1997ம் வருடம், பசுவந்தனை சாலையில் உள்ள ...மேல்நிலைப் பள்ளியில் காலை வகுப்புகள் முடிந்து மதியத்திற்கு மேலாக விடுமுறை விடுகையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பாடங்களை படிப்பதற்கு எட்டையாபுரம் சாலையில் தபால் அலுவலகம் அருகிலுள்ள வணிக வரித்துறை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீவரசக்தி விநாயகர் கோவிலில் அமர்ந்து தமிழ், அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை படிப்பது உண்டு. அலுவலக வளாகம் பெரிய பெரிய மரங்களுடன் ரம்மியமாக இயற்கையான சூழலுடன் அமைந்த காரணத்தால் ஐந்து, ஆறு பையன்கள் எப்போதும் பள்ளி பாடங்களை படித்துக் கொண்டு இருப்பதை பார்க்க முடியும். எனது அன்புச் சகோதரி எட்டையாபுரம் சாலையில் உள்ள கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்து என்னுடன் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். வார விடுமுறை தினமாக செண்பகவள்ளி அம்மன் கோவிலுக்கு வரும் சகோதரியிடம் நான் கொடுக்கும் பாடங்கள் சம்பந்தமான வினாக்கள் காலாண்டு, அரையாண்டு பரீட்சைகளில் எண்பது(80%) சதவிகிதம் வந்துவிடும் என்பதால், ஊருக்கு வருகையில் இதனை ஆச்சரியமுடன் பேசுவார். ஸ்ரீவரசக்தி விநாயகர் கோவிலில் படித்த காலங்களுடன் ஒப்பிடுகையில், பொதுத்தேர்வு எழுதிய பின்பு மதிப்பெண்களை பார்த்தபோது நல்ல பலன்கள் கிடைக்கப் பெற்றதை கண்டு வியப்பாக இருந்தது.
நானூறு மதிப்பெண்களுக்கு பதினோரு மதிப்பெண்கள் குறைவாகவும், ஐநூறு மதிப்பெண்களுக்கு நூற்றி பதினொன்று(111) மதிப்பெண்கள் குறைவாகவும் இருந்தாலும், அதிர்ஷ்டமான மதிப்பெண்களாக இருப்பதைக் கண்டு வரசக்தி விநாயகருக்கு மனப்பூர்வமான நன்றிகளைச் சொன்னது. 1995ம் வருடம் தொடங்கி புதிய நூற்றாண்டு பிறந்த 2000ம் வருடங்கள் வரையிலான காலகட்டங்களில் ஊரிலுள்ள மக்கள் கரிசல் காட்டு மண்ணில் வேளாண்மை செய்வதற்கு உண்டான பருவமழை சரியாக பெய்யாமல் பொய்த்துப்போன சூழலில் பெரும்பாலான குடும்பங்களில் வறுமை வந்து தலைகாட்டியது. வெளிநாடுகளில் வேலை செய்வபர், இந்திய நாட்டின் ராணுவத்தில் பணிபுரியும் குடும்பங்களைச் சேர்ந்த வீடுகளில் ஓரளவு இத்தகைய விவசாய இழப்புகளை ஈடுகட்டி வறுமை இல்லாமல் வாழும் சூழ்நிலை அமைந்தது.
எனது ஊரிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு திசையிலுள்ள கழுகுமலை ஊரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997ம் வருடம், ஜூன் மாதம் பதினொன்றாம் வகுப்பில் கணிதப் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க வந்த பின்பு அன்புச் சகோதரி கழுகுமலை ஊரில் சங்கரன்கோவில் ஊருக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ள கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பில் சேர்ந்திருந்தார். இலக்கியம், அரசியல், விளையாட்டு, சினிமா, சமூகம் குறித்தான விசயங்களை நிறைய பேசியது. சகோதரி ராஜேஸ்வரியின் அப்பா கிருஷ்ணசாமி இந்திய ராணுவத்தில் காஷ்மீரின் லடாக் பகுதியில் பணிபுரிகையில் 1983ம் வருடம், மே 12 நாளில் பிறந்ததை சகோதரியின் அம்மா சொல்லி அறிந்தது.
புகைப்படம்: எட்டையாபுரம் சாலையிலுள்ள வணிக வரித்துறை அலுவலக வளாகத்திற்கு 2021ம் வருடம், மார்ச் மாதம் முதல் தினமாக சென்றபோது ஸ்ரீவரசக்தி விநாயகரை தரிசனம் செய்த பின்பு மொபைலில் எடுத்த புகைப்படம்.