், இதயத்தில் மின் அதிர்வுகளை ஏற்படுத்தும்.

நமது கிராமத்தின் வரலாறு முன்னூறு (300) வருடங்களுக்கு முற்பட்டதாக
இருக்கலாம். ஊரிலுள்ள ஆசாரிகள், சலவைத் தொழிலாளர்கள், முடி
திருத்தம் செய்யும் தொழிலாளிகள், துப்புரவு பணியாளர்களெல்லாம் வெளியூர்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களாக இருக்கலாம். 1953 ம் ஆண்டு வரைக்கும் மொழி வாரி மாநிலங்களாக  பிரிக்கப்படாத தேசம்தான்
நமது பாரத தேசம். தெலுங்கு மாகாணம் பிரிக்கப்படவேண்டும் என்று பொட்டி ஸ்ரீ.ராமுலு அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டார்.
ஆந்திர மாகாணத்தில் பெரும் கலவரங்கள் மூண்டது. இதனையடுத்து
பண்டித ஜவஹர்லால் நேரு, இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.
1890 ம் ஆண்டுகளில் நமது கிராமம் கர்நாடகவின் ஆற்காடு நவாபு ஆட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு இருந்திருக்கிறது. அதாவது மதராசப்பட்டிணம்   சமஸ்தானத்திற்குட்பட்ட ஆற்காடு நவாபு ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.

 சுவடுகள் தொடரும்...

Saturday, January 26, 2013

குடியரசு தின வாழ்த்துக்கள்..

2013ம் வருடம்.. சுதந்திர இந்தியாவின் அறுபத்து நான்காம் ஆண்டு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.




இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் ராணுவ வீரர்களின் குடியரசு தின அணிவகுப்பு புகைப்படம் பிரமிப்பாக உள்ளது.

Sunday, January 13, 2013

ரெங்கசாமி நாயக்கர் அவர்களுடன்..

நமது கிராமத்திலேயே வயதில் முதியவர். தற்போது 95 வயது ஆகிறது. நான்கு பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகள் என ஏழு குழந்தைகளை பெற்றெடுத்தவர். தன்னுடைய இளமைப் பிராயத்தில் சுதந்திரப் போராட்ட காலகட்டங்களை நினைவு கூர்ந்தபோது, தற்போதைய தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரிலுள்ள ரயில்வே ஸ்டேசனுக்கு வருகை தந்த மகாத்மா காந்தி அவர்களை சந்தித்து ஆசிகளை பெற்ற நிகழ்வினை சொன்னபோது ஜெய்ஸ்ரீராம் என மந்திரம் சொல்லி அத்தகைய வியப்பினை மனதிற்குள் நிறுத்தியது. குறைவான நேரமே பேசினாலும் தாத்தா ரெங்கசாமி அவர்களுடைய பேச்சு காலத்திற்கும் நிலைத்து நிற்கும் வல்லமை பெற்றது. 


மகன் சீனிவாசன் என்பவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்று தற்போது தமிழ்நாட்டின் தலைநகரமான மெட்ராஸில் வசிக்கிறார். இலங்கை நாட்டிற்கு இந்திய ராணுவம் அனுப்பிய IPKF எனும் அமைதிப்படை சென்று வந்த பிறகு விடுதலைப் புலிகளின் படைகள் நிலத்தில் புதைத்த கன்னி வெடிகளை எடுக்கும் ராணுவப் பிரிவில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த விசயத்தை சீனிவாசன் அவர்களே என்னிடம் பேசினார். 

மகன் ஜெயராம் என்பவர், ஓசூரிலுள்ள லட்சுமி மில்லிற்கு பணிக்குச் சென்று முப்பது ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஒய்வு பெற்று தற்போது ஒசூரிலேயே குடும்பத்துடன் வசிக்கிறார். 

குறிப்பு: இரண்டு தினங்கள் முன்பு BADA OS எனும் செயலியில் இயங்கும் ஸ்மார்ட் போன் மொபைலில் ரெங்கசாமி நாயக்கர் அவர்கள் பேசியதை பதிவு செய்தது.

Saturday, January 12, 2013

நேர்காணல்.. பேராசிரியர் ராஜேஸ்வரி அவர்கள்..

கோவை நகரின் விமான நிலையம் அருகிலுள்ள புகழ்பெற்ற பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையில் இருபத்தி நான்கு(24) ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர் பேராசிரியர் ராஜேஸ்வரி அவர்கள். 2005ம் ஆண்டு நவம்பரில் பேராசிரியர் ராஜேஸ்வரி அவர்கள் நடத்தும் மேன்ஷனில் குடிவந்த பிறகு இலக்கியம், வரலாறு, சமூகம், சினிமா குறித்து நிறைய பேசி விவாதம் செய்தமையால் வலைப்பூவிற்கு கிராமங்களின் முன்னேற்றம் குறித்து பேச வேண்டும் என கேட்டபோது பத்து நிமிடங்கள் அருமையான நேர்காணலை பேசினார். 2012ம் ஆண்டு டிசம்பரில் பேராசிரியரின் இல்லத்தில் நேர்காணல் செய்தது. நான் பிறந்த ஊரில் எனது பக்கத்து வீட்டு பெரியப்பா நாராயணசாமி அவர்கள்.. பூ.சா.கோ கல்லூரியின் முதல்வராக பணிபுரியும் காலகட்டத்தில் ராஜேஸ்வரி அவர்கள் பேராசிரியராக பணியில் இணைந்த காலகட்டம் என்பதால்.. பிரபஞ்சத்தின் சக்தி இந்த நேர்காணலில் ஒரு பூமத்திய ரேகையில் இணைத்தது.  


2013ம் ஆண்டு பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முனைவர் பட்டம் வாங்கியிருந்தார். ஆங்கிலத்தில் சிறப்பாக பேசும் பேராசிரியர் அவர்கள்.. தமிழில் சிறப்பாக பேசியது பிரமிக்கச் செய்தது. நேர்காணல் செய்யும்போது இலக்கியத் தமிழில் பேசுவதை முதல் முறையாக கேட்டது. துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணா அவதாரத்தின் தொடர்ச்சியாக திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து உதயமாகும் கல்கி அவதாரம் குறித்து ராமாயணம், மஹாபாரதம் கதைகளுடன் நிறைய பேசியதுண்டு. 

மதுபானம் எனும் அரக்கன்.. சமூகத்தின் இளைய தலைமுறைகளை கலாச்சாரம், பண்பாட்டு தளத்தில் அழித்துக் கொண்டு வரும் கொடுமையான சூழ்நிலை.. இவற்றினை வேருடன் களைந்தெறியும் அக்கினி வேள்வி..

பிறந்த மண்ணை இளைய தலைமுறையினர் அதிகம் விரும்ப வேண்டும் எனும் லட்சியமுடன் வலைப்பூ உருவாக்கம் என்ற இரண்டு முக்கியமான கேள்விகளை ராஜேஸ்வரி அவர்களிடம் கேட்டபோது.. அற்புதமான பதிலைச் சொல்லி பிரமிக்கச் செய்தார்.